Published:Updated:

`முகாம்ல இருந்து திரும்பிப் போகக்கூட இனி இடமில்ல!' புத்துமலை நிலச்சரிவின் சோகம்

புத்துமலை
புத்துமலை

புத்துமலைப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையே நிர்மூலமாக்கியிருக்கிறது இந்த நிலச்சரிவு சம்பவம்.

கேரள மாநிலத்தின் பெரும்பகுதியை மழை ஒட்டுமொத்தமாக திருப்பிப் போட்டிருக்கிறது. கடந்த வருடம் இதே மாதம் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் அம்மாநிலம் பலத்த சேதத்தை சந்தித்தது. இந்த வருடமும் அது தொடர்கிறது. அதுவும் வெள்ளம் ஏற்படுத்திய சேதங்களை விட நிலச்சரிவு அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நிலச்சரிவு நடந்த இடம்
நிலச்சரிவு நடந்த இடம்

கடந்த இரண்டு வாரங்களாக மழை நிற்காமல் பெய்திருக்கிறது. புத்துமலைப் பகுதியின் மேற்பகுதியில் பச்சக்காடு என்கிற பகுதியும், அதற்குக் கீழ்ப் பகுதியில் பாடி என்கிற பகுதியும் இருக்கின்றன. பச்சக்காடு பகுதியில் இருக்கிற மக்கள் சிறுகச் சிறுக சேமித்து அந்தப் பகுதியில் நிலம் வாங்கி வீடு கட்டியிருக்கிறார்கள். பலர் பல நாடுகளாக வெளிநாடுகளில் பணிசெய்து அதன் மூலமாக கிடைத்த வருமானத்தில் வீடு கட்டியிருக்கிறார்கள். பாடி பகுதியில் இருப்பவர்கள் தேயிலை எஸ்டேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள். தமிழர்கள், பெங்காலிகள், மலையாளிகள் எனப் பல தரப்பினரும் வசிக்கிற பகுதி.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு முதல் நிலச்சரிவு நடந்திருக்கிறது. அதில் பச்சக்காடு பகுதியில் இருக்கிற ஒரு வீடு அடித்து வரபட்டிருகிறது. புதன்கிழமை காலையில்தான் நிலச்சரிவு மற்றவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. முதல் நிலச்சரிவு சம்பவத்தை அடுத்து அங்கிருந்த மக்களை முகாமிற்கு மாற்ற வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.

புத்துமலை நிலச்சரிவு
புத்துமலை நிலச்சரிவு

வியாழக்கிழமை காலையில் இருந்து மழை தீவிரமடைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் வீடுகளைவிட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பகல் 3 மணி அளவில் பாடி பகுதியில் இருந்த பாலம் முற்றிலும் உடைந்துபோய் விட்டது. அதில் 30 பேருக்கும் அதிகமானவர்கள் வீடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்கள். அவர்களை வனத்துறை அதிகாரிகள் செயற்கையான பாலம் ஒன்றை அமைத்து உடனடியாக மீட்டு வந்திருக்கிறார்கள்.

நிலச்சரிவிலிருந்து தப்பித்த சுப்ரமணி என்பவர் மேப்பாடி நிவாரண முகாமில் இருந்தார். அவரைச் சந்தித்துப் பேசினோம். எனக்கு சொந்த ஊரு சேலம். 1983-ம் வருடம் நாங்க இங்க வந்தோம். வியாழக்கிழமை 3 மணி இருக்கும், நாங்க ஒரு 30 பேர் இருந்தோம், குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் எல்லாரும் ஒரே இடத்தில இருந்தோம். மழை நிற்கவே இல்லை. ஊரில் இருந்த பாலமும் தண்ணீல அடிச்சிட்டு போய்டுச்சு. வீட்டுகுள்ளேயும் இருக்க முடியாது, எல்லாரையும் காப்பாற்றி பாதுகாப்பா கொண்டு போய்ச் சேர்க்கணும். 30 பேரும் மழைல தொப்பலா நனஞ்சிட்டோம். அந்த நேரம் அங்க வந்த வனத்துறை அதிகாரிகள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து தற்காலிகப் பாலம் ஒண்ணு கட்டி எங்க எல்லாரையும் தேயிலைக் காட்டு வழியா கூட்டிட்டுப் போனாங்க.

முகாமில் மக்கள்
முகாமில் மக்கள்

4:20 மணி பயங்கர சத்தம். என்ன நடக்குதுன்னு எங்களுக்கு ஒண்ணுமே தெரியல. 5:30 மணிக்கு நாங்க எல்லாரும் ஏலமலை பகுதிக்கு பத்திரமா வந்து சேர்ந்தோம். அங்க இருந்து இங்க எல்லாரையும் முகாமிற்குக் கொண்டு வந்து சேர்த்தாங்க. எத்தன நாள் நாங்க முகாம்ல இருப்போம்னு தெரியல. எங்களோட வீடு நாங்க சேர்த்து வச்ச எல்லாமே போய்டுச்சு. ஒருவேளை நிலமை சரி ஆகி முகாமிலிருந்து போகச் சொன்னால் நாங்கள் இங்கே போவது என்றே தெரியலை. அதுக்குக்கூட ஒரு இடம் இல்ல. வீடும் இல்ல, வேலையும் இல்ல. எல்லாமே போய்டுச்சு." என்று சொல்லி கண்கலங்குகிறார்.

புத்துமலை நிலச்சரிவிலிருந்து குடும்பத்தோடு தப்பித்து இப்போது மேப்பாடி முகாமில் இருக்கும் ரம்லா என்கிற பெண்மணியிடம் பேசினோம்.

``பச்சக்காடு பகுதியில இருந்து பயங்கர சத்தம் கேட்டுச்சு. எல்லாரும் ஓடுங்க ஓடுங்கனு கத்திகிட்டே இருந்தாங்க. கொழந்தைகள தூக்கிகிட்டு மழைல நனஞ்சிட்டே ஓடுனோம். வீட்ல இருந்து எந்தப் பொருளையும் எடுக்கல. அந்த நேரத்துல எதையும் எடுக்கவும் முடியல. அந்த நேரத்துல எந்தப் பக்கம் ஓடுறதுணும் எங்களுக்கு தெரியல, கண்ணு முன்னால பெரிய பாறைக் கல்லு உருண்டு வந்துச்சு. நல்ல வேளையாக தேயிலைத் தோட்டத்திற்குள் ஓடிப்போனோம். கண்ணு முன்னாலேயே எல்லாத்தையும் மண்ணு மூடிடுச்சு. கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்ச எல்லாமே போய்டுச்சு. இனி எப்படி இங்க வாழ்க்கைய ஆரம்பிக்கப் போறோம்னு தெரியல." என்று சொல்லி அழுகிறார்.

ராகுல்காந்தி முகாமை பார்வையிட வந்தபோது இந்தப் பிரச்னைகளையெல்லாம் அவரிடம் சொல்லி கலங்கியிருக்கிறார் ரம்லா. அவரும், "எதுக்கும் பயப்படாதீங்க. உங்ககூட நான் இருக்கேன்" என நம்பிக்கை கொடுத்து சென்றார்.

சுப்ரமணி
சுப்ரமணி

நிலச்சரிவில் யாரெல்லாம் உயிரோடு இருக்கிறார்கள், யாரெல்லாம் காணாமல் போயிருக்கிறார்கள் என்று இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது. பச்சக்காடு புத்துமலைப் பகுதி மக்கள் எல்லோரும் இப்போது வேறுவேறு இடங்களில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து சேர்த்தால்தான் யாரெல்லாம் காணாமல் போயிருக்கிறார்கள் என்பது தெரியவரும். முகாமில் இருக்கிறவர்களுக்கு யார் இருக்கிறார்கள், யார் காணாமல் போயிருக்கிறார்கள் என்கிற எந்த விவரமும் தெரியவில்லை. அரசு 17 பேர் சிக்கி இருப்பதாகச் சொல்கிறது. இதுவரை பத்து உடல்கள்தான் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 7 உடல்களை ஐந்தாவது நாளாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

அனைத்தையும் இழந்து தனிமரமாய் நிற்கிறவர்கள், கூடியவிரைவில் மீண்டுவர வேண்டுமெனப் பிரார்த்திப்போம்.

அடுத்த கட்டுரைக்கு