Published:Updated:

ஒரே வாரத்தில் 3000 மி.மீ மழை... நீலகிரி கனமழை நமக்கு உணர்த்துவது என்ன?

கூடலூர் சேதங்கள்
கூடலூர் சேதங்கள்

இந்த ஆண்டில் ஒரே வாரத்தில் 3000 மி.மீ மழை நீலகிரியில் பெய்துள்ளது. இது நமக்கான முக்கியமான எச்சரிக்கை.

வறட்சியால் குடிநீரின்றி தவிக்கும் அனைவருக்கும் மழை என்ற சொல்லைக் கேட்டாலே ஆனந்தம்தான். கொட்டும் மழையால் அணைகள் நிரம்பிவிட்டன; ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது; வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்தப் பருவமழையின் பாய்ச்சலைக் கண்டு, வேளாண் சாகுபடிக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கும், குடிநீரின்றி தாகத்தில் தவித்த சாமானிய மக்களுக்கும் மகிழ்ச்சி உண்டாவது இயல்பானதே.

`10 ஆண்டுகளுக்குப் பிறகான துயரம் இது!' - துண்டிக்கப்பட்ட அவலாஞ்சி; ஊட்டியைப் புரட்டிப்போட்ட மழை

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கொட்டித்தீர்த்த கனமழை குறித்த செய்திகளில்கூட, இந்தியாவிலேயே அதிக மழை பொழியும் இடமாக மாறி சாதனை படைத்தது தமிழ்நாட்டின் அவலாஞ்சி என்று எழுதினார்கள், சொன்னார்கள். வெப்பக்காற்றில் தவித்தோருக்கும், கர்நாடகாவிடமும், ஆந்திராவிடமும், கேரளாவிடமும் கையேந்தி நின்ற மக்களுக்கும் இது இனிப்பான செய்திதான். ஆனால், இந்தச் செய்திக்குப் பின்னால் நமக்கான எச்சரிக்கை ஒன்றும் இருக்கிறது. அதையும் நம்மால் மறுக்க முடியாது; மறைக்கவும் முடியாது.

நீலகிரி மாவட்டத்தில் 1865, 1891, 1902, 1905, 1978, 1979, 1990, 1993, 1998, 2001, 2006, 2009 ஆகிய ஆண்டுகளில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழையால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கெத்தைப் பகுதியில் 25.10.1990 அன்று பெய்த மழையால் மின்வாரிய குடியிருப்புகள் நிலத்தில் புதைந்து, 54 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கேத்தி அச்சனங்கல் பகுதியில் 10.11.2009 இல் பெய்த மழையாலும் நிலச்சரிவு ஏற்பட்டது.

மழையால் சேதமடைந்த சாலை
மழையால் சேதமடைந்த சாலை

அவலாஞ்சியில் தற்போது பெய்த மழைக்கு மேகவெடிப்பு (Cloudburst) காரணமாக இருக்கலாம் என்று வானிலை வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். நீலகிரி பூர்வகுடிமக்களோ 1990, 2009-ம் ஆண்டுகளில் நடந்தது போன்ற நீரிடி என்று சொல்கிறார்கள். பனிக்கட்டி போல நீர்கோத்து இருக்கும் மேகம் ஒரே இடத்தில் விழுவது நீரிடி என விளக்கமும் சொல்கிறார்கள்.

நீலகிரி மாவட்டத்தில், வழக்கமான மழை அளவுகளைப் பார்க்கும்போது, தென்மேற்கு பருவமழைக்காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அதிக மழையும், வடகிழக்குப் பருவமழைக்காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் குறைவாகவும், கோடைமழைக்காலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதைவிடக் குறைந்தும், குளிர்காலமான ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மிகக்குறைவாகவும் மழைப்பொழிவு இருக்கிறது.

Vikatan

கடந்த ஐந்து ஆண்டுகளில் பார்த்தால், 2014 அக்டோபர் (348.7 மி.மீ.), 2015 நவம்பர் (346.2 மி.மீ.), 2016 ஜூன் (198.4 மி.மீ.), 2017 செப்டம்பர் (294.8மி.மீ.), 2018 ஆகஸ்ட் (265.5மி.மீ.) என்ற அளவில் நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்துள்ளது. அதாவது 2014-ல் 295.7 மி.மீ., 2015-ல் 96.7 மி.மீ., 2016-ல் 72.0 மி.மீ., 2017-ல் 165.1மி.மீ., 2018-ல் 265.5மி.மீ., என சராசரி மழையளவு இருந்துள்ளது.

ஆனால், 2019-ம் ஆண்டில், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரே வாரத்தில் 3000 மி.மீ. அளவைத் தாண்டி மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலியின் மூன்றாண்டு சராசரி மழையளவு 2500 மி.மீ.தான், சென்னையின் ஓராண்டு சராசரி மழையளவு 1383 மி.மீ.

நிலச்சரிவால் குவிந்து கிடைக்கும் கற்கள்
நிலச்சரிவால் குவிந்து கிடைக்கும் கற்கள்

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி மழைமானியில், 07.08.2019 அன்று மட்டும் 820 மி.மீ. எனவும், 08.08.2019 அன்று மட்டும் 911 மி.மீ. எனவும் மழையின் அளவு பதிவானதால், வானிலை வல்லுநர்கள் நேரடி ஆய்வில் இறங்கியுள்ளனர். இது உண்மையான அளவுதானா என்கிற ஆராய்ச்சியும் ஒருபக்கம் நடக்கிறது. இருப்பினும், ஒவ்வோர் ஆண்டின் கணக்கீட்டின்படி மழையின் அளவும், மழைப்பொழியும் மாதங்களும், எந்த இடத்திலும் ஒரே மாதிரியாகவோ, சராசரியாகவோ இல்லை. இதுதான் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர் அறிவியலாளர்கள்.

“அவலாஞ்சியில் பெய்தது மழை அல்ல... மேக வெடிப்பு!”

மழையில்லாத ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள், பூக்கள் உதிர்வது போல மழைச்சாரலடிக்கும் ஏப்ரல், மே மாதங்கள், தென்மேற்கு பருவமழை பொழியும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள், இடி, மின்னல், காற்றுடன் அடைமழை பெய்யும் அக்டோபர் மாதம், அக்டோபரில் தொடங்கி செப்டம்பர், நவம்பர் வரை நீடிக்கும் வடகிழக்குப் பருவமழை... இதுதான் நீலகிரியின் இயல்பான காலநிலை. அந்தக் கணக்கு இப்போது மாறிவிட்டது.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக இருந்த மழைக்காடுகள், சோலைக்காடுகள், புல்வெளிகள் அழிக்கப்பட்டு அங்கே எல்லாம் தோட்டப்பயிர்கள் பெருகிவிட்டன. நீரைத்தேக்கும் பள்ளத்தாக்குகள் நீர்மின்நிலையங்களாக மாற்றப்பட்டன. சுற்றுலாவின் முக்கியத்துவத்தால் இயற்கைச் சூழல் உருமாறியது. காடுகளைக் காக்கும் பழங்குடிகள் வெளியேற்றப்பட்டனர். இயற்கையின் சீற்றத்தைத் தாங்கும், பாதிப்புகளை சமாளிக்கும் காடுகளின் தாங்கும் திறன் குறைந்துவிட்டது அல்லது குறைக்கப்பட்டுவிட்டது.

`மூன்று மாத மழை, மூன்றே நாளில் பெய்தது!’ - நீலகிரி வெள்ளத்துக்கு ஓ.பி.எஸ் விளக்கம்

அதன் விளைவுதான் புலிகளும், யானைகளும், பழங்குடி மக்களும் நீந்திச்செல்லும் மாயாற்றிலும், பைக்காரா ஆற்றிலும் சேறும், சகதியும் கலந்து பெருமரங்கள் நீந்திக்கொண்டிருக்கின்றன. நீரை உறிஞ்சி நிலத்தடியில் சேமித்து வைத்து, சிறிது சிறிதாக ஊற்றுகளாக, அருவிகளாக நீரை அனுப்பி வைக்கும் புல்வெளிகள், சோலைகள் அங்கு இல்லை. அதனால் தற்காலிக அருவிகள் உருவாகி அவ்வளவு நீரும் இரைச்சலோடு வங்கக்கடலை நோக்கிப் பாய்ந்தோடி வருகிறது. கொஞ்சம் அரபிக்கடல் பக்கமும் ஓடிச்செல்கிறது.

கூடலூர்
கூடலூர்

நிலச்சரிவு ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. ஆனால், கனமழை பெய்வதையும், பேரிடர் தாக்கத்தை கண்டறியும் தொழில் நுட்பங்கள் இருக்கின்றன. பேரிடரைத் தடுக்க முடியாது என்பது தெரியும். பேரிடர் பாதிப்புகளைக் குறைக்க முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இதற்கு முன்னரே, நிலச்சரிவு அபாயம் உள்ள நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 233 இடங்கள் பேரிடர் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அறிவியல் தொழில்நுட்பங்களோடு, பேரிடர் மீட்புப் படை, பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட துறைகள் இருந்தும், உயிரிழப்புகளையும், பொருட்சேதங்களையும் நம்மால் தடுக்க முடியவில்லை. வெறுமனே பருவநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட இயற்கைச் சீற்றம், இயற்கைப் பேரிடர் என்று சொல்லி, தப்பிக்க நினைக்கிறோம். பேரிடரை எதிர்கொள்ள கோடிக்கணக்கில் திட்டங்களை வகுத்துவிட்டு, பேரிடர் பாதிப்புகளை குறைக்க முடியாமல் தவித்தால் அது நம்முடைய இயலாமைதானே.

சுனாமி, புயல், வெள்ளம், நிலச்சரிவு என இயற்கைப் பேரிடர் காலங்களில் அனுபவப் பாடங்கள் பல இருந்தாலும், அடுத்த பாதிப்பு வரும்போது, நம்முடைய செயல்பாடுகள் என்னவோ, மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதமாகச் செய்வது, ஹெலிகாப்டரில் பறந்து சென்று உணவுப்பொட்டலங்கள் வழங்குவது, பாதிக்கப்பட்ட மக்களை சில காலம் முகாம்களில் தங்கவைப்பது எனப் பேரிடர் மேலாண்மைப் பணிகளை சுருக்கிக் கொள்கிறோம். எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியைக் குறைசொல்வது, ஆளுங்கட்சி தற்காலிகத் தீர்வுகளை செயல்படுத்தி பதில் கொடுப்பதுமாக பேரிடர் பாதிப்புகளை சாதாரணமாக கடந்துசென்று கொண்டிருக்கிறோம்.

நீலகிரி
நீலகிரி

சுனாமி ஏற்பட்டபோது, கடல்சூழல் முற்றிலும் மாறியது, கடல்வாழ் உயிரினங்கள் இடம்பெயர்ந்தன. புயல் வரும்போதும், சூறாவளி வரும்போதும் மரங்கள் பெருமளவில் அழிந்தன. இப்போது நீலகிரி கனமழை, நிலச்சரிவு பற்றிய கணக்கெடுப்பிலும் மனித உயிரிழப்புகள், கால்நடைகள், வீடுகள், பொருளாதார இழப்புகள், மலைக்காய்கறிகள், தோட்டப்பயிர்கள், சாலைகள் உள்ளிட்ட சேதாரங்கள் புள்ளி விவரங்களாக வெளியாகும், இழப்பீடுகள், மறுசீரமைப்புப் பணிகள் நடக்கும். காடுகளின் அழிவு, காட்டுயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, இயற்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் இதைப் பற்றி உணவுச்சங்கிலியில் சக உயிரினமான, மனிதர்களாகிய நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டோம். ஒவ்வொரு பேரிடரின் போதும் இயற்கை வளங்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். அதை நம்மால் மீட்டுருவாக்கம் செய்ய இயலாமல் தவிக்கிறோம்.

காலங்களில் ஏற்பட்ட மாற்றம், அதிக மழை, அதிக வெப்பம், அதிக குளிர், அதிக காற்று, சூறாவளி, புயல், புழுதிக்காற்று, கடல் உள்வாங்குதல், நிலத்தடியில் ஊடுருவும் கடல்நீர், சில உயிரினங்கள் முற்றிலும் அழிவது, சில உயிரினங்கள் அதிகளவு பெருகுவது, மனிதர்களைத் தாக்கும் புதிய நோய்கள் என ஒவ்வொரு நாளும் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை, தாக்கத்தை கண்கூடாகப் பார்க்கிறோம், உணர்கிறோம். இருந்தாலும் பேராசையால் இயற்கை வளங்களை சுரண்டிக் கொண்டே இருக்கிறோம். செஃல்பி எடுப்பது, சினிமா சூட்டிங் எடுப்பது, சூழலியல் சுற்றுலா செல்வதால் இயற்கையைக் காத்துவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.

கனமழை பாதிப்புகள்
கனமழை பாதிப்புகள்

உலகின் பல்வேறு நாடுகள் பேரிடர் பாதிப்பைச் சமாளிக்க ஒன்று சேர்ந்து செயல்படத் தொடங்கிவிட்டனர். எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்றுங்கள் என ஐ.நா.மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அவசரநிலைப் பிரகடனங்களை வெளியிட்டு, திட்டங்களையும், செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். நாமும் விழித்துக் கொண்டால், பிழைத்துக் கொள்வோம்.

அடுத்த கட்டுரைக்கு