Election bannerElection banner
Published:Updated:

2010 முதல் 2019 வரை.., தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்திய இயற்கை பேரழிவுகள்! #VikatanInfographics

இயற்கை பேரழிவுகள்
இயற்கை பேரழிவுகள் ( Vikatan )

2010 முதல் தற்போது வரை, தமிழகத்தில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய இயற்கை பேரழிவுகள்...

ஆதிகாலத்திலிருந்தே இயற்கை சீற்றங்கள் பூமியில் பல மாற்றங்களை நடத்தி வந்தவண்ணமிருக்கின்றன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில்தான் பேரழிவுகளின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் உலகில் ஏதேனும் ஓர் இடத்தில் இயற்கை சீற்றங்களின் தாக்கம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இவற்றிற்கு காரணம், சுற்றுச்சூழல் பாதிப்புகள், திட்டமிடப்படாத வளர்ச்சி, மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளிட்டவையே. இதனால் நிலநடுக்கம், நிலச்சரிவு, சூறாவளி, வெள்ளம், சுனாமி, வறட்சி, தீ விபத்து போன்ற பல்வேறு இயற்கை பேரழிவுகள் நிகழ்கின்றன.

2010 முதல் தற்போது வரை, தமிழகத்தில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய இயற்கை பேரழிவுகள் குறித்துப் பார்ப்போம்!

2010 : ஜல் புயல்

ஜல் புயல்
ஜல் புயல்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஜல் புயல், நவம்பர் 6-ம் தேதி அதி தீவிர புயல் என்ற நிலையிலிருந்து புயலாக மாறி மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே கரையைக் கடந்தது. இந்தப் புயலின் தாக்கத்தினால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 70,000 - க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

2011 : தானே புயல்

தானே புயல்
தானே புயல்

வங்கக் கடலில் 2011-ம் ஆண்டு உருவான இந்தப் புயல்தான் தமிழகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய முதல் அதிதீவிரப் புயலாகும். இந்தியப் பெருங்கடலில் உருவான `தானே' புயல், டிசம்பர் இறுதியில் கடலூர் அருகே கரையைக் கடந்தது. இந்தப் புயலினால், 45-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. கடலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமாகின, எண்ணற்ற வீடுகள் சேதமாகின. 40,000 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. பலரின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்துச் சென்றது இந்தப் புயல்.

2012 : நீலம் புயல்

நீலம் புயல்
நீலம் புயல்

தானே புயலின் சீற்றம் அடங்கிய அடுத்த வருடமே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையமாக உருவாகி, அக்டோபர் 31-ம் தேதி மாமல்லபுரம் அருகே 85 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது நீலம். கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிலிருந்த வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 20-க்கும் அதிகமான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. மேலும், பிரதிபா காவேரி என்ற கப்பல் பட்டினப்பாக்கம் அருகே தரைதட்டியது. கப்பலிலிருந்து குதித்த பணியாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். புயலினால் 75-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

2014 : வறட்சி

வறட்சி
வறட்சி

தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தமிழகம் முழுவதும் வறண்டு காணப்பட்டது. இதனால், கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டு, விவசாயத்துக்கு மட்டுமல்லாமல், குடிநீருக்கே ஒட்டுமொத்த தமிழகமும் தவித்தது. 2014 - 15 ம் ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் கடன் மற்றும் வறட்சி காரணமாக 604 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. விவசாயிகளின் தற்கொலை 42 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகத் தேசிய குற்றப்பதிவு கழகம் வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அனைத்து செய்தித் தாள்களிலும் தண்ணீர் பஞ்சம், வறட்சி தான் தலைப்புச் செய்தியாக இருந்தது. தமிழகம் முழுவதும் தண்ணீருக்காக மக்கள் இரவு பகல் என்று பாராமல் குடத்துடன் அலைந்தனர். பல இடங்களில் குடிநீருக்காகப் போராட்டங்கள் நடத்தினர். வேலூரில் 2014 மார்ச் மாதத்தில் தண்ணீருக்காக மட்டும் 163 போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

2015 : வெள்ளம்

வெள்ளம்
வெள்ளம்

நவம்பர் மற்றும் டிசம்பரில் கடும் மழை காரணமாக 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. தி.நகர், கிண்டி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கின. சுமார் 18 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். 6,605 முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர். 1,715 பேர் கொண்ட 50 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்புப் பணியிலிருந்தன. 200-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. வெள்ளத்தினால் 420-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

2016 : வர்தா புயல்

வர்தா புயல்
வர்தா புயல்

2016 டிசம்பர் 12-ம் தேதி சென்னையில் கரையைக் கடந்த வர்தா புயலால், பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன; ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. 45-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சேதம் ஏற்பட்டது. மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. போக்குவரத்து முடங்கிய நிலையில், சென்னை மாநகரமே புயலில் தவித்தது. இந்தப் புயலின்போது எண்ணூர் துறைமுகத்தில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், நாகையில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டிருந்தது. வர்தா புயலின் பாதிப்பிலிருந்து முன்னெச்சரிக்கையாக 10,430 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் 97 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

2017 : ஒகி புயல்

ஒகி புயல்
ஒகி புயல்

வடக்கு இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அருகே உருவான ஒகி புயல், மணிக்கு 185 கி.மீ வேகத்தில் நவம்பர் 30-ம் தேதி கன்னியாகுமரி மற்றும் கேரளாவைப் புரட்டிப் போட்டது. கடலுக்குச் சென்ற குமரி, தூத்துக்குடி நாகை மாவட்ட மீனவர்களில் 27 பேர் உயிரிழந்த நிலையில், 170-க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். பல்லாயிரக்கணக்கான மரங்களும் மின்சார கம்பங்களும் சாய்ந்தன. போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமாகின, இலங்கை, தமிழ்நாடு, கேரளா என மொத்தம் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், 650-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயினர்.

2018 : கஜா புயல்

கஜா புயல்
கஜா புயல்

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வங்கக் கடலில் உருவாகிய புயல் கஜா. 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டதுடன், 11.32 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வீழ்ந்தன. 30,000 ஹெக்டேரில் இருந்த தென்னை மரங்கள், 32,706 ஹெக்டேர் விவசாயப் பயிர்கள் பெரும் சேதமடைந்தன. 1.04 லட்சம் கால்நடைகள் மற்றும் பறவைகள் (12,298  கால்நடைகள்) உயிரிழந்தன. 14,000-க்கும் மேற்பட்ட பறவைகளும் கோழிகளும் இறந்தன. 1.03 லட்சத்துக்கும் அதிகமான மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. 3.41 லட்சம் வீடுகள் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான படகுகள் உடைந்து சிதைந்தன. 3.78 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் 556 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இந்த ஒரு புயல் பலரின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அளித்துச் சென்றுவிட்டது.

2018 : குரங்கணி தீ விபத்து

குரங்கணி தீ விபத்து
குரங்கணி தீ விபத்து

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட குரங்கணி தீ விபத்து நிகழ்வை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. மார்ச் 11-ம் தேதி தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மலையேற்றப் பயிற்சிக்காகச் சென்றிருந்த 36 பேர் தீயில் சிக்கி அதில் 23 பேர் பலியாகினர். காட்டுத் தீ பரவியதற்கு பல்வேறு காரணங்களை அடுக்கினாலும், இயற்கையும், கால நிலை மாற்றமும் ஒரு காரணமாகவே அமைகிறது.

2018 : தண்ணீர் பஞ்சம்

தண்ணீர் பஞ்சம்
தண்ணீர் பஞ்சம்

பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகம் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தைச் சந்தித்தது. மக்கள் குடிநீருக்காகக் குடத்துடன் பல கிலோமீட்டர் நடந்துசெல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. மேலும், ஆந்திரா மற்றும் வேலூரிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், 300 அடியில் கிடைத்து வந்த நிலத்தடி நீர், 800 அடிக்கும் கீழ் சென்றது. சென்னையில் 700 ரூபாயாக இருந்த லாரி தண்ணீர் 2,500 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் காலிக் குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வறட்சி நிவாரணம்
வறட்சி நிவாரணம்

சுற்றுச்சூழலுக்குரிய பாதுகாப்பையும், முக்கியத்துவத்தையும் முறையாகக் கொடுக்காமல் இயற்கையை அழித்து, இயற்கைக்கு எதிராக மனிதன் செயல்பட்டு வருவதால் வெள்ளம், சூறாவளி, நிலநடுக்கம், தீ, சுனாமி போன்ற பல்வேறு இயற்கை பேரழிவைச் சந்திக்கிறான். இயற்கை பேரழிவுகள் அனைத்தும், மனிதனால் ஏற்படும் பேரழிவுகளே. இயற்கை மனிதர்களுக்கு ஒவ்வொரு முறையும் பாடம் கற்பித்துக்கொண்டேதான் இருக்கிறது. மனிதன்தான் படிக்க மறுக்கிறான்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு