Published:Updated:

மதுரை: `மழைநீர் தேங்கும் 300 இடங்கள்; மூழ்கிய தரைப்பாலங்கள்!’ - முன்னேற்பாடுகள் தீவிரம்

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

`மதுரையில் 300 இடங்கள் மழைநீர் தேங்கும் இடங்களாகக் கண்டறியப்பட்டிருக்கின்றன. அங்கு நீர்தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை’ - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

புரெவி புயல் தென்மாவட்ட கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மதுரை உட்பட ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.

வைகை ஆறு
வைகை ஆறு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் மதுரை மாவட்டத்தில் போதிய அளவு மழை பொழியவில்லை. தற்போது புரெவிப் புயல் மையம்கொண்டிருக்கும் நிலையில் நேற்று முதல் மிதமான மழை மதுரை மாவட்டத்தில் விடாமல் பெய்துகொண்டிருக்கிறது. இரண்டு நாள்களாக பகல் நேரம் இருட்டாகவே இருக்கிறது. மிதமான மழையிலும் மதுரை நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. வைகை ஆற்றிலிருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் செல்வதால் மாரியம்மன் தெப்பக்குளம் நிறைந்துவிட்டது.

இது மட்டுமல்லாமல், வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால், மதுரையில் ஓடும் வைகையாற்றில் வெள்ளம்போல் தண்ணீர் ஓடுகிறது. இதனால், ஓபுளா படித்துறை தரைப்பாலமும், குருவிக்காரன் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக தரைப்பாலமும் தண்ணீரில் மூழ்கின.

பேரிடர் மீட்புப் படை
பேரிடர் மீட்புப் படை

இதனால் அந்தப் பாலங்களில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். இதனால், மாநகரின் மற்ற மேம்பாலங்களில் போக்குவரத்து நெருக்கடி எற்பட்டிருக்கிறது.

இலங்கையில் கரையைக் கடந்தது; பாம்பனுக்கு அருகில் `புரெவி’! - உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

புரெவி புயல் சம்பந்தமாக தென் மாவட்டங்களில் ஆய்வு நடத்திவரும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரையில் எடுக்கபட்ட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றிப் பேசும்போது,``மதுரையில் 300 இடங்கள் மழைநீர் தேங்கும் இடங்களாகக் கண்டறியப்பட்டிருக்கின்றன. அங்கு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

வைகையில் பெருக்கெடுத்து ஓடும் நீர்
வைகையில் பெருக்கெடுத்து ஓடும் நீர்

அவசர உதவிகளுக்கு தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பேரிடர் மீட்புப் படையினர் தென் மாவட்டங்களில் தயார்நிலையில் இருக்கிறார்கள். புயல் பாதிக்கும் மாவட்டங்களில் மக்களைத் தங்கவைக்க நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் புரெவி புயலையும் மழையையும் எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு