Published:Updated:

`செலவு செய்து மீன்பிடிக்கச் சென்றதால் கரைதிரும்பத் தயங்குவார்கள்!’ - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

`பணம் செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றதால், மீனவர்கள் கரை திரும்பத் தயங்குவார்கள். மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகக் கரைக்கு வர வேண்டும் என அறிவித்திருக்கிறோம்’ என்றார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் புரெவி புயல் தடுப்பு நடவடிக்கை குறித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம், `கரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்’ என அதிகாரிகள் கூறியது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

அவற்றுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரும் மழைதான் குடிநீருக்குப் பயன்படும். வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள 36 வருவாய் மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். புரெவி புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி 12 கிலோமீட்டர் வேகத்தில் நகருகிறது. புயலை உன்னிப்பாக கவனித்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.

புரெவி புயலால் காற்று 90 கி.மீ வேகத்தில் வீசலாம் என்கிறார்கள். புயல் பாம்பன், கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்க வாய்ப்பிருக்கிறது. கஜா புயலைப் போன்று அதே வலுவுடன் இந்தப் புயல் வருவதால், இயற்கையைக் கையாளுவதில் புதிய இலக்கியம் படைத்து நடவடிக்கை எடுத்துவருகிறார் முதல்வர். அத்தியாவசிய உணவுப் பொருள்கள், மீட்புப்படை, கடற்படை தயாராக இருக்கின்றன. இன்று இரவு அல்லது நாளை காலை புயல் கரையைக் கடக்க வாய்ப்பிருக்கிறது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தாழ்வான மற்றும் கடற்கரைப் பகுதிகளில் இருப்பவர்களுக்காக முகாம்கள் தயாராக இருக்கின்றன.

புரெவி புயல் ஆய்வுக் கூட்டத்துக்கு வந்த அமைச்சர்கள்
புரெவி புயல் ஆய்வுக் கூட்டத்துக்கு வந்த அமைச்சர்கள்

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக, `மீனவர்கள் கரைக்குத் திரும்ப வேண்டும். யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்’ என அறிவித்தோம். கடலுக்குச் சென்ற அனைத்து மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குமரி மாவட்ட மீனவர்கள் 106 படகுகள் குறித்த விவரத்தை அதிகாரிகள் கொடுத்திருக்கிறார்கள். மால்பி, கோவா, ரத்தினகிரி, கௌஹாத்தி, லட்சத் தீவு, மும்பை ஆகிய இடங்களில் குமரி மீனவர்கள் இருக்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக மீனவர்களுக்குத் தகவல் கொடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறோம். வருவாய்த்துறை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழக மீனவர்களுக்கு அவசரத் தகவல் கொடுக்க சேட்டிலைட் போன் வழங்கபட்டிருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் மீனவர்களுக்கு சேட்டிலைட் போன் கொடுக்கவில்லை. கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் எந்தக் காலநிலையையும் சமாளிக்கும் திறமைமிக்கவர்கள். பணம் செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றதால் மீனவர்கள் கரை திரும்பத் தயங்குவார்கள். மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, கரைக்கு வர வேண்டும் என அறிவித்திருக்கிறோம்.

கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு
கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு

ஆனால், இதுவரை எந்த மீனவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஒக்கி புயலில் பாதித்த குத்தகை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை எனக் கூறுவது சரியில்லை. வாய்மொழி குத்தகைதாரர்களுக்கு நிவாரணம் வழங்க வாய்ப்பு இல்லை. பதிவு செய்யப்பட்டவர்களுக்குத்தான் நிவாரணம் வழங்கப்படும். அரசு ஆவணங்கள் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு