Published:Updated:

வெயிலில்லா வருடம், நிலவில்லா மர்மம்..! உலகை உலுக்கிய தம்போரா எரிமலை

எரிமலை
எரிமலை

தம்போரா என்ற கிராமத்தில் அமைந்துள்ளது அந்த எரிமலை. அந்த எரிமலையின் பெயரும் தம்போராதான். 1815, ஏப்ரல் 10-ம் தேதி தம்போரா வெடித்தது. ஆய்வாளர்களின் கணக்குப்படி, சுமார் 16,000 ஹிரோஷிமா குண்டுகள் வெடித்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்திருக்கிறது இந்த எரிமலை வெடிப்பு.

``நான் ஒரு மோசமான கனவை நிஜத்தில் கண்டேன்

பிரகாசமான சூரியன் தொலைந்துவிட்டது

ஒளியற்ற, வழியற்ற, எல்லையற்ற

இருண்ட விண்வெளிக்குள் நட்சத்திரங்கள் மறைந்துவிட்டன...

நிலவொளியும் மங்கிக் காணாமல் போய்விட்டது.

சூழ்ந்திருந்த புகையால் குளிர்ந்திருந்த குருட்டுப் பூமி

கறுப்படித்த காற்றுக்குள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது;

தினந்தினம் `காலை' வந்தது; போனது

பூமிவாசிகளுக்கு விடியல் மட்டும் வரவேயில்லை

அனைவரும் உயிரற்று, உணர்ச்சியற்றுப் போயிருந்தார்கள்

எங்களிடம் மிஞ்சியிருந்தது என்னவோ

ஒளி வேண்டிச் செய்த சுயநலப் பிரார்த்தனைகள் மட்டுமே!"

-பைரான் (Lord Byron)

புகைமூட்டம்
புகைமூட்டம்
Pixabay

1816-ம் ஆண்டு ஜூலை மாதம், பைரான் (Byron) என்ற ஆங்கிலக் கவிஞர், தன்னுடைய நண்பருக்கு எழுதிய கடிதத்தில் அவர் கண்ட பூமியின் பேரழிவை இப்படி விளக்கியிருக்கிறார். அவருடைய கவிதையில், `சூரியன் தொலைந்துவிட்டது, நட்சத்திரங்கள் மறைந்துவிட்டன, நிலவொளியைக் காணவில்லை என்று கூறியிருப்பவை யாவும் பேரழிவைக் குறிப்பதற்கான, கவிக் கற்பனாவாதம் கிடையாது. அனைத்துமே அவர் கண்களால் கண்டு, வேதனைகளை உணர்ந்து எழுதிய உண்மை வரிகள். ஆம், சூரியன் தொலைந்துவிட்டது. பூமி புகையால் சூழப்பட்டு, குருடாகிவிட்டதைப் போன்ற பிரமையில் சிக்கியிருந்தது. சூரிய ஒளியின்றி வறண்டிருந்த நிலங்களில், பயிர்கள் மடிந்து பசி, பஞ்சத்தைப் பரப்பிவிட்டு, மனிதர்கள் உயிரைப் பறித்துக் கொண்டிருந்தது. அனைவரும் உணர்ச்சியற்றுப் போயிருந்தார்கள்.

1816-ம் ஆண்டு. பூமியின் மக்கள் தொகை பெரியளவு, விவசாயத்தையே சார்ந்திருந்தது. அறுவடைகளே அவர்களின் வாழ்வைச் செழுமையாக்கிக் கொண்டிருந்தன. அப்படிப்பட்டதொரு வாழ்க்கை முறையில், அறுவடை தோல்வியடைவது, அதுவும் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு என்பது பெரிய இழப்புதான். அதுவே உலகம் முழுக்க ஒரே நேரத்தில் நிகழ்ந்தால், அது மிகப்பெரிய பேரழிவைப் போன்றது. அப்படியொரு பேரழிவு நிகழ்ந்தது.

பூமியின் கடந்த 10,000 ஆண்டுக்கால வரலாற்றில் நடந்த மிகப்பெரிய எரிமலை வெடிப்பு.

பஞ்சகால நோய்களான காலரா, டைஃபஸ் போன்றவை, இந்தியா உட்பட உலகம் முழுக்கப் பரவிக்கொண்டிருந்தன. சீனாவிலிருந்து அயர்லாந்து வரை உணவின் விலை, சந்தைகளில் உணவுக்காக மக்கள் தங்கள் குழந்தைகளை விற்கவேண்டிய அளவுக்கு எகிறியது.

ஏற்கெனவே ஐரோப்பிய கண்டம் நெப்போலியனுடைய படையெடுப்புகளால் பாழாகிக் கிடந்தது. கூடவே, பேரழிவும் சேர்ந்து இறப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. லட்சக்கணக்கான படைவீரர்கள், தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள். 1816-ம் ஆண்டு புதிய இங்கிலாந்துக்கு, `1800-மரணக்கூடம்' என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டது. 1817-ம் ஆண்டை, ஜெர்மானியர்கள், `பிச்சைக்காரர்களின் ஆண்டு' என்றழைத்தனர். இந்தியாவில் 1817-ம் ஆண்டு ஏற்பட்ட வங்காளப் பஞ்சத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர். இந்தியா முழுக்கப் பஞ்சகால நோயான காலரா, பெருநாசத்தையும் பெரியளவிலான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.

இந்தப் பேரழிவுகள் அனைத்துக்குமான காரணங்களாக, அந்தக் காலகட்ட அறிவியல் கட்டுரைகள், நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள் என்று அனைத்தும் சொல்வது ஒன்றை மட்டுமே. கோடையற்றுப் போன, பூமியில் சூரிய ஒளியே இல்லாத, இன்னும் சொல்லப்போனால் பகலே இல்லாத 1816-ம் ஆண்டுதான் இந்தப் பேரழிவுகளுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. அந்த ஆண்டு, மனித வரலாற்றில் `கோடைக்காலமற்ற ஆண்டு (Year Without Summer)' என்று அழைக்கப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் பூமி அழியப்போகிறது என்ற அளவுக்கு மக்கள் அச்சத்துக்கு ஆளாகியிருந்தார்கள். அப்படியொரு அச்சம் ஏற்படும் அளவுக்கு 1816-18 ஆண்டுகளுக்குள் மில்லியன் கணக்கான மக்கள் மடிந்தனர்.

சிவப்புக் கோடுகளால் காட்டப்பட்டுள்ள பகுதி தம்போரா வெடித்தவுடன் அதன் சாம்பல் புகை மண்டலம் எந்த அளவுக்குப் பரவியது என்பதைக் காட்டுகிறது.
சிவப்புக் கோடுகளால் காட்டப்பட்டுள்ள பகுதி தம்போரா வெடித்தவுடன் அதன் சாம்பல் புகை மண்டலம் எந்த அளவுக்குப் பரவியது என்பதைக் காட்டுகிறது.

உலகத்திற்குக் கிடைக்கும் சூரிய ஒளியையே மறைக்கும் அளவுக்கு இவ்வளவு பெரிய பேரழிவா?  அப்படியென்ன நடந்தது?

இந்தக் கேள்விக்கான விடை, ஓர் எரிமலை வெடிப்புக்குள் அடங்கியுள்ளது. பூமியின் கடந்த 10,000 ஆண்டுக்கால வரலாற்றில் நடந்த மிகப்பெரிய எரிமலை வெடிப்பு.

சும்பாவா தீவு. அப்போது டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டிலும், இப்போது இந்தோனேசியாவின் ஒரு பகுதியாகவும் இருக்கும் நிலப்பகுதி. அங்கு தம்போரா என்ற கிராமத்தில் அமைந்துள்ளது அந்த எரிமலை. அந்த எரிமலையின் பெயரும் தம்போராதான். 1815-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 10-ம் தேதி தம்போரா வெடித்தது. பொதுவாக, எரிமலைகள் இரண்டுவிதமாகத் தீக்குழம்பை வெளியேற்றும். பானை பொங்கி வழிவதைப் போல், தீக்குழம்பு எரிமலையிலிருந்து பொங்கிவரும். இரண்டாவது, தீக்குழம்பு எரிமலையிலிருந்து வெடித்துக் கிளம்பும். முதலாவது நடக்கும்போதாவது தப்பிக்க நேரம் கிடைக்கும். இரண்டாவதில் கிடைக்கும் நேரம் மிகவும் குறைவு. தம்போரா கிராமத்து மக்களும், அப்படித்தான் அன்று தப்பிக்க நேரமின்றிச் சிக்கியிருந்தார்கள். ஹிரோஷிமா அணுகுண்டு வெடித்ததைப் படங்களிலாவது பார்த்திருப்போம். அதுவே, இந்தப் பெருவெடிப்புக்கு குழந்தைதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆம், ஆய்வாளர்களின் கணக்குப்படி, சுமார் 16,000 ஹிரோஷிமா குண்டுகள் வெடித்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்திருக்கிறது இந்த எரிமலை வெடிப்பு.

பைரானின் எழுத்துகளிலிருந்து எரிமலை வெடித்தபோது இருந்த நிலைமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. பலரும் நம்பிக்கையின்றித் தங்கள் புருவங்களை உயர்த்தி அந்தப் பெருவெடிப்பு ஏற்படுத்திய பிரகாசத்தை அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். நெருப்புக் குழம்பு அவர்கள்மேல் படிந்து ஓலமிடக்கூட நேரம் கொடுக்காமல் சாம்பாலாக்கிக் கொண்டிருந்தது. கிராமமே சிதறி ஓடிக்கொண்டிருந்தது. 1,600 மைல்களுக்கும் அப்பால் வரை கேட்ட பெருவெடிப்பின் சத்தத்தைவிட அங்கிருந்த மரண ஓலங்களின் ஓசை அனைவரின் காதுகளையும் அச்சத்தால் அடைத்துக்கொண்டிருந்தது. பலர், எரிந்துகொண்டிருந்த உடலோடு சூடு தாங்காமல் துடித்தபடி ஓடிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய இறுதிச்சடங்கு, சூழ்ந்திருந்த நெருப்புக் குழம்புக்குள் தானாக நிகழ்ந்துகொண்டிருந்தது. பிரகாசத்தைத் தொடர்ந்து இருண்டுகொண்டிருந்த வானத்தைச் சிலர் பித்துப் பிடித்ததைப் போல் பார்த்துக்கொண்டிருந்தனர். முழுக்கச் சாம்பலால் போர்த்தப்பட்டுப் பயனற்றுப் போயிருந்த நீரையும் பயிர்களையும் சிலர் வெறுப்போடு வெறித்துக் கொண்டிருந்தார்கள். சிலர், எரிமலையைச் சபித்தப்படி, பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டே கைகளை விரித்துக்கொண்டு ஓலமிட்டார்கள்.

தம்போரா எரிமலை
தம்போரா எரிமலை
Jialiang Gao (peace-on-earth.org)
Vikatan

வெடித்துக்கிளம்பிய தீக்குழம்புகளின் புகைமூட்டம், 40 கிலோமீட்டர் உயர்ந்து வானத்தை முட்டியது. அனல் கக்கும் நெருப்பைச் சூழ்ந்த கரும்புகையோடு, அரக்கனைப் பார்த்ததுபோல் இருந்ததாக இந்தோனேசிய நாட்டுப்புறப் பாடல்கள் பதிவு செய்துள்ளன. அன்று ஏப்ரல் 10-ம் தேதி, எரிமலை வெடித்தபோது, அதன் தீப்பிழம்புகள் 40 கி.மீ உயரம் வரை தொட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வளவு உயரத்துக்கு எழுந்த தீப்பிழம்பு, வளிமண்டலத்தையே தம்போராவின் புகைமூட்டத்தால் சூழ வைத்தது. 43 கிலோமீட்டருக்கும் மேலே சாம்பல் புகைமூட்டம் உயர்ந்தது.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

1,000 பேர், 2,000 பேர் அல்ல. 11,000 பேர் தம்போரா வெடித்துச் சிதறியபோது, பலியானார்கள். இன்று, தம்போரா கிராமத்தின் பழைய படிமங்களைத் தோண்டியெடுத்துக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களின் கைகள் நடுங்குகின்றன. அவர்களுடைய உடல்களில் கிடைக்கும் ஆதாரங்கள், அவர்களுடைய மரணங்களுக்குச் சாட்சியங்களாக நிற்கின்றன. ஆம், ஒரு கிராமமே இல்லாமல் போனது.

இந்தோனேசியா
இந்தோனேசியா

தம்போரா முழுக்க முழுக்க, நீராக ஓடிக்கொண்டிருந்த நெருப்புக் குழம்பினால் சூழப்பட்டிருந்தது. நெருப்பு வெள்ளம் சூழ்ந்திருந்த தீவாகக் காட்சியளித்தது சும்பாவா தீவு. 20 சென்டிமீட்டர் அளவுக்கு விட்டம்கொண்ட படிகக்கற்கள் எரிமலைக்குள்ளிருந்து வெடித்துச் சிதறி மழையாகப் பொழிந்துகொண்டிருந்தன. தீவில், கடலும் கரையும் இணையும் விளிம்புவரை முழுக்க முழுக்கச் சாம்பலாகவே படிந்திருந்தது. சுமார் இரண்டு மில்லியன் டன்கள் கந்தக டை ஆக்சைடையும் 160 கன கிலோமீட்டர் தீக்குழம்பையும் வெளியே கக்கிய தம்போராவால், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் என்று அனைத்தும் சாம்பலாகக் காட்சியளித்தன. உணவோ நீரோ எதுவுமே உட்கொள்ளும் வகையில் இல்லை. கால்நடைகள், பயிர்கள், குடிநீர் என்று அனைத்தும் அழிந்தன. உணவின்றி, நீரின்றிக் கொத்துக் கொத்தாக 71,000 மக்கள் மாண்டனர். தம்போரா எரிமலை வெடித்த அதிர்வினால், நான்கு முதல் ஐந்து மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் எழுந்து, பெரியளவில் நில மற்றும் உடைமைச் சேதங்களை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான மக்கள் சுனாமிக்குப் பலியானார்கள். பெருவெடிப்பைத் தொடர்ந்து உருவான சுழற்காற்றுக்குப் பலர் பலியானார்கள்.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற தம்போரா, அதற்கடுத்த நாள்களிலும் தொடர்ந்து சீறிக்கொண்டேயிருந்தது. அதன் கடைசிச் சீற்றமும் கடைசி வெடிப்பும் 1815 ஜூலை மாதத்தோடு முடிவடைந்தது. அதுவரை தன் தீக்குழம்புகளைக் கக்கிக் கொண்டேயிருந்த தம்போராவின் சீற்றத்துக்குப் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை தெளிவாகக் கிடைக்கவில்லை என்றாலும், அதுவும் சில ஆயிரங்களில் இருக்கும் என்று உறுதியாகச் சொல்லப்படுகிறது. எரிமலை வெடித்தபோது வெளியான சாம்பல் நுண்துகள்கள் வளிமண்டலத்தில் மற்ற வாயுக்களோடு சேர்ந்து மேகங்களாகச் சில ஆண்டுகளுக்குத் தேங்கிவிட்டன. அந்தப் புகைத்திரள் கிட்டத்தட்ட 1,300 கிலோமீட்டர் வரை பரவி, மொத்த கிழக்கிந்தியப் பகுதியையுமே இருளுக்குள் மூழ்கடித்தது.

தம்போரா எரிமலை
தம்போரா எரிமலை
Haraldur Sigurdsson- University of Rhode Island
Vikatan

உடனடிச் சேதங்கள் மட்டுமின்றி, வளிமண்டலத்தில் மேகங்களாகச் சூழ்ந்திருந்த சாம்பல் புகை அடுத்துவந்த நாள்களில் பருவகாலங்களைச் சிதைத்தது; உணவு உற்பத்தியைக் குறைத்தது, பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஒரு பேரிடர், பல்வேறு துணைப் பேரழிவுகளை உண்டாக்கியது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீடித்த இந்தப் பேரழிவுக் காலத்தின் சேதங்களை அன்டார்டிக்காவுக்கு அருகிலிருந்து வடக்கு அரைக்கோளத்தில் இங்கிலாந்து வரையிலுமே பார்க்கமுடிந்தது.

தம்போரா எரிமலை 1815-ம் ஆண்டு வெடித்த பின்னர், இன்றைய தேதி வரை மூன்று முறை வெடித்துள்ளது. பெருவெடிப்பு முடிந்த அடுத்த நான்கே ஆண்டுகளில் மீண்டும் வெடித்துப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பின்னர், 1880-ம் ஆண்டு வெடித்தது. இவற்றுக்குப் பின், 87 ஆண்டுகள் கழித்து 1967-ம் ஆண்டு வெடித்தது.

கடந்த 2011-ம் ஆண்டு, இந்தோனேசியாவில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மீண்டும் தம்போரா வெடிக்குமென்று எச்சரிக்கப்பட்டது. எச்சரிக்கை வந்த நேரத்திலேயே புகைமூட்டம் 4,600 அடிகள் உயரத்துக்கு அதிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்தது. அதனுடைய தொடர் இயக்கத்தால் மீண்டும் வெடிக்கும் என்று மட்டுமின்றி, அந்த இயக்கத்தின் வீரியத்தால் மீண்டுமொரு கோடையற்ற ஆண்டுகூட வரலாம் என்ற அச்சமும் அந்தப் பகுதி மக்களை பீடித்தது. எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதிர்ஷ்டவசமாக, எதுவும் நிகழவில்லை. தம்போரா புகையை மட்டுமே கக்கிவிட்டு, அடங்கிவிட்டது.

எரிமலை வெடிப்பு
எரிமலை வெடிப்பு
pixabay
95 வருடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த எரிமலை... புதிய கோணத்தில் கிடைத்த ஆச்சர்ய புகைப்படம்!

இன்றளவும் சுற்றுலாப் பயணிகள் தம்போராவுக்குச் செல்கிறார்கள். அந்த எரிமலை மீது ஏறுகிறார்கள். அனைவராலும் ஏறக்கூடிய அளவுக்கு அவ்வளவு எளிதாக அந்த மலைப்பகுதி இல்லையென்றாலும், உறுதியான ஆரோக்கியமான உடலமைப்பு கொண்டவர்களுக்கு அது ஒரு சாகசப் பயணமாக இருக்கிறது. சும்பாவா தீவில் வாழும் மக்கள், அந்தப் பேரிடரை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் `உலகத்தை வரவேற்கும் தம்போரா (Tambora Greets the World)' என்ற பெயரில் ஏப்ரல் 12-18 வரை ஏழு நாள்களுக்குக் கொண்டாடுகிறார்கள்.

2011-ம் ஆண்டுக்குப் பிறகு, இன்று வரை தம்போரா தூக்கத்திலிருப்பதாகவே கருதப்படுகிறது. எத்தனையோ எரிமலைகள் இன்று இயக்கத்தில் இல்லை என்றும் மரணமடைந்துவிட்டதாகவும் (Dead Volcanoes) அழைக்கப்படுகின்றன. ஆனால், தம்போரா இன்னமும் உயிர்ப்போடுதான் இருக்கிறது. இந்தோனேசியா, பல்வேறு கண்டத்தகடுகள் ஒன்றிணையும் பகுதியாக இருப்பதால், அங்கு சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற பேரிடர்கள் அதிகம் ஏற்படுகின்றன. தம்போராவும் இன்னும் செயல்பாட்டிலேயே இருப்பதால், மீண்டும் ஏதேனும் பெரிய நிலவியல் அதிர்வுகளின் தூண்டுதலால், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். அதனால், தம்போரா தொடர்ச்சியான கண்காணிப்பிலேயே இருந்துவருகிறது.

நெருப்புக் குழம்பு
நெருப்புக் குழம்பு
pixabay
மனித வரலாற்றில் மறக்க முடியாத மிகப்பெரிய பேரழிவை உண்டாக்கிய தம்போரா இன்றளவும் உயிர்ப்போடுதான் இருந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |
அடுத்த கட்டுரைக்கு