Published:Updated:

இயற்கை சீற்றத்தினால் இந்தியாவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் எவ்வளவு தெரியுமா? #VikatanInfographics

இயற்கை சீற்றங்கள்
இயற்கை சீற்றங்கள் ( Vikatan Infographics )

இந்தியாவில் ஏற்படும் ஒட்டுமொத்த இறப்புகளில் 1.7 சதவிகித இறப்புகள், இயற்கைச் சீற்றங்களினால் மட்டுமே ஏற்படுகின்றன.

உலகம் முழுவதும் ஏதேனும் ஓர் இடத்தில், இயற்கையின் பாதிப்புகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக, இயற்கைச் சீற்றங்களினால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. உயிரிழப்பைவிட, நான்கு மடங்கு பொருளாதாரச் சேதமும் ஏற்படுகிறது. பலர், வீடுகளையும் வாழ்விடங்களையும், வளர்ப்பு உயிரினங்களையும் உறவினர்களையும் இழந்து தவிக்கின்றனர்.

Representational Image
Representational Image

ஓர் இயற்கைச் சீற்றம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்று கூறுபவர்கள் ஏராளம் உண்டு. இயற்கைச் சீற்றத்தினால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பரிதவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மட்டுமே தெரியும், இயற்கையின் பாதிப்புகளைப் பற்றி. பனிச்சரிவு, குளிர், புயல், சூறாவளிக் காற்று, நிலநடுக்கம், வெள்ளம், வெப்பம், நிலச்சரிவு, மின்னல், கனமழை, காட்டுத் தீ எனப் பல்வேறு விதமான இயற்கைச் சீற்றங்களால் ஒவ்வொரு வருடமும் மனிதன் பாதிப்புக்கு உள்ளாகிறான்.

இவையனைத்துக்கும் முக்கியக் காரணம், பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் பெருகிவரும் மக்கள் தொகைதான். மக்கள்தொகை பெருக்கத்தினால் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு, இயற்கையின் கோபத்துக்கு ஆளாகின்றனர். இந்தியாவில் உள்ள மொத்த வனப்பரப்பளவு 712,249 சதுர கி.மீட்டராக உள்ளது. இது, இதற்கு முன் இருந்த பரப்பளவைவிட மிகவும் குறைவு.

Representational Image
Representational Image
Vikatan

புவியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாகவே வெள்ளம், சூறாவளி, வறட்சி, விவசாயப் பாதிப்பு, நீர்ப் பற்றாக்குறை, காட்டுத் தீ எனப் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. பருவநிலை மாற்றம் காரணமாக கடல் நீர்மட்டமும் உயர்ந்துவருகிறது. இதனால் வெள்ளம், சுனாமி போன்ற பல்வேறு பாதிப்புகள் நிகழ்கின்றன. இந்தியாவில், கடந்த 5 வருடங்களில் இயற்கை சீற்றங்களால் மட்டும் 53,429 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 2014-ல் மட்டும் 20,201 பேர் உயிரிழந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மேலும், 2018-ம் ஆண்டில் பனிச்சரிவு, குளிர், புயல், சூறாவளிக் காற்று, நிலநடுக்கம், வெள்ளம், வெப்பம், நிலச்சரிவு, மின்னல், கனமழை, காட்டுத் தீ போன்றவற்றால் 6,891 பேர் உயிரிழந்துள்ளனர். 2017 -ஐக் காட்டிலும் -3.5 சதவிகித இறப்புகள் குறைந்திருந்தாலும், இறப்புகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

Representational Image
Representational Image

இந்தியாவில், 14 வயதுக்குள் 6.6 சதவிகிதம். அதாவது 454 பேரும், 18 வயதுக்குள் 456 பேரும், 30 வயதுக்குள் 1,361 பேரும், 45 வயதுக்குள் 1,755 பேரும், 60 வயதுக்குள் 1,693 பேரும், 60 வயதுக்கு மேல் 1,172 பேரும் இறந்துள்ளனர். இதில் ஆண்கள் 5,158 பேரும், பெண்கள் 1,715 பேரும், திருநங்கைகள் 18 பேரும் அடங்குவர். இதில் கவலை என்னவென்றால், இந்தியாவில் மின்னல் தாக்கி மட்டும் 2,357 பேர் இறந்துள்ளது வேதனையான விஷயம். அதாவது, 34.2 சதவிகிதம் பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை சூறாவளிக் காற்று, நிலச்சரிவு, மின்னல் போன்ற இயற்கை நிகழ்வுகளால் 179 பேர் இறந்துள்ளனர். இந்திய அளவில், இயற்கையின் சீற்றத்தினால் ஒடிசாவில்தான் அதிக நபர்கள் இறந்துள்ளனர். அதாவது, 1,196 பேர். அதேபோல் பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அதிக நபர்கள் இறந்துள்ளதாக NCRB அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் ஏற்படும் ஒட்டுமொத்த இறப்புகளில் 1.7 சதவிகித இறப்புகள், இயற்கை சீற்றங்களினால் மட்டுமே ஏற்படுகிறது.
National Crime Records Bureau
இயற்கை சீற்றங்கள்
இயற்கை சீற்றங்கள்
VikatanInfographics

ஒவ்வொரு நாட்டிலும், குறிப்பாக இந்தியாவில் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும், இயற்கையைப் பாதுகாக்கவும் பல்வேறு விதமான திட்டங்கள் போடப்பட்டு, நடைமுறையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த விழிப்புணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. நாம் வாழும் இந்தப் பூமியைப் பாதுகாக்கவும் உயிரிழப்பைத் தடுக்கவும், தானாக முன்வந்து இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.

80 கோடி உயிரினங்களை அழித்த ஆஸ்திரேலியக் காட்டுத் தீ... உலகுக்கு உணர்த்துவது என்ன?
இயற்கை சீற்றங்கள் அனைத்தும் மனித சக்திகளுக்கு அப்பாற்பட்டவை. அதனை மாற்ற முடியாது. ஆனால், இயற்கையைப் பாதுகாக்க மனிதனால் மட்டுமே முடியும்.
அடுத்த கட்டுரைக்கு