Published:Updated:

`10 ஆண்டுகளுக்குப் பிறகான துயரம் இது!' - துண்டிக்கப்பட்ட அவலாஞ்சி; ஊட்டியைப் புரட்டிப்போட்ட மழை

ரா.சதீஸ்குமார்
கே.அருண்

நீலகிரியில் தொடரும் கன மழையால், 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது.

கூடலூர் சாலையில் ஏற்பட்டுள்ள பிளவு
கூடலூர் சாலையில் ஏற்பட்டுள்ள பிளவு ( கே.அருண் )

நீலகிரி மாவட்டத்தில், வழக்கமாக ஜூன் மாதம் முதல் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும். கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவு மழை பொழியவில்லை. இந்த ஆண்டும் மிகத் தாமதமாகவே பருவமழை தொடங்கியது. அதுவும் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. ` வழக்கம்போல் இந்த ஆண்டும் தென்மேற்குப் பருவமழை பொய்த்துவிட்டது' எனக் கருதிய நிலையில்,

கூடலூரில் வீடுகளைச் சூழ்ந்துள்ள மழை வெள்ளம்
கூடலூரில் வீடுகளைச் சூழ்ந்துள்ள மழை வெள்ளம்
கே.அருண்

கடந்த 3-ம் தேதி லேசான தூறலுடன் மழை பெய்யத் தொடங்கியது. மெல்ல மெல்ல தீவிரம் அடைந்து, கடந்த நான்கு நாள்களுக்கும் மேலாக மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது. இடைவிடாது பெய்துவரும் மழையால், நான்காவது நாளாக ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி பகுதிகளில் இடைவிடாத மழை பெய்துவருகிறது. அவலாஞ்சியில் மட்டும் கடந்த நான்கு நாள்களில் 1617 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால், வறண்டுகிடந்த நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல், ஊட்டி கூடலூர் சாலை, பைக்காரா அருகே உள்ள சாலையில் பிளவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வீட்டுச் சுவர் இடிந்ததில் பலியான முதியவர்
வீட்டுச் சுவர் இடிந்ததில் பலியான முதியவர்
கே.அருண்

கூடலூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழையால் பாதிப்படைந்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர். ஊட்டி இத்தலார் பகுதியில், மழையால் வீடு இடிந்ததில் சென்னி என்கிற முதியவர் பலியானார்.

கூடலூரில், பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, இஞ்சி உள்ளிட்ட பயிர்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளன. மாவட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

குந்தா சாலையில் விழுந்த ராட்சத மரம்
குந்தா சாலையில் விழுந்த ராட்சத மரம்
கே.அருண்

தொடர்ந்து பெய்யும் மழையால், படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. கடுமையான குளிர் நிலவுகிறது. மழையுடன் பலத்தகாற்றும் வீசுவதால் மின் கம்பிகள் சேதமடைந்துவிட்டன. இதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. நீலகிரி மாவட்டத்தில், 2009-க்குப் பிறகு தற்போது கனமழை பெய்துவருகிறது. இடைவிடாது பெய்துவரும் மழையால், எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. கூடலூரில் 11 மீட்பு முகாம்கள், பந்தலூரில் 5 முகாம்கள் என 16 மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. குந்தா, கிளன்மார்கன் அணைகளில் தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புத்தூர்வயல் மற்றும் தேன் வயல் பகுதியைச் சேர்ந்த பழங்குடிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலைமையைச் சமாளிக்க, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.