Published:Updated:

`விளை நிலங்களில் வெள்ளம்... நீரில் மூழ்கிய மலைப் பயிர்கள்!’- நீலகிரியில் விவசாயிகள் கண்ணீர்

நீலகிரியில் ஐந்து நாள்களுக்குப் பிறகு மழை குறைந்து தற்போது மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. ஆனால், பெரும்பாலான விளைநிலங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

வெள்ளநீர்
வெள்ளநீர்

நீலகிரியில் கொட்டித் தீர்த்த கன மழையால் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியே வெள்ளக்காடாக மாறியது. 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகளும் சாலைகளில் சரிந்து விழுந்தன. இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை இரண்டு நாள்கள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்ற சீரமைப்புப் பணிக்குப் பின்னர் நேற்று காலை முதல் வாகனப் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

வெள்ளநீர்
வெள்ளநீர்

மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு இன்னும் சீரமைக்கப்படாத நிலையில் வருகின்ற 8-ம் தேதி வரை மலை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

5 நாள்களுக்கு மேலாக குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கன மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மலைக் காய்கறிப் பயிர்கள் நீரில் மூழ்கின.

அதிலும் குறிப்பாக கேத்தி பாலாடா, கோலனி மட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களை மூழ்கடித்து விவசாயிகளுக்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளநீர்
வெள்ளநீர்

ஏற்கெனவே ஆகஸ்ட் மாத பெருமழையில் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து மீள, விவசாயிகளுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை. கால்வாய் பராமரிப்பில் அலட்சியம் காட்டியதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் வெள்ள நீர் வடியாமல் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது

காய்கறி பாதிப்புகள் குறித்து விவசாயி மணி, "கேத்தி பாலாடா மற்றும் கோலணி மட்டம் இந்த இரு பகுதியில் ஓடக்கூடிய கால்வாய்கள் காட்டேரி அணையின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. கால்வாய் பராமரிப்பில் அரசு போதிய அக்கறை காட்டுவதில்லை, அதேசமயம் விவசாயிகளிடமும் போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தங்கு தடையின்றி நீர் செல்ல முடிவதில்லை. இதுபோன்ற பெருமழை சமயங்களில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த மழையின்போது ஏற்பட்ட பாதிப்புக்கே இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் பயிர்கள் அழுகி உள்ளன" என வேதனை தெரிவிக்கிறார்.

வெள்ளநீர்
வெள்ளநீர்

வெள்ளச் சேதம் குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது. "ஆகஸ்ட் மாதம் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி மதிப்பீடு செய்துள்ளோம். சமீபத்தில் பெய்த இந்த மழைக்கு எத்தனை ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் கணக்கெடுக்க உள்ளோம். மேலும், இழப்பின் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்" என இவ்வாறு கூறினர்.