Published:Updated:

`சாலையில் தொடர்ந்து சரியும் ராட்சத பாறைகள்!' -குன்னூரை புரட்டிப்போட்ட தொடர்மழை

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் தொடர்ந்து ராட்சத பாறைகள் விழுவதால், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது அசுர வேகத்தில் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலையில் சரிந்து விழுந்துள்ள ராட்சத பாறைகள்
சாலையில் சரிந்து விழுந்துள்ள ராட்சத பாறைகள்

நீலகிரி மாவட்டத்தில் நான்காவது நாளாக கனமழை பெய்து வரும் நிலையில் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இடைவிடாது பெய்துவரும் மழையின் காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

சாலையில் சரிந்து விழுந்துள்ள ராட்சத பாறைகள்
சாலையில் சரிந்து விழுந்துள்ள ராட்சத பாறைகள்

20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட மண்சரிவில் சிக்கித்தவித்த 6 பேரை மீட்புப்படையினர் பல மணிநேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

தொடர்ந்து, மண்சரிவு ஏற்பட்டு வருவதால் மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு குன்னூரில் கொட்டித் தீர்த்த கனமழையால் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கோத்தகிரி வழியாக வாகனங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

சாலையில் சரிந்து விழுந்துள்ள ராட்சத பாறைகள்
சாலையில் சரிந்து விழுந்துள்ள ராட்சத பாறைகள்

இரண்டாவது நாளாக இன்றும் இந்த மலைப்பாதையில் தொடர்ந்து ராட்சத பாறைகள் சரிந்துவிழுந்த வண்ணம் உள்ளன. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தீயணைப்பு, பேரிடர் மீட்புத் துறையினர், நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் எனக் கூட்டாக இணைந்து சாலை சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடுமையான பனி மூட்டத்துடன் தொடர்மழை பெய்து வருவதால் ஒரு சில இடங்களில் மீட்புப் பணிகள் தாமதமாகி வருகின்றன. ராட்சத பாறைகளை கம்ப்ரசர் மூலம் உடைக்க முடியாததால் வெடிவைத்து தகர்த்து அப்புறப்படுத்தி வருகின்றனர். குன்னூரில் அதிகபட்சமாக 132 மி.மீ மழையும் மாவட்டத்தில் அதிகபட்சமாக 790.8 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சாலையில் சரிந்து விழுந்துள்ள ராட்சத பாறைகள்
சாலையில் சரிந்து விழுந்துள்ள ராட்சத பாறைகள்

சாலை சீரமைப்பு குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடைவிடாமல் பெய்து வரும் மழையால் பல இடங்களில் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் சில இடங்களில் ராட்சத பாறைகள் விழுந்துள்ளன. உடனுக்குடன் சீரமைத்து வருகிறோம். சீரமைப்பு பணியில் 5 ஜேசிபி இயந்திரங்கள், பொக்லைன் இயந்திரங்கள், கம்ப்ரஸர் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. ஊழியர்களும் மழை, குளிர் பார்க்காமல் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்" என்றார்.