Published:Updated:

`நீலகிரியில் கனமழை; மூன்றாவது நாளாக மண்சரிவு!' - தனித்தீவாக மாறிய குந்தா

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 20-க்கும் அதிகமான இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்ததுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் விலை நிலங்கள் பாதிப்பு, மலை ரயில் சேவை நிறுத்தம், குந்தாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

Nilgiri heavy rain
Nilgiri heavy rain ( Arun.K )

கடந்த ஆகஸ்ட் மாத பெருமழை பேரிடரிலிருந்து மெல்ல மீண்டு வரும் நீலகிரியில் கடந்த 4 தினங்களில் 1,971.8 மி.மீ மழை கொட்டித்தீர்த்தது. தற்போது வரை தொடர்ந்து பெய்துவரும் மழையால் குன்னூர், குந்தா பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து மூன்றாவது நாளாகக் குந்தா சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டு மஞ்சூர் பகுதி தனித்தீவாக மாறியுள்ளது. இதனால் குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.

Nilgiri heavy rain
Nilgiri heavy rain

கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு இரண்டு வீடுகள் பாதிக்கப்பட்டன. இதே போல் பர்லியார் ஊராட்சிக்கு உட்பட்ட லேம்ஸ்ராக் பகுதியிலும் வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. கன மழை தொடரும் என்பதால் வரும் 20-ம் தேதி வரை மேட்டுப்பாளையம் குன்னூர் வரை இயக்கப்படும் மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எல்லநள்ளி, அருவங்காடு, கோடேரி, வட்டப்பாறை உள்ளிட்ட 10-க்கும் அதிகமான இடங்களில் சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்களை அகற்றும் பணியில் மீட்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டி, குன்னூர், குந்தா சுற்றுவட்டார பகுதிகளில் 20-க்கும் அதிகமான இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

Nilgiri heavy rain
Nilgiri heavy rain

ஜே.சி.பி இயந்திரங்களைக்கொண்டு மண்ணை அகற்றி சாலைகளை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் மேக மூட்டம் நிலவுவதால், வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர். பெரும்பாலான வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே இயக்கி வருகின்றனர்.

தொடர்ந்து மழை பெய்தால், குந்தா, ஊட்டி மற்றும் குன்னூர் தாலூகாவுக்குட்பட்ட பகுதிகளில் பெரிய அளவிலான மண் சரிவுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Nilgiri heavy rain
Nilgiri heavy rain

சாலை சீமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலை  துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``மாவட்டத்தில் அதிகபட்சமாக குந்தா பகுதியில் நேற்று  120 மி.மீ மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து  மூன்றாவது நாளாக  குந்தா  பகுதியில்  பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இவற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இன்று மதியத்துக்குள் ஊட்டி குந்தா சாலை சீரமைத்து போக்குவரத்து சரிசெய்யப்படும். அதே போல் சாலையில் மரங்கள் விழுந்தாலும் உடனடியாக அகற்றி வருகிறோம்" என்றார்.

Nilgiri heavy rain
Nilgiri heavy rain

மீட்புப் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது "தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மாவட்ட நிர்வாகமும் இணைந்து பாதிப்பு ஏற்பட்ட இடங்களுக்குச் சென்று உடனடியாக சீரமைத்து வருகிறோம். மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்" என்றனர்.