Published:Updated:

`இடைவிடாது கொட்டும் மழை; 4 மாதத்தில் 3 -வது முறை!’ - மீண்டும் வெள்ளக்காடான நீலகிரி

4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை, மலை ரயில் சேவை ரத்து, குன்னூர் மேட்டுப்பாளையம் சாலைப் போக்குவரத்து நிறுத்தம், பல நூறு ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் வெள்ளக்காடாகிய சோகம், மண்சரிவு அபாயத்தில் நீலகிரி.

வெள்ள நீர் சூழ்ந்த விளைநிலம்
வெள்ள நீர் சூழ்ந்த விளைநிலம்

நீலகிரி மழை வரலாற்றில் 2019-ம் ஆண்டு மிக முக்கிய ஆண்டாக கருதப்படுகிறது. கடந்த 2009-ம் ஆண்டுக்குப் பிறகு பெரும் மழையை பார்த்திராத நீலகிரியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் முதல் தற்போதுவரை நான்கு மாதங்களாக பெருமழையும், பேரிடரும் தொடர்கதையாகி வருகிறது.

மழையால் ஏற்பட்ட மண்சரிவு
மழையால் ஏற்பட்ட மண்சரிவு

ஆகஸ்ட் மாத பெருமழையிலிருந்து மீள்வதற்குள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு குன்னூரில் கொட்டித் தீர்த்த கனமழையால் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு நகரை உருக்குலையச் செய்தது.

இந்த நிலையில், தற்போது வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரியிலும் கடந்த மூன்று தினங்களாக இடைவிடாது சாரல் மழை பெய்துவந்தது. ஆனால், இன்று அதிகாலை முதல் குன்னூர், கோத்தகிரி, குந்தா சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது.

மழையால் ஏற்பட்ட மண்சரிவு
மழையால் ஏற்பட்ட மண்சரிவு

இந்த மழையின் காரணமாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 3-ம் தேதி வரை மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் அருகே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டு கோத்தகிரி வழியாக வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

ஊட்டி குன்னூர் சாலையில் அருவங்காடு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கேத்தி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல நூறு ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

வெள்ள நீர் சூழ்ந்த விளைநிலம்
வெள்ள நீர் சூழ்ந்த விளைநிலம்

நீலகிரியில் அதிகபட்சமாக குன்னூரில் 96 மி.மீ மழையும், மாவட்டத்தில் மொத்தம் 377.8 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்துவருவதால் மண்சரிவு அபாயமும் நீடிப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.