Published:Updated:

` வெள்ள பாதிப்பைவிட அரசின் செயல் வேதனையளிக்கிறது!' - 1 லிட்டர் கெரசினால் கலங்கும் நீலகிரி மக்கள்

ரா.சதீஸ்குமார்
கே.அருண்

பெருமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நீலகிரி மக்களுக்கு வழக்கத்தைவிட குறைந்த அளவு குடிமைபொருள்கள் வழங்கிய சம்பவம் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மண்ணெண்ணெய் வாங்கிச் செல்லும் முதியவர்
மண்ணெண்ணெய் வாங்கிச் செல்லும் முதியவர்

நீலகிரி மாவட்டத்தில் இந்த மாதம் முதல் வாரத்தில், 100 ஆண்டுகளில் மக்கள் கண்டிராத அளவுக்குப் பெருமழை கொட்டித் தீர்த்தது. இரண்டே நாளில் கொட்டித்தீர்த்த மழைக்கு மாவட்டத்தின் பல பகுதிகள் நிலைகுலைந்து போயின. அதிலும் குறிப்பாக குந்தா, ஊட்டி, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் 5,000 பேர் தங்களுடைய வீடுகளை இழந்தனர். இவர்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்
ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்

மழை வெள்ளத்தால் ரூ.130 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. வீடுகளை இழந்த மக்களுக்கு தற்காலிகக் குடியிருப்புகளைக் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மழையால் உடைமைகளை இழந்தவர்களுக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் பெருமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நீலகிரி மக்களுக்கு வழக்கமான அளவைக் குறைத்து 1 லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கியதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

குன்னூர் பகுதியைச் சேர்ந்த கவிதாவிடம் பேசினோம். ``மழைக் காலங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படும். விளக்கு பற்றவைக்க மண்ணெண்ணெய்யை மட்டுமே நம்பி உள்ளோம். மேலும், விறகு அடுப்புகளை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், மழைக்காலங்களில் விறகு கிடைப்பதில்லை. எனவே, மண்ணெண்ணெய் அடுப்புகளையே பயன்படுத்துகிறோம். ஏற்கெனவே ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் போதுமான அளவு கிடைப்பதில்லை. மழையால் பாதிக்கப்பட்ட எங்களுக்குக் கூடுதலாக வழங்காவிட்டாலும் பரவாயில்லை. குறைத்து வழங்கியுள்ளனர். ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யை வைத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றார் வேதனையுடன்.

இந்த மாதம் எங்களுக்கு மண்ணெண்ணெய் குறைவாகவே வந்தது. மக்களுக்கு ஒரு லிட்டர் மட்டுமே வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
டி.ஆர்.ஓ நிர்மலா

கேத்தி பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் கூறுகையில், ``மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் நீலகிரியில் மண்ணெண்ணெய் பயன்பாடு அதிகம் உள்ளது.10 லிட்டரிலிருந்து படிப்படியாகக் குறைத்து 2 லிட்டர் வழங்கப்பட்டுவந்தது. தற்போது ஒரு லிட்டர் வழங்குகின்றனர். இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

உதகை நகர விழிப்புணர்வு சங்கத் தலைவர் ஜனார்த்தனன் கூறுகையில், ``மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நீலகிரி மக்களுக்கு துணை முதல்வர், அமைச்சர் எனப் பலரும் நேரில்வந்து நிவாரணங்களை வழங்குவது போன்று விளம்பரம் செய்துவிட்டுப் போனார்கள். ஆனால், அடிப்படை தேவை பொருள்களைக்கூட வழங்கவில்லை. ரேஷன் கடைகளில் வழக்கமாக வழங்கும் பொருள்களை இந்த மாதம் குறைத்தே வழங்கியுள்ளனர். இது மக்களை வஞ்சிக்கும் செயல்” என்றார் குமுறலுடன்.

மண்ணெண்ணெய், அரிசியுடன் செல்லும் முதியவர்
மண்ணெண்ணெய், அரிசியுடன் செல்லும் முதியவர்

இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலாவிடம் பேசினோம். ``இந்த மாதம் எங்களுக்கு மண்ணெண்ணெய் குறைவாகவே வந்தது. மக்களுக்கு ஒரு லிட்டர் மட்டுமே வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடுத்த மாதம் முதல் வழக்கமாக வழங்கப்படும்” என்றார் உறுதியாக.