Published:Updated:

எப்போ கொட்டித் தீர்க்கப்போகுதோ?! - நீலகிரியில் தொடரும் ரெட் அலர்ட் அச்சம்

முகாம்களில் தஞ்சம் புகுந்த மக்கள், பள்ளிக் கட்டடம் இடிந்து விபத்து, மலை ரயில் சேவை ரத்து, பேருந்து நிலையத்தின் மீது மண் சரிவு, பனிமூட்டத்தால் பேருந்து விபத்து என ரெட் அலர்ட்டால் மொத்த மாவட்டமும் அச்சத்தில் உள்ளது.

school building
school building ( Arun.K )

நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் மழை தீவிரமடையாமல் உள்ளது. எப்போது பெருமழை கொட்டித்தீர்க்குமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்து வருகின்றனர்.

land slip
land slip

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் துவக்கத்தில் கொட்டித்தீர்த்த பெருமழையைத் தொடர்ந்து தற்போதுவரை அவ்வப்போது இடைவிடாது மழை பெய்துவருகிறது. அந்த பெருமழை பேரிடரிலிருந்து மெல்ல மீண்டுவரும் நிலையில் தற்போது ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பெருமழையையும் எதிர்கொள்ளத் தயாராகினர். அதன்படி முதல் கட்டமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு பள்ளிகள் தற்காலிக மீட்பு முகாமாக செயல்படத் துவங்கின.

283 இடங்கள் வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தனர். முதல் கட்டமாக குன்னூர் பாரதி நகர் பகுதிகளில் மண்சரிவு அபாயம் உள்ள வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு உலிக்கல் பேரூராட்சி மீட்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

land slip
land slip

மேலும், மேலூர் ஹொசஹட்டி மேல்நிலைப்பள்ளி கட்டடத்தின் சுவர் இடிந்து சேதம் அடைந்தது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இதேபோல் கோத்தகிரி பேருந்து நிலையத்தின் பின்புறம் ஏற்பட்ட மண்சரிவில் கற்கள் சரிந்து பேருந்து நிலையத்தின் மீது விழுந்தது. ஆனால், பயணிகள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

 `283 நிலச்சரிவு அபாய பகுதிகளில் 48 குழுக்கள்!' - இரண்டாம் பேரிடரை எதிர்கொள்ளத் தயாராகும் நீலகிரி

குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை கடுமையான பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்துவந்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று காட்டேரி பூங்கா அருகில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பேருந்து சாலையோரம் நின்றுவிட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Bus Accident
Bus Accident

நீலகிரி மலை ரயில் தண்டவாளத்தில் மண் சரிந்து விழுந்ததால், கடந்த 19-ம் தேதி முதல் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டு வரும் 25-ம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை தீவிரம் அடையும் முன்பே பாதிப்புகள் தொடரும் நிலையில், மிகக் கனமழை பெய்தால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் நீலகிரி மக்கள் உள்ளனர்.

மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ``நீலகிரியில் 283 இடங்களில் 62 இடங்கள் மிக ஆபத்தானவையாகக் கண்டறியப்பட்டு மக்களை வெளியேற்ற முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. மிகக் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறி ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் மழை தீவிரமடையாமல் உள்ளது. எப்போது பெருமழை கொட்டித்தீர்க்குமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்து வருகின்றனர்.

land slip
land slip

நேற்று முதலே நிலைமையை சமாளிக்க அனைத்து துறை அதிகாரிகளின் தலைமையில் 48 குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழை சற்று குறைந்து காணப்பட்டது. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாராக உள்ளன" என்றனர்.