Published:Updated:

அதி தீவிரப் புயலாகும் நிவர்; 15 மாவட்டங்களில் கனமழை - காற்று 155 கி.மீ வேகத்தில் வீசலாம்!

சென்னை மழை
சென்னை மழை ( வி.ஸ்ரீனிவாசுலு )

சென்னையிலிருந்து 300 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கும் நிவர் புயல், அதிதீவிரப் புயலாக மாறி இன்று இரவு புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் நிவர் புயல் மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்ந்துவருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயலால், தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்துவருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்துவருகிறது. இதனால், பல இடங்களில் சாலைகளில் நீர் தேங்கியிருக்கிறது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக, புதுச்சேரி அரசுகள் முடுக்கிவிட்டிருக்கின்றன.

சென்னை மழை
சென்னை மழை
ராகேஷ் பெ

இந்தநிலையில், வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ``நிவர் புயல், சென்னைக்குத் தென்கிழக்கே 300 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்குத் தென்கிழக்கே சுமார் 250 கி.மீ தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 240 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டிருக்கிறது. கடந்த ஆறு மணி நேரத்தில் 11 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்துவருகிறது. தற்போது காற்றின் வேகம் 105 முதல் 115 கி.மீ ஆக இருக்கிறது. இது இன்று மதியம் அதி தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும். வடமேற்குத் திசையில் நகர்ந்து இன்று இரவு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கலாம். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாள்களுக்குப் பரவலாக மழைப்பொழிவு இருக்கும்.

2015-க்குப் பின் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி! - நேரில் ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் பழனிசாமி

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும். கனமழையைப் பொறுத்தவரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழைப்பொழிவு இருக்கக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது.

சென்னை மழை
சென்னை மழை
வி.ஸ்ரீனிவாசுலு

பலத்த காற்றைப் பொறுத்தவரை புயல் கரையைக் கடக்கும்போது நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 130 முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். சமயங்களில் 155 கி.மீ வேகத்திலும் காற்று வீச வாய்ப்பிருக்கிறது. மேலும், திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் மணிக்கு 100 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். கடல் இன்று இரவு வரை கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் 16 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது’’ என்று அவர் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு