வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் நிவர் புயல், அதி தீவிரப் புயலாக புதுச்சேரிக்கு அருகே இன்று இரவு கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், புயல் கரையைக் கடந்த உடனே வலுவிழந்துவிடாது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. புயல் கரையைக் கடந்த பின்னர் 6 முதல் 12 மணி நேரத்துக்கு அதன் பாதிப்பு இருக்கும் என்றும் அதன் பிறகு புயல் படிப்படியாக வலுவிழக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ``தற்போதைய நிலவரப்படி நிவர் புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 250 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்குத் தென்கிழக்கே சுமார்190 கி.மீ தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 180 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டிருக்கிறது. இது தொடர்ந்து அதி தீவிரப் புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடக்கக்கூடும்.
புயல் கரையைக் கடந்த பின்னர், கடலோர மாவட்டங்களில் ஆறு மணி நேரத்துக்கு புயல் வலுவாக இருக்கும். அதன் பின்னர், புயல் படிப்படியாக வலுவிழக்கும். இதன் காரணமாக ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நாளை கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும். சூறாவளிக் காற்று மணிக்கு 65 முதல் 75 கி.மீ வேகத்திலும், சமயங்களில் 85 கி.மீ வேகத்திலும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் வீசலாம்.

திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை முற்பகல் முதல் பிற்பகல் வரை பலத்த காற்று மணிக்கு 55 முதல் 65 கி.மீ வரையும், சில நேரங்களில் 75 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். பலத்த காற்று, மழையின் காரணமாக குடிசை வீடுகள், மின்சாரம், தொலைத் தொடர்பு சேவைகள் பாதிக்கப்படலாம். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழக்கூடிய நிலை ஏற்படும். வாழை மரங்கள், பப்பாளி மரங்கள் போன்ற தோட்டப் பயிர்கள் பாதிக்கப்படலாம். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அரசு, பேரிடர் மேலாண்மைத்துறை தரும் அறிவுரைகளைப் பின்பற்ற பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. நேப்பியர் பாலம் தொடங்கி கலங்கரை விளக்கம் வரையிலான காமராஜர் சாலையில் முழுமையாக போலீஸார் போக்குவரத்துக்குத் தடைவிதித்திருக்கிறார்கள். அதை ஒட்டியுள்ள சாலைகளிலும் இருசக்கர வாகனங்கள் முதல் அனைத்து வகையான வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. புயல் முன்னெச்சரிக்கையாக சென்னை தியேட்டர்களில் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும், புயல் பாதிப்பைப் பொறுத்து திரைப்படக் காட்சிகளைத் திரையிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.