Published:Updated:

`கண் முன்னாலேயே வீடுகள அடிச்சுகிட்டு போயிடுச்சு!' - முகாமில் இருக்கும் ஊட்டி மக்கள் கண்ணீர்

ரா.சதீஸ்குமார்
கே.அருண்

பெருமழை வெள்ளத்தில் பாதிக்கபட்ட ஸ்ரீ ராம் நகர் கிராம மக்கள் கடந்த 20 நாள்களாக மீட்பு முகாமில் தஞ்சமடைந்துவருகின்றனர்.

Ooty Sriram nagar people
Ooty Sriram nagar people ( கே.அருண் )

நீலகிரி மாவட்டத்தில் இந்த மாதம் 7, 8 ஆகிய தேதிகளில் கடந்த நூறு ஆண்டுகளில் கண்டிராத பெருமழை பெய்தது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிப்படைந்தன. அதிலும் குறிப்பாக அவலாஞ்சி பகுதியில் மட்டும் இரண்டே நாள்களில் 2,000 மி.மீ மழை கொட்டித்தீர்த்து.

Sri Ram Nagar
Sri Ram Nagar

இந்தப் பெருமழைக்கு மாவட்டத்தில் 7 பேர் பலியாகினர். 5,000 பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கின. மறுசீரமைப்பு பணிகளுக்கு 130 கோடி ரூபாய் தேவைப்படும் என மாவட்ட நிர்வாகம் மதிப்பிட்டது.

மழை வெள்ளத்தாலும் மண் சரிவுகளாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்றுவருகிறது. மின் விநியோகம், போக்குவரத்து போன்றவை சீரமைக்கப்பட்டுள்ளது. பெருமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டம் தற்போது இயல்பு நிலைக்கு மெல்ல மீண்டு வருகிறது. 155 மீட்பு முகாம்களில் 5,000 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

Ooty Sri Ram Nagar
Ooty Sri Ram Nagar

ஓரளவுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொண்டு பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர். ஆனால், பெருமழைக்குப் பாதிக்கப்பட்ட ஸ்ரீராம் நகர் கிராம மக்கள் குந்தா கன்னேரி மந்தனை பகுதியில் கடந்த 20 நாள்களாக மீட்பு முகாமில் தவித்து வருகின்றனர். மீட்பு முகாமில் ஒரு கிராமமே ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

மண் சரிவில் வீட்டை இழந்த துளசி அம்மாள் கூறுகையில், ``ரெண்டு நாளா விடாம அடைமழை பெஞ்சது. 30 குடும்பம் இருக்குற எங்க ஊர்ல எல்லா இடத்துலயும் மண்ணுக்குள்ள இருந்து தண்ணி பெருக்கெடுத்து ஓடுச்சி. கண் முன்னால மலையே சரிஞ்சு வர்றமாதிரி மண் சரிஞ்சு வந்துச்சு. பல வீடுகள அடிச்சு பேத்துகிட்டுப் போயிடிச்சு. உயிர் பிழைச்சா போதும்னு ஊர் மக்கள் எல்லாரும் கயிற கட்டி ஆத்த கடந்து முகாமுக்கு வந்துட்டோம்” என்றார்.

Ooty Camp
Ooty Camp

20 நாள்களாக முகாமில் வசிக்கும் புஷ்பா கூறுகையில், ``உயிர் பிழைச்சா போதும்னு ஊரைவிட்டு இங்க வந்து தங்குனோம். சாப்பாடு துணிமணிக்கு எந்தக் குறையும் இல்ல. யார் யாரோ எங்கிருந்தோ கொண்டுவந்து தர்றாங்க. இந்த முகாம்ல ஒரு கிராமமே ஒரு குடும்பமாக வாழ்கிறோம். இப்போதைக்கு எந்தக் குறையும் இல்ல. நாங்க எல்லோரும் வேலைக்குப் போயி உழைச்சு சாப்பிடணும்னு விரும்புறோம். ஆனால், எங்களுக்கு நிரந்தரமா தங்க ஒரு வீடு எங்க ஊர் மக்களுக்கு வேண்டும்னு கேட்டிருக்கோம். சீக்கிரமா ஏற்பாடு செஞ்சு கொடுத்தா போதும்” என்றார்.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், “மழை வெள்ளத்துக்கு ஸ்ரீராம் நகர் கிராமம் கடுமையாகப் பாதித்தது. பலரது வீடுகள் சேதமடைந்தன. சரிவுப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கிராமத்து மக்கள் அனைவருக்கும் எமரால்டு பகுதியில் தற்காலிக மாற்றுக் குடியிருப்பு கட்டும் பணிகள் நடைபெற்றுவருகிறது. முகாம்களில் உள்ள மக்களை விரைவில் மாற்றுக் குடியிருப்பில் குடியமர்த்த உள்ளோம்” என்றனர்.