Published:Updated:

` கஜாவுக்கு கைகொடுத்தீர்கள்; நீலகிரிக்கும் உதவுங்கள்!' -புதுக்கோட்டையை வலம்வரும் `515' கணேசன்

மணிமாறன்.இரா
Vengadesh R

நீலகிரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, புதுக்கோட்டை முழுவதும் தனது அம்பாசிடரில் சுற்றிச்சுற்றி நிதி திரட்டி வருகிறார், `515' கணேசன்.

`515' கணேசன்
`515' கணேசன் ( ஆர்.வெங்கடேஷ் )

புதுக்கோட்டை அருகே உள்ள ஆலங்குடியைச் சேர்ந்தவர், `515' கணேசன். இவரது இலவச கார் சேவைகுறித்து பொதுமக்கள் நன்கு அறிவர். பிரசவம், விபத்து போன்ற நேரங்களில் இவரது அம்பாஸிடர் கார் 108 ஆம்புலன்ஸ் போல வந்து நிற்கும். பல நேரங்களில் அமரர் ஊர்தியாகவும் அம்பாஸிடர் கார் மக்களுக்குப் பயன்படுகிறது. அனைத்துமே இலவசம்தான். 74 வயதானாலும் யாருக்கேனும் அவசர உதவி என்றால், இளைஞரைப் போல முதல் ஆளாக வந்து நிற்பது கணேசனின் வழக்கம்.

கணேசனின் அம்பாஸிடர் கார்
கணேசனின் அம்பாஸிடர் கார்

கார் சேவை மட்டுமின்றி, ஒவ்வொரு இயற்கைப் பேரிடரின் போதும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார். சுனாமி, ஓகி புயல், தானே புயல், கஜா புயல் போன்ற பேரிடர்களில், கணேசனின் பங்கு அதிகம்.

ஒரே வாரத்தில் 3000 மி.மீ மழை... நீலகிரி கனமழை நமக்கு உணர்த்துவது என்ன?

கஜா புயலின் தாக்கத்தால் இவரது வீடு முழுமையாகப் பாதிக்கப்பட்டபோதும், அதைப்பற்றி கவலைப்படாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி கேட்டு ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், மாவட்டம் முழுவதும் தீவிரமாகச் சுற்றி, நிதி திரட்டிவருகிறார்.

நிவாரண நிதி திரட்டும் பணி
நிவாரண நிதி திரட்டும் பணி

`` நமது உறவுகள் அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். அவர்களுக்கு, நம்மால் முடிந்த உதவியைச் செய்வோம், உதவுங்கள்" என்று பேசியவாறு உண்டியலைக் கையில் எடுத்துக்கொண்டு வலம்வருகிறார். கணேசனைப் பார்க்கும் பொதுமக்கள், தங்களால் இயன்ற நிதியைக் கொடுக்கின்றனர்.

காரணம், `கணேசனிடம் நிதி கொடுத்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுதாகப் போய்ச் சேர்ந்துவிடும்' என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த நம்பிக்கைதான், கணேசனின் தன்னலமற்ற சேவைக்கு பக்கபலமாக இருக்கிறது.