Published:Updated:

ராமநாதபுரம்: மழையில் இடிந்த வீடு... தன் உயிர் தந்து கர்ப்பிணி மனைவியை காப்பாற்றிய கணவர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராமநாதபுரம்: வீடு இடிந்து பலியான இளைஞர் சண்முகராஜ்
ராமநாதபுரம்: வீடு இடிந்து பலியான இளைஞர் சண்முகராஜ் ( உ.பாண்டி )

கர்ப்பிணி மனைவியை இடிபாடுகளில் இருந்து காப்பாற்றிய சண்முகராஜ் தன் உயிரைப் பறிகொடுத்த சம்பவம் ராமநாதபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மழையின் காரணமாக இடிந்து விழுந்த வீட்டினுள் இருந்து, கர்ப்பிணியான தன் மனைவியின் உயிரைக் காப்பாற்றிவிட்டு இடிபாடுகளில் சிக்கி இளைஞர் தன் உயிரை பறிகொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் ராமநாதபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சண்முகராஜ் உயிரைப் பறித்த வீடு.
சண்முகராஜ் உயிரைப் பறித்த வீடு.
உ.பாண்டி

ராமநாதபுரம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சண்முகராஜ் (20). அவ்வப்போது டிரம்ப் செட் வாசிக்கவும் செல்வார். இவரின் மாமன் மகள் சங்கீதா. இருவரின் வீடும் அருகருகே உள்ள நிலையில் சண்முகராஜுக்கும் சங்கீதாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்தக் காதலை இருவரது வீட்டிலும் ஏற்க மறுத்துவிடுவார்களோ என்ற அச்சத்தால் கடந்த 8 மாதங்களுக்கு முன் இருவரும் தங்கள் வீட்டைவிட்டு வெளியேறி வெளியூர் சென்று திருமணம் செய்துகொண்டனர்.

நாள்கள் செல்லச் செல்ல காதல் திருமணம் செய்துகொண்ட சண்முகராஜ் - சங்கீதா ஆகிய இருவர் மீதும் அவர்களின் குடும்பத்தினருக்கு இருந்த கோபம் மறைந்தது. இதனால் இரு வீட்டாரும் இந்தத் தம்பதியை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து தன் மனைவி சங்கீதாவுடன் சண்முகராஜ் ராமநாதபுரத்துக்கு திரும்பி வந்தார். இரு குடும்பத்தினரின் அரவணைப்புடன் உள்ளூரில் கூலி வேலைக்குச் சென்று வந்த சண்முகராஜ் வாழ்வில் புது மகிழ்வாக, சங்கீதா தாய்மை அடைந்த செய்தி தெரியவந்தது.

கர்ப்பிணி மனைவி சங்கீதா
கர்ப்பிணி மனைவி சங்கீதா
உ.பாண்டி

கடந்த 9-ம் தேதி காலையில்தான், சங்கீதா 3 மாத கர்ப்பம் என்ற மகிழ்ச்சி செய்தி அந்தக் குடும்பத்துக்குத் தெரியவந்திருக்கிறது. ஆனால், ராமநாதபுரம் பகுதியில் பெய்த அடைமழையால் அந்த மகிழ்ச்சி இரு நாள்கள்கூட நீடிக்காமல் போனது துயரம். 11-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு லோடு இறக்குவதற்காக வீட்டில் இருந்து சென்ற சண்முகராஜ், அதிகாலை 5 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அந்நேரத்தில் தன் மாமா வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மனைவி சங்கீதாவை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வந்த சண்முகராஜ், மழையில் நனைந்ததால் ஏற்பட்ட ஈரத்தை துவட்டிக்கொண்டு இருக்கும்போதே திடீரென வீட்டின் ஓடுகள் சரியும் சத்தம் கேட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் பதறிய தன் மனைவி சங்கீதாவை வீட்டுக்கு வெளியே தள்ளிவிட்ட சண்முகராஜ் தானும் வீட்டைவிட்டு வெளியேற முயன்றுள்ளார். ஆனால், அதற்குள்ளாக அவர்கள் குடியிருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் சண்முகராஜ் சிக்கிய நிலையில் அந்த வீட்டின் அடுத்து இருந்த இரு வீடுகளும் இடிந்து விழுந்து தரை மட்டமாகின. இதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சண்முகராஜை மீட்க முயன்றனர். ஆனால், அவரை சடலமாகவே மீட்க முடிந்தது. கர்ப்பிணி மனைவியை இடிபாடுகளில் இருந்து காப்பாற்றிய சண்முகராஜ் தன் உயிரைப் பறிகொடுத்த சம்பவம் ராமநாதபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

இடிந்த கிடக்கும் வீட்டின் முன் கணவரை பறிகொடுத்த சங்கீதா
இடிந்த கிடக்கும் வீட்டின் முன் கணவரை பறிகொடுத்த சங்கீதா
உ.பாண்டி

சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியான சண்முகராஜின் அம்மா கண்ணம்மா கூறுகையில், ``எனக்கு 3 பசங்க. கடைசி பையன் சண்முகராஜு. என்னோட தம்பி மகளை காதலிச்சு வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் செஞ்சுகிட்டான். முதல்ல கோபமா இருந்தாலும் முறைப்பொண்ணதானே கட்டிக்கிட்டான்னு சமாதானம் அடைஞ்சு இரண்டு பேர் வீட்லயும் அவங்கள ஏத்துக்கிட்டோம். இங்க வந்ததில இருந்து ராத்திரில லோடு வண்டிகள்ல பொருள்களை இறக்குற கூலி வேலைக்கு போய்க்கிட்டு சந்தோஷமா இருந்தான். சம்பவம் நடந்த அன்னைக்கு என் ரெண்டாவது பையன் குடும்பத்தோட நானும் கோயிலுக்குப் போயிருந்தேன். வீட்டுல என் மூத்த மகன், மருமக, பேரன்கள், கடைசி மகன் சண்முகராஜு, மருமக சங்கீதா இருந்தாங்க.

அன்னைக்கு ராத்திரி 2 மகனுகளும் லோடு இறக்கும் வேலைக்குப் போனதால, என் மருமக சங்கீதாவும், 2 பேரன்களும் என் தம்பி வீட்டுலதான் தூங்கியிருக்காங்க. வேலை முடிச்சுட்டு காலையில வீடு திரும்பிய என் மகன் சங்கீதாவ அங்கிருந்து கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்துருக்கான். வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்தில மூணு வீடும் அடுத்தடுத்து இடிஞ்சு விழுந்துருக்கு.

சண்முகராஜின் தாய் கண்ணம்மா
சண்முகராஜின் தாய் கண்ணம்மா
உ.பாண்டி

என் மருமகள காப்பாத்துறதுக்காக அவள வீட்டுக்கு வெளியில பிடிச்சு தள்ளிட்டு அவன் வெளியில வர்றதுக்குள்ள அவன் மேல வீட்டு சுவரு மொத்தமா இடிஞ்சு விழுந்திருச்சு. அதுல சிக்கின என் புள்ளை உயிர விட்டுட்டான். இன்னொரு மகன் மூர்த்திக்கும் காயம். அவன் இப்ப ஆஸ்பத்திரில இருக்கான். விடாம பேஞ்ச மழையால உயிருக்கு உயிரான மகனையும் குடியிருந்த வீடுகளையும் பறிகொடுத்துட்டு பள்ளிக்கூடத்துல தஞ்சம் அடைஞ்சிருக்கோம்'' என்றார் கண்ணீருடன்.

மழை எல்லோருக்குமானதுதான். ஆனால் அதன் பாதிப்புகள் இல்லாதவர்களுக்கே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு