Published:Updated:

நள்ளிரவில் வார்டுக்குள் புகுந்த மழை வெள்ளம்! - அமைச்சர் தொகுதிலேயே அரசு மருத்துவமனையின் நிலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சுற்றியுள்ள எட்டுப்பட்டி கிராமங்களுக்கும் பெரிய அளவிலான பொது மருத்துவனை இதுவேயாகும்.

Government Hospital
Government Hospital

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு 2 மணியிலிருந்து சுமார் இரண்டு மணி நேரமாகப் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, பழைய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள வீடுகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. கொட்டித்தீர்த்த மழைநீர் இன்னும் தேங்கி இருப்பதால், பொதுமக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்துவருகின்றனர்.

Rain
Rain

அதுமட்டுமன்றி, ராசிபுரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் தண்ணீர் தேங்கியதால், நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து உள்நோயாளிகள் கூறுகையில், "ராசிபுரத்தைச் சுற்றியுள்ள எட்டுப்பட்டி கிராமங்களுக்கும் பெரிய அளவிலான பொது மருத்துவனை இதுவேயாகும். இதனால் பலரும் உள் நோயாளிகளாகச் சிசிச்சைபெற்று வருகின்றனர்.

Rain image
Rain image

இந்த நிலையில், நள்ளிரவில் வார்டுக்குள் புகுந்த தண்ணீரால் தூக்கமின்றி அவதிப்பட்டோம். இது சம்பந்தமாக மருத்துவ நிர்வாகம் சார்பில் கண்டுகொள்ளாதது கடும் அதிருப்தியைத் தருவதாக உள்ளது" என்றனர்.

மேலும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். இந்தப் பகுதி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவின் தொகுதிக்குள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

``ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் உள்ள சாக்கடை சரிவர தூர்வாரப்படவில்லை. இந்தநிலையில், நேற்று கனமழை பெய்தது. குடியிருப்புவாசிகள் அயர்ந்து தூங்கும் நேரத்தில் கனமழை வந்ததால் தங்கள் குழந்தைகள் உடைமைகளை எடுத்துக்கொண்டு எங்கு செல்வது என்று தெரியவில்லை” என்கின்றனர் பகுதிவாசிகள்.

rain water in Gh
rain water in Gh

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் தங்களை மற்றொரு வார்டுக்கு மாற்றாமல் மருத்துவமனை நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதாகக் குற்றம்சாட்டுகின்றனர். இதுதவிர, ராசிபுரத்தில் பல்வேறு பகுதிகளில் நீர் புகுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மெத்தனம் காட்டாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்கள் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பீலா ராஜேஷின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ``இந்த விவகாரம் குறித்து இதுவரை என் பார்வைக்கு வரவில்லை. இதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் உறுதியாக.