Published:Updated:

`60 ஆண்டுகளில் இல்லாத மழை; ரயில், விமான சேவை முடக்கம்!’ - ஜப்பானை மிரட்டிய ஹகிபிஸ் புயல்

மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

ஹகிபிஸ்  புயல்
ஹகிபிஸ் புயல்

மிகப்பெரிய இயற்கைச் சீற்றத்தை சந்தித்திருக்கிறது ஜப்பான். அந்நாட்டில் நிலைகொண்டுள்ள 19-வது புயலுக்கு ஹகிபிஸ் என்ற பெயர் சூட்டபட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் டாக்லாக் மொழியில் இதற்கு `வேகம்’ என்று பொருள். இந்த புயலானது உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 7 மணி அளவில் டோக்கியோவுக்கு தென்மேற்கு பகுதியில் இருக்கும் ஈஸு தீபகற்பத்தில் கரையைக் கடந்தது. இது கிழக்குக் கடற்கரையை நோக்கி மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த புயலின் காரணமாக மிகப்பெரிய சேதத்தை சந்தித்திருக்கிறது ஜப்பான். 60 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, மோசமான மழையை ஜப்பான் சந்தித்திருக்கிறது.

நீரில் மூழ்கிய வாகனங்கள்
நீரில் மூழ்கிய வாகனங்கள்

இதில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்; 9 பேர் மாயமாகியுள்ளனர். புயல் காரணமாக 2.30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தலைநகர் டோக்கியோவின் தென்மேற்கில் உள்ள பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதில், ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. ஹிகிபிஸ் புயலின் எதிரொலியாக கொட்டித் தீர்த்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. புயல் தொடர்பான எச்சரிக்கையால் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். ரயில் மற்றும் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கஜா புயல் சாய்த்த 200 வயதான ஆலமரம்! - நிமிர்த்தி உயிர் கொடுத்த வேதாரண்யம் மக்கள்

ஒரே இரவில் மட்டும் வெள்ளத்தில் தத்தளித்த 1,417 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த புயல் காரணமாக இரண்டு ரக்பி உலக்கோப்பை ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையே நடக்கவிருந்த உலகக்கோப்பை ஆட்டங்கள் சமன் என அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டன. முன்னதாக 1959-ம் ஆண்டு 306 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய வெரா புயலுக்குப்பின் ஜப்பான் எதிர்கொள்ளும் மோசமான புயல் இது என்று கூறப்படுகிறது. தற்போது மீட்பு பணிகள் முழூ வீச்சில் நடைபெற்று வருகின்றன.

நிலச்சரிவில் சிக்கிய வீடு
நிலச்சரிவில் சிக்கிய வீடு

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ``பேரழிவில் உயிரிழந்த மக்களுக்கு இரங்கலையும், பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். காவல்துறையினர் மட்டுமல்லாமல், தீயணைப்புத்துறை, கடலோரக் காவல்படை உள்ளிட்ட படைகளைச் சேர்ந்த 27,000-த்துக்கும் அதிகமானோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவையைப்பொறுத்து, மீட்பு பணிகளை அதிகரிப்போம்” என்று தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ``கடினமான இந்த நேரத்தில் இந்தியா, ஜப்பானுக்கு ஆதரவாக துணை நிற்கும். ஜப்பானில் ஏற்கெனவே வேறொரு திட்டத்துக்காகப் பயணப்பட்டு, அங்கு தற்போது இந்திய கடற்படை வீீரர்கள் தங்கியிருக்கிறார்கள். இதன்மூலம் உடனடியாக உதவ முடியும் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.