Published:Updated:

`நான் வருவதை அறிந்து அமைச்சரை அனுப்புகிறார்கள்!’ - ஊட்டியில் கொந்தளித்த ஸ்டாலின்

ரா.சதீஸ்குமார்
கே.அருண்

பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ஊட்டி வந்த ஸ்டாலின், நான் ஊட்டிக்குச் செல்கிறேன் என அறிந்ததும், உடனடியாக ஒரு அமைச்சரை பெயரளவுக்கு அனுப்பிவைத்துள்ளது ஆளும் கட்சி' என குற்றம் சாட்டினார்.

மழையால் பதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட ஸ்டாலின்
மழையால் பதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட ஸ்டாலின் ( கே.அருண் )

நீலகிரி மாவட்டத்தையே புரட்டிப்போட்ட பெருமழையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளையும் உடைமைகளையும் இழந்த 2,500 பேர், 155 மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்புக் குழு, ராணுவம், அரசு ஊழியர்கள் என சுமார் 500 பேர், இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அவலாஞ்சி, காட்டுக்குபை, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் மண் சரிவாலும் காட்டாற்று வெள்ளத்தாலும் சேதமடைந்த சாலைகளை 30-க்கும் அதிகமான பொக்லைன் இயந்திரங்கள் மூலம், சீரமைப்புப் பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின்
வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின்

இடைவிடாது கொட்டித்தீர்த்த பெருமழை மெல்ல குறைந்து, இயல்புக்கு திரும்பிவருகிறது. அமைச்சர்களும் அதிகாரிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணங்களையும் ஆறுதலையும் வழங்கிவருகின்றனர்.நேற்று முன்தினம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், வெள்ளம் பாதித்த இடங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார்.இந்த நிலையில், தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைக் காண இரண்டு நாள் பயணமாக நீலகிரிக்கு வந்துள்ளார்.

நேற்று மதியம் ஊட்டி வந்த மு.க ஸ்டாலின் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இருவரும் ஊட்டி நடுவட்டம் பகுதியில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து பலியான தாய் அமுதா, மகள் பாவனா ஆகியோரின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, உதவித்தொகை வழங்கினர்.

மீட்பு முகாமில் மக்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின்
மீட்பு முகாமில் மக்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின்

பின்னர், கூடலூர் முதல் கேரள மாநில எல்லை வரை உள்ள பத்துக்கும் அதிகமான முகாம்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணப் பொருள்களை வழங்கினார். கூடலூர் பந்தலூர் பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு பாதித்த இடங்களைப் பார்வையிட்டார்.

பின்னர், பந்தலூர் சேரம்பாடி மீட்பு முகாமில் மக்களிடம் பேசிய ஸ்டாலின், “கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்,போது தமிழக அரசு முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமல் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டது. இதனால் சென்னையில் பல ஆயிரம் மக்கள் பாதித்தனர். சென்னையே தண்ணீரில் தத்தளித்தது.

மீட்பு முகாமில் மக்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின்
மீட்பு முகாமில் மக்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின்

தற்போது வரை அவர்களுக்கு எந்தவிதமான நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை . சீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. இதேபோன்று, கடலூரில் புயலின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், கடந்த 5 நாள்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ததன் விளைவாக, மாவட்டம் முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரமைக்கப்படவில்லை. நீலகிரி மக்கள் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்த நான்,ச் உடனடியாக அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வேண்டும். நிவாரணங்கள் வழங்க வேண்டும் என சென்னையில் இருந்து புறப்பட்டேன்.

வெள்ளம் பாதித்த மக்களிடம் பேசிய ஸ்டாலின்
வெள்ளம் பாதித்த மக்களிடம் பேசிய ஸ்டாலின்

இந்தச் செய்தியை அறிந்தவுடன், ஆளுங்கட்சியினர் அவசர அவசரமாக ஒரு அமைச்சரை அனுப்பி, பெயரளவிற்கு சில முகாம்களைப் பார்வையிட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியும் சென்றுள்ளார்.

பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டதோடு, மனுக்களைப் பெற்றுக்கொண்டு சென்னை சென்ற பின் எம்பி, எம்எல்ஏ ஆகியோர் மூலம் தொடர்ந்து நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், எதிர்கட்சித் தலைவர் என்ற ஈகோ பார்க்காமல் உங்களுக்காக முதலமைச்சரை நேரில் சந்தித்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு மனு கொடுப்பேன். அதையும் தாண்டி, அவர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும். அனைத்து விஷயங்களிலும் ஆளுங்கட்சியைப் பணிசெய்யத் தூண்டும் கட்சியாக திமுக செயல்பட்டுவருகிறது. மக்கள் நலனுக்காக, திமுக தொடர்ந்து செயல்பட்டுவரும்” என்றார்.