Published:Updated:

``சுனாமியிடம் நாம் பாடம் கற்கவில்லை!" - பேரழிவு குறித்து சுப.உதயகுமார்! #Tsunami

இந்தோனேஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமியாக உருவெடுத்து தமிழகத்தில் பல பகுதிகளில் கோர தாண்டவம் ஆடியது. இதன் விளைவாகத் தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால், அவை எப்போதும் மறக்க முடியாத காயங்களை ஆழப் பதியச் செய்கின்றன. இந்த நாள் தமிழகத்தின் கறுப்பு நாள். இயல்பான வாழ்க்கை, சந்தோஷமாக இரவில் கிறித்துமஸ் கொண்டாடிவிட்டு தூங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர்களைக் கடல் தாய் அழைத்துக்கொண்டு போய் விடுவாள் என்று தெரியாது.

26 டிசம்பர் 2004

மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த 7 வயது சிறுவனின் டைரி!- சுனாமி கோரத்தின் சாட்சி

இந்தோனேஷியாவிலுள்ள சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமியாக உருவெடுத்தது. அதன் தாக்கம் தமிழகம் வரை நீளவே, சுனாமி இங்கும் பல பகுதிகளில் கோர தாண்டவம் ஆடியது. இதன் விளைவாகத் தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 5819 பேரும், சென்னையில் 206 பேரும், கடலூரில் 603 பேரும், காஞ்சிபுரத்தில் 124 பேரும் பலியாகினர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பேரழிவு தமிழகத்தில் ஏற்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்றும் அந்த அழிவின் வேதனைகள் தீர்ந்தபாடில்லை. இன்னும் அந்தக் காயங்கள் ஆறாமலேயே இருக்கின்றன.

சுனாமி கற்றுக்கொடுத்த பாடத்தைப் பற்றிச் சொல்கிறார் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் குழுவின் தலைவர் சுப.உதயகுமார்,

சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு!
சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு!

"சுனாமி வந்த போது நான் என் வீட்டிலிருந்தேன். அருகில் இருந்தவர்கள் எல்லாம் பக்கத்துக் கிராமம் மணக்குடியில் சுனாமி வந்துவிட்டது எனக் கூறினார்கள். முதலில் நான் அதை நம்பவில்லை. பிறகு, சுனாமியால் உயிரிழந்த பக்கத்துக் கிராம மக்களை ஒரு வண்டியில் கொண்டு வந்தனர். என்னிடம் வண்டி இருந்தும் ஓட்டுநர் இல்லாமல் கையறு நிலையில் உதவி செய்யமுடியாமல் இருந்தேன். நானும் என் மனைவியும் இணைந்து ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தோம். அதில் படிக்கும் நிறைய குழந்தைகள் மணக்குடி கிராமத்தில் வசிக்கின்றனர். அவர்களைக் காப்பாற்ற நானும் என் மனைவியும் புறப்பட்டோம், அங்கு நாங்கள் கண்ட காட்சிகள் மிகவும் கோரமாக இருந்தன. ஒவ்வொரு வீடும் யாரோ சுத்தம் செய்து வைத்தது போல ஒரு பொருள்களும் இல்லாமல், வீடே காலியாக இருந்தது. அப்போது எங்களால் முடிந்தவரை அவர்களைக் காப்பாற்ற முயன்றோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பிறகும் அடுத்த நாள் நிவாரணப் பணிகளில் நானும் என்னுடன் சில தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டன. இந்தப் பேரழிவை வாய்ப்பாகப் பயன்படுத்தி எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கும் மீனவக் குடியிருப்புகளை திடக்கழிவு, திரவக்கழிவு மேலாண்மை அமைத்து மாற்றியமைக்கலாம் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். ஆனால், அரசு அதை முன்னெடுக்கவில்லை. நாங்கள் கூறியதற்கு அவர்கள் செவி சாய்க்கவும் இல்லை. அவர்கள் கட்டிக்கொடுத்த மாற்று வீடுகளும் சிறிது நாள்களிலேயே சிதிலமடைந்துவிட்டன. இதிலிருந்து ஒன்றை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அது என்னவென்றால் சுனாமி கற்றுக்கொடுத்த பாடங்களை நாம் யாரும் கற்கவில்லை; மீண்டும் ஒரு சுனாமி வந்தால் 2004-ம் ஆண்டு சந்தித்த அனைத்துப் பிரச்னைகளையும் இழப்புகளையும் நாம் இப்பொழுதும் சந்திக்க நேரிடும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஏனென்றால் மாநிலத்தில் சரியான பேரழிவு மீட்புக் குழு இல்லை. இதுவே அவர்கள் விரைந்து செயல்படாமல் இருந்ததற்கு ஒரு முக்கியக் காரணம். அதில் அரசு நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழகம் மீண்டும் அதே பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என்ற எச்சரிக்கையுடன் முடித்துக்கொண்டார்.

சுப. உதயகுமார்
சுப. உதயகுமார்

தென்னிந்திய மீனவச் சங்கத் தலைவர் பாரதியிடம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ மக்கள் குறித்து பேசியபோது அந்தக் காயம் ஏற்படுத்திய வலி நீங்காத குரலிலேயே பேசத் தொடங்கினார்,

"அரசு நினைத்தால் எந்த இடத்திலும் கட்டடத்தைக் கட்ட முடியும். ஆனால், மீனவர்கள் கேட்கும் இடங்களில், அவர்களால் பட்டாவோ வீடுகளோ கட்டித் தர முடியவில்லை. இவர்கள் சொல்லும் காரணங்களை நிச்சயமாக எங்களால் ஏற்க முடியாது. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பின்னர் நாங்கள் பல கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தோம். ஆனால் இழப்பீடு வழங்கியதைத் தாண்டி அரசு வேறு எதையும் செய்யவில்லை.

மீனவனின் கவனம் முழுவதும் அவனின் படகு மற்றும் வலைகள் மீதுதான் இருக்கும். ஆனால், புயலோ சுனாமியோ வரும் போது இந்தப் பொருள்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கைகளையும் அரசு எடுப்பதில்லை. இதையே அரசு சரிசெய்யவில்லை என்றால் சாதாரண மக்களால் பேரிடர்க் காலத்தில் எப்படி அவர்களைத் தற்காத்துக்கொள்ள முடியும்? ஒருநாள் இயற்கையாக சுனாமி வந்து வேதனை தந்தது. ஆனால், அரசின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் எங்கள் வாழ்வில் செயற்கை சுனாமியை ஏற்படுத்தி வேதனை தருகிறது” என்றார்.

தென்னிந்திய மீனவர் சங்கத் தலைவர் பாரதி
தென்னிந்திய மீனவர் சங்கத் தலைவர் பாரதி
``சுனாமி பறித்துச்சென்ற என் 4 குழந்தைகளை மீண்டும் பெற்றெடுக்க ஆசைப்பட்டேன்!’’- மீனவப் பெண்ணின் கதை

சுனாமி தமிழகத்தில் ஏற்படுத்திய வடுக்கள் 15 ஆண்டுகள் கழிந்தும் அப்படியே தொடர்கின்றன என்றால் இந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள் இதை சுயவிமர்சனமாக எடுத்துக்கொண்டு செயலாற்ற வேண்டியது அவசியம்.

- தனிமொழி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு