Published:Updated:

நிவர் புயல்: கலங்கி நின்ற வடமாநிலக் குடும்பங்கள்! - கைகொடுத்து உதவிய தஞ்சை விவசாயி

நிவர் புயலில் பாதிக்கப்பட்ட குடும்பம்
நிவர் புயலில் பாதிக்கப்பட்ட குடும்பம் ( ம.அரவிந்த் )

பட்டுக்கோட்டை அருகே சிக்கிய வடமாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், நிவர் புயல் அச்சத்தில் செய்வதறியாது தவித்தனர். தொடர் மழையால் எங்கு தங்வது என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை.

பட்டுக்கோட்டை அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த சில குடும்பங்கள் சாலையோரத்தில் வசித்துவந்தனர். நிவர் புயல் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தகவல் வெளியான நிலையில் செய்வதறியாமல் தவித்து நின்ற அவர்களின் நிலையை, விவசாயி ஒருவர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாதுகாப்பான இடத்தில் மக்கள்
பாதுகாப்பான இடத்தில் மக்கள்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள முனி கோயில் அருகே சாலையோரத்தில் டென்ட் அடித்து வடமாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 20 பேர் தங்கியிருந்தனர்.

நிவர் புயலால் தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. குறிப்பாக பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட தஞ்சையின் கடலோரப் பகுதிகளில் காற்றுடன்கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருந்ததால், மாவட்ட நிர்வாகம் பாதுகாப்புப் பணிகளை முழு வீச்சில் செய்தது.

நிவர் புயல்: `படகுகளை சுடுகாட்டில் நிறுத்த வேண்டிய நிலை!’ - நடுக்குப்பம் மீனவர்கள் போராட்டம்

பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளிலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தனர். கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களை, புயல் பாதுகாப்பு மையங்களில் தங்கவைப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.

இந்தநிலையில், பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் சாலையோரத்தில் வசித்த வடமாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் நிவர் புயல் அச்சத்தில் செய்வதறியாது தவித்தனர். கனமழை பெய்தால் எங்கு தங்வது என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. குழந்தைகளை வைத்துக்கொண்டு காற்று வீசும்போது என்ன செய்யப்போகிறோம் எனக் கண்கலங்கி நின்றனர்.

வடமாநிலக் குடும்பம்
வடமாநிலக் குடும்பம்

அந்த வழியாக சென்றவர்களிடம், `காற்றும் வேகமாக அடிக்குமா எந்தப் பிரச்னையும் இருக்காதே?’ எனப் பரிதவிப்புடன் கேட்டனர். இதை கவனித்த அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி வீரசேனன், `கவலைப்படாதீங்க. உங்களோட நிலையை அரசு அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன். அவர்கள் உங்களை கைவிட மாட்டாங்க’ என நம்பிக்கை கொடுத்துடன், உடனே அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.

இதையடுத்து பொன்னவராயன் கோட்டையிலுள்ள அரசு ஐ.டி.ஐ கட்டடத்தில், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரும் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கரையைக் கடக்கும் நிவர் புயல் - இதற்கு முன்னர் தமிழகத்தைத் தாக்கிய புயல்கள்!

இது குறித்து வீரசேனன் கூறுகையில்.``சின்னக் குழந்தைகளுடன் ஒரு மாதத்துக்கு மேலாகக் குடும்பத்தினருடன் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு தங்கியிருந்தனர். வண்டி ஒன்றில், ஒலிபெருக்கியில் பக்திப் பாடலைப் போட்டுக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக செல்வது அவர்களின் வழக்கமாக இருந்தது.

அப்போது பலர் விருப்பப்பட்டு காசு கொடுப்பார்கள். அதில் வரும் வருமானத்தில் சாப்பிடுவதுடன், அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்தனர். நிவர் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்ட நிலையில், அந்தக் குடும்பத்தினர் செய்வதறியாமல் கலங்கி நின்றனர்.

அதி தீவிரப் புயலாகும் நிவர்; 15 மாவட்டங்களில் கனமழை - காற்று 155 கி.மீ வேகத்தில் வீசலாம்!

இந்தத் தகவல் அதிகாரிகளுக்குத் தெரியபடுத்தப்பட்ட உடனேயே அவர்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்ததுடன், அவர்களுக்கு வேண்டிய அத்தியாவசியத் தேவைகளை செய்து கொடுத்தனர். மின்னல் வேகத்தில் செயல்பட்ட அரசு ஊழியர்களின் செயலை எண்ணி அவர்கள் பூரிப்படைந்தனர். `புதிய ஊர், புதிய இடம் என்பதால் புயலில் என்ன பாடுபடப்போகிறோம் என கலங்கி நின்ற எங்களுக்கு உடனடியாக இடம் ஏற்பாடு செய்து தங்கவைத்த தமிழர்களின் செயல் மெய்சிலிர்க்க வைப்பதுடன், பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது’ என்ற் அவர்கள் நன்றி கூறினார்கள்’’ என்று நெகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு