Published:Updated:

தஞ்சை: கஜா புயல் நினைவு... நிவர் புயலை அச்சத்துடன் எதிர்கொள்ளும் டெல்டா மக்கள்!

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மூதாட்டி ( ம.அரவிந்த் )

`கஜா புயலில் பாதிக்கப்பட்டதால், நிவர் புயல் வீசப்போகிறது என்று சொன்னதுமே 9 வயதாகும் என் மகள் தோப்புக்குள் ஓடி மிச்சமிருக்கிற தென்னை மரங்களை ஒவ்வொன்றாக கட்டிக்கொண்டாள்.’

தஞ்சை: கஜா புயல் நினைவு... நிவர் புயலை அச்சத்துடன் எதிர்கொள்ளும் டெல்டா மக்கள்!

`கஜா புயலில் பாதிக்கப்பட்டதால், நிவர் புயல் வீசப்போகிறது என்று சொன்னதுமே 9 வயதாகும் என் மகள் தோப்புக்குள் ஓடி மிச்சமிருக்கிற தென்னை மரங்களை ஒவ்வொன்றாக கட்டிக்கொண்டாள்.’

Published:Updated:
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மூதாட்டி ( ம.அரவிந்த் )

கஜா புயல் வீசுவதற்கு முன் வானிலையில் நிலவிய அதே அமைதி நிவர் புயல் வீச இருக்கிற சூழ்நிலையில், தற்போது நிலவிவருவது தஞ்சாவூர் மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கஜா புயலைப்போல் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற கவலையும் அனைவரது முகத்திலும் தெரிகிறது.

நிவர் புயல் பாதுகாப்புப் பணியில் மீட்புக் குழுவினர்
நிவர் புயல் பாதுகாப்புப் பணியில் மீட்புக் குழுவினர்

நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் எனக் கூறப்படும் நிலையில். தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இந்தநிலையில், இன்று தஞ்சாவூர் பகுதியில் காலை முதலே வானம் மூடிய நிலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான காற்றுக்கூட வீசாமல் எப்போதும்போல் இருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`புயலிலிருந்து காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனவே, புயல் குறித்து அச்சப்படத் தேவையில்லை’ என கலெக்டர் கோவிந்தராவ் பொதுமக்களுக்குத் தைரியமூட்டும் வகையில் பேசியிருக்கிறார். இந்தநிலையில் நிவர் புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முழு மூச்சில் தயாராகிவிட்டது. மாநிலப் பேரிடர் மீட்புக்குழுவைச் சேர்ந்த 80 பேர் மீட்புப் பணிக்காக தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

கஜா புயல் பாதிப்பு
கஜா புயல் பாதிப்பு

தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினர் 114 பேர், உள்ளூர் போலீஸார் 50 பேர் இந்தக் குழுவினருடன் சேர்ந்திருக்கிறார்கள். எட்டு குழுக்களாப் பிரிக்கப்பட்ட இவர்கள் மண்வெட்டி, கடப்பாரை, கயிறு, ரப்பர் படகுகள், கேஸ் லைட்டுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஸ்ட்ரெச்சர்கள், அரிவாள்கள் ஆகியவற்றுடன் புயல் பாதிப்புகளைச் சரிசெய்வதற்கு எட்டு காவல் உட்கோட்டங்களில் தயார்நிலையில் இருப்பதாகக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தெரிவித்திருக்கிறார்.

புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்கும் நிலையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெரும் அச்சத்துடனேயே இருந்துவருகின்றனர். இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``2018-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 16-ம் தேதி கஜா புயல் வீசியது. யாரும் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத அளவுக்கு கோரச் சத்தத்துடன் காற்று வீசியது. வெளியே பெரும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

தஞ்சாவூர்
தஞ்சாவூர்

விடிந்ததும் வெளியே வந்த அனைவரும் பிள்ளைகளாக வளர்த்த தென்னை மரங்கள் முறிந்தும், அடியோடு விழுந்தும் கிடந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர். எங்களுடைய வாழ்வாதாரத்தைச் சூறையாடி, கலைத்துப்போட்ட பிறகே கஜா புயல் அமைதியானது.

முதல் நாள் புயல் வீசுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் வானம் மூடியநிலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. புயலால் எந்த பாதிப்பும் இருக்காது என நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால், அதில் மண் விழுந்தது. தென்னை விவசாயிகள் வாழ்நாளில் சந்திக்காத பெரும் துயரைச் சந்தித்தனர்.

புயல் மீட்புக் குழுவினர்
புயல் மீட்புக் குழுவினர்

அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவரும் நிலையில், மீண்டும் நிவர் புயல் எங்களை அச்சம்கொள்ள வைத்திருக்கிறது. பலரும் தோப்புகளுக்குச் சென்று எதுவும் ஆகிவிடக் கூடாது என தென்னை மரங்களை ஏக்கத்தோடு பார்த்தனர். கண்கள் கசிய இயற்கையை வணங்கி, புயலால் எந்த அழிவும் ஏற்படாமல் காக்க வேண்டும் எனக் கையெடுத்து கும்பிட்டு வேண்டினோம்’’ என்று தெரிவித்தனர்.

பேராவூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், ``கஜா புயலில் எங்க தோப்பிலிருந்த 90 சதவிகிதத் தென்னை மரங்கள் விழுந்தன. தற்போது நிவர் புயல் வீசப்போகிறது என்று சொன்னதுமே 9 வயதாகும் என் மகள் தோப்புக்குள் ஓடி மிச்சமிருக்கிற தென்னை மரங்களை ஒவ்வொன்றாக கட்டிக்கொண்டாள்.

கஜா புயல் பாதிப்பிலிருந்து  மீண்ட தோப்பு
கஜா புயல் பாதிப்பிலிருந்து மீண்ட தோப்பு

`அம்மா, இந்த மரங்களுக்கு எதுவுமாகாதே...’ எனக் கேட்கிறாள் எனக்கு அழுகையே வந்துவிட்டது. வானை எட்டி நின்ற தென்னை மரங்கள், ஒரே இரவில் வீழ்ந்ததை நினைத்தால் இன்றைக்கும் ஈரக்குலை நடுங்குகிறது. கஜாவின் காத்து சத்தம் இன்னும் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதனால் பெரும் அச்சத்துடனேயே நிவர் புயலால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என ஊரிலுள்ள தெய்வங்களையெல்லாம் வேண்டி நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்’’ என்றார்.