Published:Updated:

அமேசான் காட்டுத்தீ... இந்தியா அதிகாரபூர்வமாக வாய்திறக்காததன் `அரசியல்'!

விகடன் டீம்

இக்கொள்கை அமேசானில் மட்டுமன்றி இந்திய காடுகளுக்கும் படிப்படியாக விரிவடைவதை அரசியல் நோக்குள்ள ஒருவர் நன்கு உணரமுடியும்

amazon fire
amazon fire

அமேசானின் அழிவு பிரேசிலின் அழிவு மட்டுமல்ல, அது உலகமக்களின் அழிவும் கூட. பருவநிலை மாற்றம் தீவிரமாகியுள்ள காலகட்டத்தில், அதைத் தடுக்கும் அரணாக கார்பனை சேமித்து வைத்துள்ள ஒரு மாபெரும் உயிர்வங்கி கண்ணுக்கு முன்னே காலியாவதை யாரால் பொறுக்க முடியும்? விரிவான அலசல் கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2lwGIa7

அமேசான் மழைக்காடு என்றால் அது 'உலகின் நுரையீரல்', '20% ஆக்சிஜன் தருவது' என்று நாம் ஏற்கெனவே அறிந்துள்ள செய்திகளோடு மேலும் சில செய்திகளையும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். முப்பது லட்சம் வகை தாவரங்கள் உயிரினங்களோடு மூன்றரைக் கோடி பழங்குடிகளுக்கும் அதுவே தாய்வீடு. புவிக்கோளத்தின் 17-20 விழுக்காடு நீரை அது சேமித்து வைத்துள்ளது. உலகப் பல்லுயிரியத்தின் 10 விழுக்காடு அங்குதான் பாதுகாக்கப்படுகிறது.

காட்டையழித்து வேளாண்மை செய்யப் போவதாகப் பிரேசில் அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது. மழையின்றி வேளாண்மை செய்யப் புதியவழி எதையும் அது கண்டுபிடித்துள்ளதா என்று தெரியவில்லை. மழையை உருவாக்கும் காடுகள் இல்லையெனில் மழைப்பொழிவு விகிதத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வறட்சி அதிகரிக்கும். பருவநிலை மாற்றம் அதை நீடிக்கச் செய்து சுற்றுச்சூழலையே நாசமாக்கிவிடும் .

புவிக்கோளுக்கே மிரட்டலாக விளங்கும் இக்கொள்கையை எதிர்க்க உலகமக்களுக்கு உரிமை உண்டு. மேற்குத்தொடர்ச்சி மலையைக் கொண்டுள்ள நாம் இன்னும் தீவிரமாக எதிர்க்க வேண்டும்.

ஹிட்லரின் நாஜியிசம் போல, முசோலினியின் ஃபாசிசம் போல, இக்கொள்கை தீவிர வலதுசாரித்தன்மை கொண்டது. அவர்களுடைய கொள்கை மனிதகுலத்தை நாசப்படுத்தியது என்றால் போல்சோனரோவிசமோ உயிரினங்களையே காவு வாங்க முனைகிறது. இயற்கை வளத்தை இலவசமாகக் கைப்பற்றுவதற்கு, ஈவிரக்கமற்ற வழிமுறைகளைப் பின்பற்றி லாபத்தைக் குவிக்கும் முதலாளித்துவத்துக்கு, 'குரோனிக் முதலாளித்துவம்' என்று பெயர். இந்த குரோனிக் முதலாளித்துவமும் வலதுசாரி இயக்கமும் இணைந்து பெற்ற குழந்தைதான் போல்சோனரோவிசம்.

இக்கொள்கை அமேசானில் மட்டுமன்றி இந்திய காடுகளுக்கும் படிப்படியாக விரிவடைவதை அரசியல் நோக்குள்ள ஒருவர் நன்கு உணரமுடியும். உலகநாடுகளின் எதிர்ப்பை தாங்கவியலாமல் பிரேசில் அரசு தீயை அணைக்க முன்வந்துள்ள நிலையிலும் இந்திய அரசு அமேசான் காட்டுத்தீ குறித்து அதிகாரபூர்வமான கண்டனம் எதையும் தெரிவிக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். புவிக்கோளுக்கே மிரட்டலாக விளங்கும் இக்கொள்கையை எதிர்க்க உலகமக்களுக்கு உரிமை உண்டு. மேற்குத்தொடர்ச்சி மலையைக் கொண்டுள்ள நாம் இன்னும் தீவிரமாக எதிர்க்க வேண்டும்.

தற்போதைய காட்டுத்தீ பல பழங்குடி வாழ்விடங்களுக்கும் பரவுவதால்தான் இதை காட்டுத்தீ என்பதை விட 'இனப்படுகொலை' என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகிலேயே முன்னணியில் இருந்த நாடு பிரேசில். ஆனால் கடந்த 2015 முதல் 'பசுவதையைத் தீவிரமாகப் பின்பற்றி வரும் இந்தியா' அதை முந்திவிட்டது. எனவே இழந்த இடத்தை மீட்க தனது உற்பத்தியைப் பெருக்க வேண்டிய அவசியம் பிரேசிலுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக மேய்ச்சல் நிலங்களுடன் கூடிய கால்நடைப் பண்ணைகளை விரிவாக்க திட்டமிட்டது.

amazon fire
amazon fire

சில ஐரோப்பிய நாடுகள் காட்டுத்தீ குறித்து எதிர்வினையாற்றத் தொடங்கியது வரவேற்கத்தக்கது. நார்வேயும் ஜெர்மனியும் பிரேசிலுக்கு வழங்கிவந்த 'அமேசான் நிதி'யைக் குறைத்தன. ஃபிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானின் கடும் எதிர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஐரோப்பிய யூனியனுக்கும் பிரேசிலுக்கும் இடையேயான வணிகத் தொடர்பைத் துண்டிப்போம் என்று அவர் அறிவித்ததும் அதற்கு அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்ததும் நம்பிக்கையளிக்கிறது. இறைச்சி, சோயா, கனிமம் ஆகியவற்றின் ஏற்றுமதிக்காக அழிக்கப்படும் காட்டை, ஏற்றுமதி ஆயுதத்தைக் கொண்டே தடுத்தது தற்காலிக பலனை அளித்துள்ளது. இதன்பிறகே போல்சோனரோ சற்று அசைந்துக் கொடுத்துத் தீயணைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கினார். ஆனால் அதற்குள் ஏராளமான சேதங்கள் நிகழ்ந்துவிட்டன.

- எழுத்தாளர் நக்கீரன் எழுதிய சிறப்புக் கட்டுரையின் சுருக்கமான வடிவம் இது. அமேசான் காட்டுத்தீ குறித்தும், அதன் பின்னணி அரசியல் குறித்தும் அவர் விரிவாக எழுதியுள்ள ஆனந்த விகடன் கட்டுரையை முழுமையாக வாசிக்க > https://www.vikatan.com/news/general-news/amazon-wildfire-is-also-genocide

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/