Published:Updated:

எரியும் பாறை, சிதறும் குழம்புகள்... சிதறும் எரிமலையை நோக்கி ஓடும் இந்த மனிதர்கள் யார்?

ஒவ்வொரு வெடிப்பிற்கும், பாறைகள், தீக்குழம்பு, சாம்பல் போன்றவை அந்த எரிமலையைச் சுற்றி படியும். வெடிப்பதா பொங்குவதா என்பது, வெளியாகும் தீக்குழம்பின் அடர்த்தியைப் பொறுத்து முடிவாகும்.

எரிமலை
எரிமலை ( Pixabay )

தம்போரா எரிமலை வெடித்தபோதும், லாகி எரிமலைத்தொடர் வெடித்தபோதும் ஏற்பட்ட சேதங்கள், மனித வரலாற்றில் மறக்கமுடியாதவையாக இருந்தன. இவ்வளவு சேதங்களை ஏற்படுத்தும் அளவுக்கு மலைகள் சீற்றம்கொள்ளக் காரணமென்ன?

எப்படி அந்த நெருப்புக் குழம்பு அத்தனை கிலோமீட்டர் உயரத்திற்கு மேலெழும்புகிறது? அவ்வளவு தூரம் வளிமண்டலத்தைத் தூசுமயமாக்கி, சூரியனை மறைக்கும் அளவுக்கு எரிமலையால் எப்படி புகையைக் கக்க முடிகிறது?

இதையெல்லாம் தெரிந்துகொள்ள, நாம் எரிமலைகள் எப்படி வெடிக்கின்றன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

எரிமலை வெடிப்பு
பூமிக்கு அடியிலிருக்கும் அடர்த்தியான நெருப்புக் குழம்பு (magma), நிலத்திற்கு மேலே தள்ளப்படும்போது, மேற்பரப்பிலிருக்கும் பாறைகளையும் சேர்த்து எரித்துக்கொண்டு, அடர்த்தியான புகையைக் கக்கிக்கொண்டே வெளியேறுகிறது. அதைத்தான் 'எரிமலை வெடிப்பு' என்கிறோம்.

எரிமலைகள் பல வடிவங்களில், பல அமைப்புகளில் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் அனைவருக்கும் பொதுவாகத் தெரிந்த, ஒற்றை மலையாகக் கூம்பு வடிவத்தில் இருக்கும் எரிமலை. எரிமலைத் துவாரங்கள் தொடர்ந்து வெடித்துக்கொண்டேயிருக்கும்போது, நெருப்புக் குழம்பு அடுக் கடுக்காகப் படிந்து பாறையாகி, கூம்பு வடிவத்திலான மலையாக உருவெடுத்திருக்கும். இன்னொன்று, கொஞ்சம் உயரமான நிலப்பகுதியில் பிளந்திருக்கும் துவாரங்கள் மட்டுமே இருக்கும். அவை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு வெடித்துக்கொண்டேயிருக்கும்போதுதான், முன்னர் கூறிய கூம்பு வடிவத்திற்கு மாறும். இன்னொன்று, லாகி எரிமலைத்தொடரைப் போல, பல்வேறு கலவைகளைக்கொண்ட மலைத்தொடராக இருக்கும்.

எரிமலைகள் இப்படி வடிவங்களில் வேறுபட்டாலும், அனைத்துமே இரண்டு ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.

- இயற்கையின் படைப்புகளில் மிகுந்த ஆச்சர்யத்தையும் பயங்கரத்தையும் ஒருசேரக் கொண்டிருப்பவை.

- இன்னொரு ஒற்றுமை, வடிவம், அமைப்பு ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்தாலும் அனைத்திற்குமே வெடிப்பதற்கான தன்மை ஒன்றுதான்.

துவாரங்கள்
துவாரங்கள்
Pixabay
`பனியுகம் எப்படியிருக்கும்?' மனிதனுக்குக் காட்டிய லாகி எரிமலை! #Volcano

பூமிக்கு அடியிலிருக்கும் அடர்த்தியான நெருப்புக் குழம்பு (magma), நிலத்திற்கு மேலே தள்ளப்படும்போது, மேற்பரப்பிலிருக்கும் பாறைகளையும் சேர்த்து எரித்துக்கொண்டு, அடர்த்தியான புகையை கக்கிக்கொண்டே வெளியேறும். அதைத்தான் எரிமலை வெடிப்பு என்கிறோம். ஆனால், இது எப்படி நடக்கின்றது? பூமியின் உள்பகுதியிலிருந்து உருகிய பாறைகளை வெளியே தள்ளி வெடிக்கவைப்பது எது?

அது எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, பூமியின் உள் கட்டமைப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பூமியின் மேற்பரப்புக்கும் (Crust) மையப் பகுதிக்கும் (Crust), இடையே இருப்பதுதான் மூடகம் (Mantle). அதில் மேல் மூடகம், கீழ் மூடகம் என்று இரண்டு உள்ளன. பூமியின் மேற்பரப்பு, கடல் தரையிலிருந்து கீழே சுமார் 6.2 மைல்கள் வரையும் மலை உச்சியிலிருந்து கீழே 62 மைல்கள் வரையும் ஆழமிருக்கும்.

மேற்பரப்பிற்குக் கீழிருந்து மேல் மூடகம் தொடங்குகிறது. மேற்பரப்பிற்குக் கீழிருந்து 250 மைல்கள் ஆழம் வரை மேல் மூடகம் அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 2,231 மைல்களுக்குச் செல்கிறது கீழ் மூடகம். மேல் மூடகத்திற்கும் கீழ் மூடகத்திற்கும் இடையே 160 மைல்களுக்கு நிலைமாற்றக் களம் (Transition zone) அமைந்துள்ளது.

எரிமலைத்தொடர்
எரிமலைத்தொடர்
Pixabay

மூடகங்களில் காற்றழுத்தம் அதிகமாகிக்கொண்டேயிருக்கும். தட்பவெப்பநிலை 1000 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும். ஆகவே, அங்குள்ள பாறைகள் நெருப்பில் உருகித் திரவ நிலையிலிருக்கும். இந்த நிலை அவற்றுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அல்லது அதற்கும் அதிகமாக இருக்கிறது. பூமியின் மேல்பரப்பிற்குக் கீழே, அவை ஆங்காங்கே பல அடுக்குகளில் சேகரிக்கப்படுகின்றன. அங்கு சேகரிக்கப்பட்டிருக்கும் திரவ நிலையிலிருக்கும் அந்தப் பாறைக் குழம்புக்கு, அதைச் சுற்றியுள்ள பாறைகளைவிட அடர்த்தியும் கடினத்தன்மையும் குறைவாக இருக்கும். கடினத்தன்மையின்றி அப்படித் திரவ நிலையிலேயே இருக்கும் இந்தப் பாறைக் குழம்பு, மேற்பரப்பிற்குக் கீழேயிருக்கும் மேல் மூடகத்தின் விளிம்பைப் பலவீனமாக்கி, அங்கிருந்து வெளியேறும். அப்படி வெளியேறும் திரவப் பாறை, மூடகத்திற்கு மேலே மேற்பரப்பிற்குக் கீழே தேங்கிக்கொண்டிருக்கும். அப்படி தேங்கியிருக்கும் திரவப் பாறைகளை மேக்மா (magma) என்றும், வெடித்து வெளியே வந்த நெருப்புக் குழம்பை லாவா (lava) என்றும் அழைப்பார்கள்.

ஒவ்வொரு வெடிப்பிற்கும், பாறைகள், தீக்குழம்பு, சாம்பல் போன்றவை அந்த எரிமலையைச் சுற்றிப் படியும். வெடிப்பதா பொங்குவதா என்பது வெளியாகின்ற தீக்குழம்பின் அடர்த்தியைப் பொறுத்து முடிவாகும். அடர்த்தி குறைவாக இருந்தால், நீண்ட தூரத்திற்கும் அதிகமான உயரத்திற்கு அதனால் வெடிக்க முடியும். அப்படி அகலமாக வெடிக்கும்போது, அவை பெரும்பாலும் தகடுகளைப் போன்ற அகலமான துவாரங்களை உருவாக்கும். தீக்குழம்பு அடர்த்தியாக இருந்தால், அவை அடுக்குகளாகப் படிந்து கூம்பு வடிவத்தை உருவாக்கும். அப்படி உருவாக்கப்பட்டதுதான் தம்போரா எரிமலை. ஆனால், 1816-ம் ஆண்டு நடந்த பெருவெடிப்பு, அதன் வாய்ப் பகுதியை மிகவும் அகலமாகக் கிழித்துவிட்டது. இப்போது, தம்போரா கூம்பு வடிவத்தில் இல்லை. அதற்குக் காரணம், அந்தப் பெருவெடிப்தான்.

எரிமலை வெடிக்கும்போது இதுதான் நடக்கிறது. அது எப்படி வெடிக்கிறது? அது வெடிக்கக் காரணமாக பூமிக்குக் கீழேயிருக்கும் மேற்பரப்பில் என்ன நடக்கிறது?

மேலடுக்கிலிருக்கும் கண்டத்தகடுகளில் அசைவுகள் ஏற்பட்டால், அதற்குக் கீழிருந்து வெளிக்கிளம்பும் பாறைக் குழம்பு எரிமலை வெடிப்பை உருவாக்குகின்றன. சில சமயங்களில், நம் பூமியின் மேற்பரப்பில் இருக்கின்ற கண்டத்தகடுகள் (Tectonic plates) ஒன்றுக்கொன்று மோதுவதால், ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்வதால் அல்லது ஒன்றுக்கு மேலாக ஒன்று உரசிச் செல்வதால் எரிமலை வெடிப்புகள் நிகழும். நிலத்தடியிலிருக்கும் கண்டத்தகடுகள் இப்படியெல்லாம் நகர்வது நில நடுக்கம் மட்டுமின்றி எரிமலை வெடிப்பு நிகழ்வுகளுக்கும் வழி வகுக்கின்றன.

ஒருவேளை, மிகவும் கடினமான கண்டத்தகடு, மெல்லிய கண்டத்தகட்டுக்குக் கீழே சென்றால், அங்கு ஆழமான பள்ளம் உருவாகும். இப்படிக் கீழே மூழ்குவது, அடர்த்தியான நெருப்புக் குழம்பின் அடர்த்தியைக் குறைப்பதால், அங்கு தொடர் வெடிப்புகள் நிகழும். அப்படியே பல மில்லியன் ஆண்டுகளுக்கு நடந்தால், அந்த இடத்தில் எரிமலைத் தொடர் உருவாகும்.

வெடிப்பு நிகழ்வு
வெடிப்பு நிகழ்வு
Pixabay
வெயிலில்லா வருடம், நிலவில்லா மர்மம்..! உலகை உலுக்கிய தம்போரா எரிமலை

மலைக்கு உள்ளே உருவாகும் காற்றழுத்தம் மற்றும் நெருப்புக் குழம்பின் வெப்பம், ஆகியவற்றை அதிகரிக்கும் இந்த கண்டத்தகடு நகர்வுதான் எரிமலை வெடிப்புகளுக்குப் பல நேரங்களில் காரணமாக அமைகின்றன. அப்படி எரிமலை வெடிப்பால் உருவாகும் நிலவியல் அமைப்பு, மண் வளம் மிக்கதாகவும் பல்வேறு கனிமங்களோடு உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம், நமக்கு எப்படித் தெரிந்தது? ஓர் எரிமலை வெடிப்பது குறித்து நாம் எப்படி இவ்வளவு ஆழமாகப் புரிந்துகொண்டோம்?

உலகிலெயே ஆபத்தான படிப்பாக, எரிமலையியல் (Volcanology) அறியப்படுகிறது.

இதையெல்லாம் நமக்கு புரியவைத்தது, எரிமலையியல் துறை (Volcanology); புரிய வைத்தவர்கள் அதை ஆய்வு செய்பவர்களான எரிமலையியலாளர்கள் (Volcanists). எரிமலை வெடிக்கும்போது அனைவரும் அதிலிருந்து எவ்வளவு தொலைவுக்கு ஓடமுடியுமோ அவ்வளவு தொலைவாக ஓடுவார்கள். இவர்கள் மட்டும், எரிமலைக்கு எவ்வளவு அருகில் செல்ல முடியுமோ அவ்வளவு அருகே செல்வார்கள். ஆம், வெடிப்பு நிகழும்போது அனைவரும் தப்பித்தாலும் அவர்கள் அங்கேயேதானிருப்பார்கள். அந்த வெடிப்பைக் கண்காணிக்க, ஆய்வு செய்ய...

1980-ம் ஆண்டு, வாஷிங்டனிலிருக்கும் ஹெலென்ஸ் என்ற எரிமலை வெடித்தது. குளிர்சாதனப் பெட்டிக்கு நிகரான அளவுள்ள பாறைகள், அதற்குள்ளிருந்து தெறித்து மழையாகப் பொழிந்தன. அதில், அமெரிக்க நிலவியல் ஆய்வகத்தைச் சேர்ந்த டேவிட் ஜான்ஸ்டன் என்ற எரிமலையியலாளர் இறந்தார்.

பிரெஞ்சு எரிமலையியலாளர்களான கேடியா கிராஃப்ட் மற்றும் அவரது கணவர் மௌரிஸ் கிராஃப்ட் இருவருமே 1991-ம் ஆண்டு ஜப்பானிலிருக்கும் உன்சென் என்ற எரிமலை வெடித்தபோது மரணமடைந்தார்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து, பிரிட்டனைச் சேர்ந்த ஜெஃப்ரீ பிரவுன் என்ற ஆய்வாளர், கொலம்பியாவிலிருந்த கலேராஸ் என்ற எரிமலையில் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, அது திடீரென்று வெடித்ததால் இறந்தார்.

வடித்த பின்னர்
வடித்த பின்னர்
US Geological Survey

ஃப்ளோரிடாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ மெக்ஃபார்லேன் என்ற ஆய்வாளர், 2014-ம் ஆண்டு வாஷிங்டன் போஸ்டில் பேட்டியளித்தபோது, "வெடிப்பு நிகழும்போது, வெளியே தெறித்துச் சிதறும் பாறைக்குழம்பிடமிருந்து, எரியும் பாறைகளிடமிருந்து தப்பிக்கவே முடியாது. நாங்கள் தப்பிக்க முயன்று ஓடினோம். அதிர்ஷ்டமிருந்ததால் தப்பித்தோம்..." என்று கூறியுள்ளார்.

ஆம், வெடிச் சத்தம் 2,000 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அனைத்தும் நம் புலன்களைச் சிதைத்துவிடும். அப்படிப்பட்ட இடத்தில் ஆய்வு செய்ய யார்தான் முன்வருவார்கள். அதனாலேயே உலகில் ஆபத்தான, பாதுகாப்பற்ற படிப்பாக எரிமலையியல் அறியப்படுகிறது.

இந்தத் துறையில், வெடிப்பு நிகழ்வுகளை நேரடியாகக் களத்தில் ஆய்வுசெய்து, தரவுகள் மற்றும் மாதிரிகளைச் சேகரிக்க வேண்டும். மலையின் உள் கட்டமைப்புகளை ஆய்வுசெய்து, அவற்றின் செயல்பாடுகளைக் கண்டறிய வேண்டும். சீறிக்கொண்டிருக்கும் மலைகளைக் கண்காணித்து, ஒருவேளை வெடிக்கப்போகிறது என்றால் எச்சரிக்கை செய்ய வேண்டும். இப்படிப் பல்வேறு விதமாக அவர்களுடைய சேவை நீள்கிறது. அவர்கள் தைரியமாக அங்கு ஆய்வு செய்யாமலிருந்திருந்தால் நமக்கு எரிமலைகளைப் பற்றி இவ்வளவு தெரிந்திருக்காது. இன்று, அவற்றின் வெடிப்பு ஏற்படுத்தும் சேதங்களைக் குறைத்திருக்க முடியாது.

எரிமலையியலாளர்
எரிமலையியலாளர்
US Geological survey

உலகம் முழுக்க பல எரிமலைகள் கொதித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பற்றிய ஆய்வுகளும் கண்காணிப்புகளும் அவசியம். தீத்தடுப்புக் கவச ஆடை, கையுறை, ஹெல்மெட், முகமூடி அனைத்தும் அவர்களைப் பாதுகாக்கிறது. அவற்றை அணிந்துகொண்டு, பிளந்திருக்கும், கொதித்துக்கொண்டிருக்கும் நெருப்புக் குழம்போடு கந்தக டை ஆக்சைடைக் கக்கிக்கொண்டிருக்கும் மலைகளின் துவாரங்களுக்கு மேலே பறப்பார்கள். அப்படிப் பறந்து, வெடிப்பு நிகழ்வு எப்படி ஏற்படுகிறது என்று கவனிப்பார்கள். அந்த ஆய்வு நடக்கும்போது, சில சமயங்களில் அவர்கள் எதிர்நோக்கும் கதிர்வீச்சு, வெப்பம் அனைத்தும் அவர்களுடைய பாதுகாப்புக் கவசங்களின் தாங்கு திறனை விஞ்சியதாக இருக்கும். அது, அவர்களின் உயிருக்கே ஆபத்தாகக்கூடும். ஆனால், மக்களுடைய பாதுகாப்பிற்காக, பூமியின் இயக்கவியலைப் புரிந்துகொள்வதற்காக அவர்களுடைய அர்ப்பணிப்பு நிறைந்த ஆய்வுப்பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

நெருப்புக் குழம்பு ஆறாக ஓடிய பகுதியில் நடக்கும்போது, அவர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அது, கண்ணாடியைப் போல் மென்மையானது. அதேபோல் கூர்மையானதும்கூட. உடலை மூடிய ஆடையோ, தோல் கையுறைகளோ இல்லையென்றால், நம் உடலைக் கிழித்துவிடும். அதில் வேலை செய்யும்போது, பல சூழல்களில் கந்தக வாயுவைச் சுவாசிக்க வேண்டிவரும். அதிலிருந்து தற்காத்துக்கொள்ள சுவாசக் குழாய்களையும் சுவாசத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கக் கருவிகளையும் அணிந்திருப்பார்கள்.

நெருப்புக் குழம்பு சிதறும்போதும் பொங்கும்போதும் பயணித்து வரும் பாதை என்பதால், அதீத வெப்பத்தோடு இருக்கின்ற குகைகளுக்குள் செல்லவேண்டியிருக்கும்.
குகை
குகை
Pixabay

இதையெல்லாம் தாண்டி, வெடித்தபிறகு வெளியாகும் நெருப்புக் குழம்பைப் பரிசோதனைக்காக சேகரிக்க வேண்டும். தன் பாதையில் வரும் அனைத்தையும் சாம்பலாக்கிவிடும் அந்தக் குழம்பை அவர்கள் சேகரித்தே ஆகவேண்டும். அதை சாவகாசமாகச் செய்துகொண்டிருக்க முடியாது. வேகவேகமாகச் செய்ய வேண்டும். இல்லையேல், கதிர்வீச்சு நிறைந்த வெப்பத்தை வெளியேற்றிக்கொண்டிருக்கும் அந்தக் குழம்பின் அனல்காற்றே அவர்களின் தோலை கருக்கிவிடும்.

அனைத்தையும் தாண்டி, அவற்றின் மாதிரிகளைச் சேகரித்து, வெப்பம், வேதிமக் கலவை போன்றவற்றை ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வின் முடிவுகள் வெடிப்பைத் தாண்டி வேறு ஏதேனும் நடப்பதாகக் காட்டினால், அரசாங்கத்தை எச்சரிப்பார்கள். பல சூழல்களில், அவர்கள் எரிமலைக் குகைகளுக்குள் செல்லவேண்டியிருக்கும். நெருப்புக் குழம்பு சிதறும்போதும் பொங்கும்போதும் பயணித்து வரும் பாதை என்பதால், அதீத வெப்பத்தோடு இருக்கின்ற குகைகளுக்குள் செல்லவேண்டியிருக்கும்.

Volcano
Volcano
Pixabay

சில நாள்களில், அலுவலகத்திலேயே வேலை முடிந்துவிடும். ஹெலிகாப்டர்களில் பறந்துசென்று கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தும் நாள்களும் உண்டு. சில நாள்களில் எரிமலை வெடிப்பதைப் பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஒருசில நாள்கள், ஆய்வுக் கூட்டங்களில், அறிவியல் மாநாடுகளில் கலந்துகொண்டிருப்பார்கள். அவர்களுடைய வாழ்வில் எல்லா நாள்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

கொட்டித் தீர்த்த கனமழை... பறிபோகும் உயிர்கள்... அச்சத்தில் கடலூர், டெல்டா மாவட்டங்கள்!

இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் முடிவெடுப்பதில்லை. இயற்கைதான் முடிவெடுக்கிறது. சுவாரஸ்யமான சாகசம் நிறைந்த வேலைதான். இவை இரண்டும் நிறைந்திருந்தாலே ஆபத்தும் இருக்கும்தானே. எரிமலையியல் துறையில் இவை அதிகமாகவே இருக்கின்றன. அதனாலேயே எரிமலையியலாளர்கள் சாகச வீரர்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.