Published:Updated:

நிவர் புயல்: `கஜா பாடம்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!’- டெல்டா மக்கள் முன்வைக்கும் யோசனைகள்

நிவர் புயல்
நிவர் புயல்

2018-ம் ஆண்டு கஜா புயலில் ஏற்பட்ட அனுபவத்தால், நிவர் புயலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் டெல்டா மக்கள் தீவிரமாகியிருக்கிறார்கள்.

நிவர் புயலால் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி தீவிர கனமழையுடன் காற்றும் வேகமாக வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு அங்கன்வாடிகளில் மெழுகுவத்தி, ரவா, நூடுல்ஸ், கோதுமை மாவு உள்ளிட்ட பொருள்களைத் தயார்நிலையில் இருப்புவைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள். மேலும், குடிநீர் பிரச்னையைச் சமாளிக்க ஒவ்வோர் ஊராட்சியிலும் மொபைல் ஜெனரேட்டர் வைக்க, அந்தந்த மாவட்ட நிர்வாகம் இப்போதே ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார்கள். இதுபோல் இன்னும் சில முக்கியமான முன்னேற்பாடுகள் குறித்து அலெர்ட் செய்கிறார்கள்.

டெல்டா
டெல்டா

2018-ம் ஆண்டு கஜா புயலில் ஏற்பட்ட அனுபவத்தால், நிவர் புயலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் டெல்டா மக்கள் தீவிரமாகியிருக்கிறார்கள். குறிப்பாக, புயலில் மரங்கள் சாய்ந்து மின்சார வொயர்கள் அறுபட்டும், டிரான்ஸ்ஃபார்மர்கள் பாதிக்கப்பட்டும் மின்சாரம் தடைப்படுவது வழக்கம். மரங்கள் கீழே சாய்வதால் பலவிதமான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது. மரங்களின் கனங்களை குறைத்தாலே, புயல் காற்றில் மரங்கள் கீழே சாய்வதைப் பெரும்பாலும் தவிர்க்க முடியும் என்பதால் டெல்டா மக்கள், தங்களது பகுதிகளிலுள்ள மரங்களின் கீளைகளை நீக்கிவருகிறார்கள். தென்னை மரங்களின் மட்டைகளையும் கழித்துவருகிறார்கள். வீடுகளின் மொட்டைமாடிகளில் போடப்பட்டிருந்த தகர ஷீட்கள் கடந்த கஜா புயலின்போது காற்றில் தூக்கி வீசப்பட்டு உயிர்ச் சேதத்தையேகூட ஏற்படுத்தின. நிவர் புயலில் அதுபோல் ஏதும் அசாம்பாவிதம் நிகழாமல் தடுக்க, மக்கள் தங்கள் வீட்டின் மொட்டைமாடிகளிலும், வீட்டின் முன்புறமும் போடப்பட்டிருக்கும் தகர ஷீட்களை கழற்றத் தொடங்கியிருக்கிறார்கள். தகர ஷீட்கள் காற்றில் பறக்காமல் இருப்பதற்காகச் சிலர், கூடுதலாக உறுதித்தன்மையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அதேசமயம், அந்தந்த மாவட்ட நிர்வாகம், புயல் முன்னேற்பாடுகளில் மேலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்திருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய தஞ்சையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரசேனன், ``கடந்த கஜா புயலின்போது மின்சாரம் இல்லாமல் பல கிராமங்கள் இருண்டுகிடந்தன. மெழுகுவத்திக்குக்கூட வழியில்லை. உணவுப் பொருள்களும்கூட கிடைக்கலை. அதே நிலைமை இந்த தடவையும் வந்துவிடக் கூடாது. டெல்டா மாவட்டங்களிலுள்ள எல்லா ரேஷன் கடைகளிலும் நிறைய மெழுகுவத்தி இருப்பு வைக்கணும். புயல் மழை நேரத்துல உப்புமா மாதிரி எளிதா சமைக்கப் பயன்படக்கூடிய ரவா, நூடுல்ஸ், சேமியா, கோதுமை மாவு உள்ளிட்ட உணவுப்பொருள்களையும் அங்கன்டிவாடிகளில் போதுமான அளவு இருப்புவைக்கணும்.

மரம்
மரம்

புயல்ல மின்சாரம் தடைப்பட்டு மக்கள் குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காத நிலைமை ஏற்படும். இதைச் சமாளிக்க, ஒவ்வொரு ஊராட்சியிலயும் நடமாடும் ஜெனரேட்டர்கள் தயார்நிலையில வைக்கணும். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திலும் பூஸ்டர் மோட்டார்கள் மூலம் தண்ணீர் தள்ளிவிடப்படுறதுனாலதான், குடிநீர் விநியோகம் செய்யப்படுது. புயல் நேரங்களில் மின்சாரத் தடையால், பூஸ்டர் மோட்டார்களை இயக்க முடியாமல் போயிடும். இதைச் சமாளிக்க, 200-300 ஹெச்.பி பவர் கொண்ட ஜெனரேட்டர்களைத் தயார்நிலையில வைக்க வேண்டும்.

நிவர் புயல்: `கஜா போன்ற பாதிப்பு இருக்காது; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்!’ ஆர்.பி.உதயக்குமார்

ஒவ்வோர் ஊராட்சியிலும் மரம் அறுக்கும் நவீன இயந்திரத்தைத் தயார்நிலையில் வைக்க வேண்டும். கிராமப்புறங்களிலுள்ள பள்ளிகளோட சாவி, பெரும்பாலும் அந்தந்தத் தலைமை ஆசிரியர்கள் கட்டுப்பாட்டுல இருக்குறது வழக்கம். இதனாலேயே கடந்த கஜா புயலப்போ, பொதுமக்களை பள்ளிகளில் தங்கவைக்க, அவசரத்துக்கு சாவி கிடைக்காமல் போயிடுச்சு. இந்த தடவை பள்ளிகளின் சாவிகளை இப்போதே முன்கூட்டி, ஊராட்சி அலுவலங்களில் ஒப்படைக்கச் செய்யணும். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சுற்றியுள்ள கீழ நம்மங்குறிச்சி, சிரமேல்குடி, மங்களூர், ஜாம்புவான் ஓடை, ஆலங்காடு மற்றும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சுற்றியுள்ள கீழத்தோட்டம், ஏரிப்புறக் கரை, மல்லிப்பட்டினம், ராஜாமடம் உள்ளிட்ட இன்னும் பல பகுதிகள், கடற்கரையை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகள்.

நிவர் புயல்
நிவர் புயல்
IMD

அங்கேயிருக்கும் மக்களை முன்கூட்டியே மேடான பகுதிகளில் பாதுகாப்பாக, உணவு ஏற்பாடுகளோடு தங்கவைக்க ஏற்பாடு செய்யணும். புயல், வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பிறகு, வெளி மாவட்டங்களிலிருந்து தீயணைப்புத்துறை, வனத்துறை, மின்சாரத்துறை ஊழியர்களை வரவைக்க ஏற்பாடு செய்யறது வழக்கமா இருக்கு. மரங்கள் கீழே சாய்ஞ்சு கிடக்கும்போது, அவசரச் சூழல்ல, உரிய நேரத்துக்கு அவங்களால வர முடியாமல் போயிடுது. எனவே, முன்கூட்டியே வெளி மாவட்டங்கள்லயிருந்து, அந்த ஊழியர்களையெல்லாம் இப்பவே வரவழைத்துத் தயார்நிலையில் வைக்கணும். அந்தந்த மாவட்ட நிர்வாகம் இதுக்கெல்லாம் ஏற்பாடு செய்யணும். குறிப்பாக, மாவட்ட ஆட்சியர்கள் இதுல தீவிர கவனம் செலுத்தணும்” என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு