Published:Updated:

`புயலைவிட பெரிய பாதிப்பு!’ - தொடர்மழையால் கலங்கி நிற்கும் டெல்டா விவசாயிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கண்ணீரில் டெல்டா விவசாயிகள்
கண்ணீரில் டெல்டா விவசாயிகள்

``பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியாக டெல்டாவை அறிவித்து உரிய நிவாரணம் கிடைப்பதற்கான நடவடிக்கையைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்’’ - விவசாயிகள்.

டெல்டா மாவட்டங்களில் நிவர், புரெவி புயல் ஏற்படுத்திய பாதிப்பைவிட, தற்போது பெய்துவரும் தொடர்மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதையடுத்து வயலிலேயே சாய்ந்து அழுகி, முளைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையில் தவித்துவருவதால் பொங்கல் விழா களையிழந்து காணப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பிவருவது ஒருபக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும், அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெல் வயல்களில் குளம்போல் மழை நீர் தேங்கி நிற்பது விவசாயிகளைப் பெரும் கவலையடையச் செய்திருக்கிறது.

டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்களை பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அறுவடை செய்வது வழக்கம். அறுவடைப் பணி தொடங்கவிருந்த சூழ்நிலையில் மழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் அறுவடைப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுவிட்டன. வயல்களில் தேங்கி நிற்கும் மழைநீர் வடிவதற்கு வாய்ப்பில்லாததால், நெற்பயிர்கள் அழுகிவருகின்றன.

தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

இதேபோல் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள் முளைத்துவருகின்றன.நெற்பயிர்கள் மட்டுமல்லாமல் கடலை, உளுந்து, எள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களும் சேதமடைந்திருக்கின்றன. தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் கோவிந்தராவ் எத்தனை விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், எத்தனை ஏக்கர் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணிக்கையைக் கண்டறியும் பணிகளில் முனைப்பு காட்டிவருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், `பொங்கல் பண்டிகையில் பாடுபட்டு விளைவித்த பொருள் வீடு வந்து சேர்வதற்குள் வீணாகிவிட்டதே’ என அனைத்து விவசாயிகளும் பெரும் கவலையடைந்து, செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். மகிழ்ச்சியுடன் பொங்கலைக் கொண்டாட வேண்டியவர்கள் அடுத்த என்ன செய்வது எனத் தெரியாமல் பெரும் கேள்விக்குறியுடன் தவித்து நிற்கின்றனர்.

இது குறித்து விவசாயி ஜீவக்குமார் கூறுகையில், ``டெல்டா மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடிப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 60,000 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. இவற்றில் 90 சதவிகித பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக, தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது. இதனால் அறுவடை செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்னரே வீடு வந்து சேர வேண்டிய நெல் மணிகள் மழைநீரில் நனைந்து அழுகத் தொடங்கிவிட்டன.

ஜீவக்குமார்
ஜீவக்குமார்

நெற்பயிர்கள் வயலோடு வயலாகச் சாய்ந்து கிடக்கின்றன. நெற்பயிர் வீணாகி வருவதால், வரும் மாதங்களில் வைக்கோலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் கால்நடைகள் வளர்ப்பதிலும் பெரும் சிரமம் ஏற்படும். வேங்கராயன் குடிக்காடு உள்ளிட்ட பல கிராமங்களில் பயிர் செய்யப்பட்ட நிலக்கடலைப் பயிர் முற்றிலுமாக மூழ்கிவிட்டது.

நிவர், புரெவிப் புயல்களைவிட பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது இந்தத் தொடர் மழை. பொருளாதார இழப்பு, படாத பாடுபட்டு கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த நெற்பயிர் கண்ணெதிரிலேயே வீணாகிவருவதைக் காண மனமில்லாமல் விவசாயிகள் தவித்துவருகின்றனர். டெல்டா விவசாயிகளைப் பெரும் துயரம் சூழ்ந்திருக்கிறது.

மகிழ்ச்சியாகப் பொங்கலைக் கொண்டாட வேண்டிய விவசாயிகள் கண்கள் கலங்கி நிற்கின்றனர். இதனால் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் களையிழந்து காணப்படுவதுடன், கசப்பான பொங்கலாகவும் மாறியிருக்கிறது. தமிழக அரசு துரிதமாகச் செயல்பட்டு, பாதிப்பை முழுமையாகக் கண்டறிந்து, அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மனமுடைந்து நிற்கும் விவசாயிகளுக்கு இதுவே தற்காலிகமான தீர்வாகவும் ஆறுதலாகவும் இருக்கும். நிவர், புரெவி புயலில் பெரும்பாலான விவசாயிகள் பாதிப்படைந்த நிலையில், பாதிப்பின் கணக்கீட்டை முறையாகச் செய்யாததால், முழுமையான நிவாரணம் விவசாயிகளுக்கு இதுவரை கிடைக்கவில்லை.

இந்தநிலையில், மழையால் பேரிடர் அளவுக்கு பெரும் பாதிப்பை விவசாயிகள் சந்தித்து நிற்கின்றனர். எனவே, பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியாக டெல்டாவை அறிவித்து, உரிய நிவாரணம் கிடைப்பதற்கான நடவடிக்கையைத் தமிழக அரசு எடுக்க வேண்டும். மனம் கசந்தநிலையில் பொங்கல் பண்டிகையை எதிர்கொண்டிருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகையை வழங்குவது மட்டுமே இனிப்பைத் தரக்கூடியதாக இருக்கும்’’ எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு