Published:Updated:

நிவர் புயல் நகரும் வேகம் குறைவு; நள்ளிரவு 2 மணிக்குப் பின் கரையைக் கடக்க வாய்ப்பு?

நிவர் புயல்| சென்னை மழை - மெரினா கடற்கரை
நிவர் புயல்| சென்னை மழை - மெரினா கடற்கரை ( ராகேஷ் பெ )

வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் நிவர் அதி தீவிரப் புயல் நகரும் வேகம் மணிக்கு 16 கிலோமீட்டரிலிருந்து 13 கிலோமீட்டராகக் குறைந்த்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தற்போது சென்னைக்குத் தென்கிழக்கே 185 கி.மீ தொலைவிலும் புதுச்சேரியிலிருந்து சுமார் 115 கி.மீ தொலைவிலும் நிவர் மையம்கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. கடலூரிலிருந்து சுமார் 90 கி.மீ தூரத்தில் மையம்கொண்டிருந்த நிவர் அதி தீவிரப் புயல், தற்போது சுமார் 110 கி.மீ தொலைவில் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சீற்றத்துடன் காணப்படும் புதுச்சேரி கடல்
சீற்றத்துடன் காணப்படும் புதுச்சேரி கடல்
அ.குரூஸ்தனம்

புதுச்சேரி அருகே புயல் கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டிருக்கிறார்கள். நிவர் புயல் நள்ளிரவு 2 மணிக்குப் பிறகு கரையைக் கடக்கவிருப்பதாக பேரிடர் மீட்புக்குழுவின் இயக்குநர் தகவல் தெரிவித்திருக்கிறார். மேலும், புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருப்ப்பதாகவும் பேரிடர் மீட்புக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதி தீவிரப் புயலாகும் நிவர்; 15 மாவட்டங்களில் கனமழை - காற்று 155 கி.மீ வேகத்தில் வீசலாம்!

இந்தநிலையில், சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய உதயகுமார், நிவர் புயலால், காற்று பலமாக வீசும் காரணத்தால் தமிழகத்தில் 286 செல்போன் டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அனைத்துப் பகுதிகளிலும் தகவல் தொடர்பு சேவை துண்டிக்கப்படாமல் உறுதிசெய்யப்பட்டிருப்ப்பதாகவும் தெரிவித்தார்.

நிவர் புயல் - சென்னை
நிவர் புயல் - சென்னை

மேலும், மீட்புப் பணிகளுக்காக இந்தியக் கப்பற்படையின் இரண்டு கப்பல்கள் தயார்நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார். அதேபோல், தமிழகம் முழுவதும் பாதிக்கப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுவருவதாகக் கூறிய அமைச்சர், 1,516 நிவாரண முகாம்களில் 1.33 லட்சம் பேர் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருப்ப்பதாகத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு