Published:Updated:

`நான்கு நாள்களாகக் காத்துக்கிடக்கும் குடும்பங்கள்’- மீனவர்கள் இறப்பால் சோகத்தில் மூழ்கிய கிராமம்!

இரா.மோகன்
உ.பாண்டி

கடந்த 4 நாள்களாகத் தனது குழந்தைகளுடன் காத்துக்கிடந்த ஜெயலலிதா, மதனின் இறப்புச் செய்தியைக் கேட்டு மயக்கமடைந்தார்.

 fishermen Madhan's family
fishermen Madhan's family

புதிதாக வாங்கிய படகு, காற்றின் வேகத்தில் சிக்கி கடலில் கவிழ்ந்தது. இந்தச் சம்பவத்தில் கடலூரில் வாங்கிய படகில் பயணித்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். எஞ்சிய 4 பேரில் இருவரது உடல் மீட்கப்பட்டதால் மீனவ கிராமங்களைச் சோகம் சூழ்ந்துள்ளது.

Relatives of fishermen
Relatives of fishermen

ராமேஸ்வரம் நடராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த காந்தி என்பவருக்குப் புதிய நாட்டுப்படகு வாங்குவதற்காக, கடந்த மாதம் 29-ம் தேதி, 10 மீனவர்கள் கடலூர் சென்றனர். கடலூரில் இன்ஜின் பொருத்திய பைபர் படகை வாங்கிய இவர்கள், செப்.3-ல் கடலூரில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்துகொண்டிருந்தனர். அன்றைய தினம், பகல் 12 மணி அளவில் இவர்களது படகு புதுக்கோட்டை மாவட்டம் மல்லிபட்டினத்தில் இருந்து 15 கடல் மைல் தொலைவில் வந்துகொண்டிருந்தது. அப்போது கடலில் வீசிய பலத்த காற்றினால் படகு மூழ்கியது.

இதனால், படகில் இருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் முனியசாமி (47), ரஞ்சித்குமார் (23), மதன் (26), இலங்கேஸ்வரன் (20), தரக்குடியான் (25), காந்தகுமார் (23), செந்தில்வேல் (31), முனீஸ்வரன் (24), உமாகாந்த் (19), காளிதாஸ் (19) ஆகிய பத்து மீனவர்களும் கடலில் மூழ்கி தத்தளித்தனர். இருப்பினும், கடலில் மூழ்கிய மீனவர்களில் செந்தில்வேல் மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரும் கரைக்குச் சென்று உதவிக்கு ஆட்களை அழைத்து வர நீந்திச் சென்றனர். மற்ற மீனவர்கள் மிதவை மற்றும் டீசல் கேன்களைப் பிடித்தபடி கடலில் கிடந்துள்ளனர். இவர்கள் இருவரும் மல்லிபட்டினம் மீனவர்களால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்தில் மேலும் 8 பேர் கடலில் தத்தளிப்பது தகவல் வெளியே தெரியவந்தது.

collector
collector

இதனால் அச்சம் அடைந்த மீனவர்களது உறவினர்கள், கடலில் மூழ்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டு கடற்படை கப்பல் மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்பக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மீனவர்களை மீட்கும் பணி விரைவுபடுத்தப்பட்டது. இந்திய கடலோரக் காவல் படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் பணியில் ஈடுபட்டன. இந்தத் தேடுதல் பணியின்போது, கடலில் தத்தளித்த முனியசாமி, தரக்குடியான், முனீஸ்வரன், ரஞ்சித்குமார் ஆகிய நால்வரும் உயிருடன் மீட்கப்பட்டனர். அதேநேரம், மற்ற மீனவர்களின் நிலை தெரியாததால் அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

அவர்களை மீட்கக் கோரி நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரம் கிராம மக்கள், கடந்த 4 நாள்களாக வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடும்பங்களுடன் போராடிவந்த நிலையில், காணமல் போன மீனவர்களில் இருவரது உடல் சென்னையில் இருந்து வந்த கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டது. இதுகுறித்த தகவலை ராமேஸ்வரத்தில் திரண்டிருந்த மீனவர் குடும்பத்தினரை சந்தித்த மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் தெரிவித்தார். மேலும், இரு மீனவர்களை மீட்க உரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

madhan
madhan
உ.பாண்டி

கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்ட இரு மீனவர்களின் உடல், நேற்று நள்ளிரவு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. அந்த உடல்கள் மதன், காந்தகுமார் ஆகியோர் என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற இரு மீனவர்களைத் தேடும் பணி இன்று காலை தொடங்கியது.

கடலில் மூழ்கி உயிரிழந்த மதனுக்கு, ஜெயலலிதா என்ற மனைவியும், 5 வயது பெண் குழந்தை மற்றும் 4 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். தனது கணவர் உயிருடன் திரும்பி விடுவார் என கடந்த 4 நாள்களாகத் தனது குழந்தைகளுடன் காத்துக்கிடந்த ஜெயலலிதா, மதனின் இறப்பு செய்தியைக் கேட்டு மயக்கமடைந்தார். விவரம் அறியா நிலையில், அவரது மடியில் இருந்த குழந்தைகளைக் கூடியிருந்த உறவினர்கள் தாங்கிப் பிடித்ததுடன், ஜெயலலிதாவை மயக்க நிலையில் இருந்து தெளியவைத்தனர். தந்தை உயிரிழந்த விபரம்கூட அறிய முடியாத நிலையில் உள்ள குழந்தைகள் இருவரையும் கட்டிப் பிடித்துக்கொண்டு உறவினர்கள் அழுது புலம்பிய சம்பவம் அனைவரையும் கண்ணீர்விட செய்தது.

Kanthakumar
Kanthakumar

சடலமாக மீட்கப்பட்ட மற்றொரு மீனவரான காந்தகுமாருக்கு வயது 23. திருமணம் ஆகவில்லை. இளம் வயதில் தங்கள் மகனை பறிகொடுத்ததை தாங்கிகொள்ள முடியாமல், காந்தகுமாரின் பெற்றோர் அழுது புலம்பி தவிக்கின்றனர். அவர்களைத் தேற்ற முடியாத உறவினர்களும் கண்ணீருடன் குழுமியுள்ளனர். புதிய படகு வாங்கி தொழிலுக்குச் செல்ல நினைத்த மீனவர்களின் வாழ்க்கை, தொடங்கிய இடத்திலேயே முடிந்துபோன துயரச் சம்பவம், மீனவ கிராம மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.