Published:Updated:

அமெரிக்கா: அலாஸ்காவில் 8.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! - சுனாமி எச்சரிக்கை

அலாஸ்கா நிலநடுக்கம்
அலாஸ்கா நிலநடுக்கம்

அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா மாகாணத்தில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்தப் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆய்வு மையத்தின் தகவல்படி 28-ம் தேதி புதன்கிழமை, உள்ளூர் நேரம் இரவு 10:15 மணிக்கு 4 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இது மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முதலில் கண்டறியப்படும் அளவுக்கும், ஆய்வுகளுக்குப் பின்னரும் அளவுகள் மாறுபடலாம்.

முதலில் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் 7.2 ரிக்டர் அளவில் 35 கி.மீ ஆழத்தில் நடந்திருப்பதாகக் கணக்கிட்டது. ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் இந்த நிலநடுக்கத்தை 8.1 ரிக்டர் அளவில் 10 கி.மீ ஆழத்தில் நடந்திருக்கலாம் என்று மதிப்பிட்டிருக்கிறது. மேலும், அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு அமெரிக்க பசிபிக் பிரதேசங்களான குவாம், வடக்கு மரியானா தீவுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுத்திருக்கிறது. 1965-ம் ஆண்டுக்குப் பிறகு வடக்கு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது.

சுனாமி எச்சரிக்கை
சுனாமி எச்சரிக்கை

இந்த மாதம் 22-ம் தேதி அலாஸ்காவின் தெற்கு நகரமான சிக்னிக்கிலிருந்து 75 கி.மீ தூரத்தில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாகாணத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என்றபோதிலும் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் அந்தப் பகுதி மக்களை எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். மேலும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு