Published:Updated:

உத்தரகாண்ட்டை உலுக்கிய பெருவெள்ளம்; 203 பேர் மாயம்; 11 உடல்கள் மீட்பு! - என்ன நடந்தது?

உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் ஓடும் தவுளிகங்கா நதியில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் 203 பேர் மாயமாகியிருப்பதாகவும், 11 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷி கங்கா நகரத்தின் அருகில் ஓடும் தவுளிகங்கா நதி, அலக்நந்தா ஆற்றின் கிளை நதி. ஆற்றை ஒட்டிய மலைப் பகுதியில் நேற்று ஏற்பட்ட பனிச்சரிவின் காரணமாக, பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், தவுளிகங்கா நதியில் தபோவன நீர்மின் நிலையக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த வெள்ளத்தால் 203 பேர் வரை மாயமாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இவர்களில் கட்டுமானப் பணியில் ஈட்டுப்பட்டிருந்த 30 பேரும், இரண்டு காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர். இவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது.

மீட்புப் பணி
மீட்புப் பணி
AP

மீட்புப் பணிகள் குறித்து உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறுகையில், ``கட்டுமானம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தின் அருகே இருந்த சுரங்கத்தின் உள்ளே 35 பேர் வரை சிக்கியிருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்கள். முன்னதாக, மற்றொரு சுரங்கத்தில் சிக்கியிருந்த 12 பேரை இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.

இந்த திடீர் வெள்ளத்தில் இரண்டு நீர்மின் நிலையங்கள் மற்றும் முக்கியமான பாலம் ஒன்றும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நான்கு சிறிய பாலங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பகுதியிலுள்ள 11 கிராமங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. அந்த கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில், ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள்
மீட்புப் பணிகள்
AP

மீட்புப் பணிகள் மற்றும் தற்போதைய சூழல் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கேட்டறிந்தனர். அதேபோல், உ.பி., குஜராத், பீகார் முதலமைச்சர்கள் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர். மற்ற பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. மாயமான 150 பேரைத் தேடும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர், இந்தோ - திபெத் எல்லை ப் பாதுகாப்புப் படையினர், ராணுவ வீரர்கள் ஆகியோர் ஈடுபட்டிருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உத்தரகாண்ட்: தவுலிகங்கா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு - மீட்புப் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள்!

இந்தச் சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, ``உத்தரகாண்ட்டில் வெள்ள நிலையைத் தொடர்ச்சியாகக் கண்காணித்துக்கொண்டிருக்கிறோம். இந்தக் கடினமான தருணத்தில் உத்தரகாண்ட் மாநிலத்துக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும். அவர்களுக்கு ஆதரவாகவும், அனைவரின் பாதுகாப்புக்காகவும் இந்த தேசமே பிரார்த்திக்கிறது.

தேசியப் பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட மீட்புப் படைகள் அங்கு முகாமிட்டு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும். வெள்ளத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும்’’ என்று அறிவித்திருக்கிறார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், ``கூடுதல் மீட்புப் படையினர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு அனுப்பப்படுகின்றன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவு குறித்து மாநில முதல்வர் டி.எஸ்.ராவத், இந்தோ - திபெத் எல்லைக் காவல்படையினர் மற்றும் என்.டி.ஆர்.எஃப் குழுவுடன் பேசிவருகிறோம். உத்தரகாண்ட் மக்கள் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் " என்று தெரிவித்தார்.

உத்தரகாண்ட்டின் ஜோஷிமத் மாவட்டத்திலுள்ள பனிப்பாறைகள் சரிவே வெள்ளம் ஏற்பட்டதற்குக் காரணம் என்று உள்ளூர் அதிகாரிகள் கூறினர். ஆனால், விஞ்ஞானிகள் பனிப்பாறை ஏரி வெடிப்புதான் வெள்ளத்துக்குக் காரணம் என்று கூறியுள்ளனர். இந்தநிலையில், இன்று இது குறித்து ஆய்வு நடத்துவதற்காக விஞ்ஞானிகள் குழு உத்தரகாண்ட் சென்றிருக்கிறது. மத்திய நீர்வள ஆணையம் (சி.டபிள்யூ.சி) அளித்த தகவல்களின்படி, தற்போதைய வெள்ளத்தால் எந்த ஆபத்தும் இல்லை என்றும், நீர்மட்டம் மட்டும் உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

இது குறித்து தேசியப் பேரிடர் மீட்புக்குழு டி.ஜி எஸ்.என்.பிரதான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``ஞாயிறு காலை 10:45 மணியளவில் ஜோஷிமத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவர் எங்கள் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்புகொண்டு பேசினார். இரண்டு நாள்களுக்கு முன்னர் ரிஷிக்கேஷிலுள்ள நந்தா தேவி மலையில் பனிச்சரிவு ஏற்பட்டதாக எச்சரித்தார். இதையடுத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்புக்குழுவினரை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த நிலையில் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிட்டது.

சீன எல்லைக்குச் செல்லும் வழியிலுள்ள சுமார் ஏழு கிராமங்களை ஒட்டிய சிறிய பாலங்கள் துண்டிக்கப்பட்டுவிட்டன. ஜோஷிமத் - மலாரி நெடுஞ்சாலையில், எல்லை சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ) கட்டிய பாலமும் இடிந்து விழுந்திருக்கிறது. இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுக்கள், உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்த தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்கள் போன்றவை சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றன. அதே நேரத்தில் மீட்புப் பணிகளுக்கு உதவ டெல்லியிலிருந்து கூடுதல் படையினர் விமானத்தில் வரவிருக்கிறார்கள்’’ என்றார்.

சமீபத்திய தகவல்படி, 203 பேர் காணாமல்போயிருப்பதாகவும் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு