Published:Updated:

புயலில் சிக்கிய ஜெமினி கணேசன் - சாவித்திரி... 56 ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடியில் நடந்தது என்ன?

Gemini Ganesan - Savithri ( Photo: Vikatan Archives )

56 ஆண்டுகளுக்கு முன் தெற்கு அந்தமான் கடலில் உருவான புயலினால் தனுஷ்கோடிக்கு நேர்ந்தது என்ன?

புயலில் சிக்கிய ஜெமினி கணேசன் - சாவித்திரி... 56 ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடியில் நடந்தது என்ன?

56 ஆண்டுகளுக்கு முன் தெற்கு அந்தமான் கடலில் உருவான புயலினால் தனுஷ்கோடிக்கு நேர்ந்தது என்ன?

Published:Updated:
Gemini Ganesan - Savithri ( Photo: Vikatan Archives )

இலங்கை அருகே வங்க கடலில் உருவாகிய `புரெவி' புயல் தமிழக கடலோர மாவட்டங்களை மட்டுமன்றி டெல்டா மாவட்டங்களையும் மிரட்டி வருகிறது. 4-ம் தேதி அதிகாலை பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்க உள்ள இந்தப் புயலின் தாக்கத்தால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் `ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது. இந்தப் புயல் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் என்னவாக இருக்கும் என அச்சத்தின் உச்சத்தில் தமிழகம் உறைந்து கிடக்கிறது. இந்த சூழலில் 56 ஆண்டுகளுக்கு முன் தெற்கு அந்தமான் கடலில் உருவான புயலின் தாக்கத்தால் துறைமுக நகரமான தனுஷ்கோடிக்கு நேர்ந்தது என்ன என்பதை விளக்குகிறது இந்த சிறப்பு பகிர்வு.

புரெவி புயல்
புரெவி புயல்
IMD

சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயர்களுக்கும் சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியர்களுக்கும் பிரதான துறைமுக நகராக விளங்கியது தனுஷ்கோடி. வெள்ளையர்களின் நாடு பிடிக்கும் ஆசைக்கு பெரும் உதவியாக இருந்த துறைமுகமாகவும் விளங்கியது. விமான சேவைகள் மேம்படாத காலத்தில் பிழைப்புக்காக நாடு விட்டு நாடு சென்ற தொழிலாளர்களுக்கு சுலபமான வழியாகவும் இருந்தது தனுஷ்கோடி. இலங்கை என்ற மலைப்பகுதியை பொன்விளையும் பூமியாக மாற்றுவதற்காக ஆயிரமாயிரம் இந்தியர்களை அடிமைகளாக இலங்கைக்குக் கொண்டு செல்ல துணையாக இருந்ததும் இந்தத் தனுஷ்கோடி துறைமுகம்தான்.

இத்தகைய பல வரலாற்றுப் பதிவுகளுக்கு சான்றாகத் திகழ்ந்து விளங்கிய தனுஷ்கோடி துறைமுக நகரத்தை ஒரே இரவில் புரட்டிப் போட்டது ஆழிப்பேரலை. 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களையும், ஓடிக்கொண்டிருந்த ரயிலில் பயணித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களையும் ஒரு சேர கடலுக்குள் ஜல சமாதி ஆக்கியது அந்தக் கோர புயல்.

அன்றைய புயலின் மிச்சம்.
அன்றைய புயலின் மிச்சம்.
உ.பாண்டி

மனித உயிர்களை மட்டுமல்லாது கால்நடைகள், துறைமுகக் கட்டடங்கள், ரயில் நிலையம், வழிபாட்டுத் தலங்கள், நிர்வாக அலுவலகங்கள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் என எவற்றையும் விட்டு வைக்காமல் தனது கோரப் பசிக்கு ஆட்படுத்திய ஆழிப்பேரலையின் வேகத்துக்கு மிச்சமாக நின்றவை சிதிலமடைந்த கட்டடங்கள் சில மட்டுமே.

1964-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி தெற்கு அந்தமானில் உருவான புயல் வலுவிழந்து இலங்கையை நோக்கி திரும்பியது. டிசம்பர் 22-ம் தேதி இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளைச் சூறையாடிய அந்தப் புயல், தனது அகோர பசிக்கு தனுஷ்கோடியை விழுங்கியது டிசம்பர் 23-ம் தேதி நள்ளிரவில்.

64-ம் ஆண்டு புயலில் சிக்கிய தனுஷ்கோடி
64-ம் ஆண்டு புயலில் சிக்கிய தனுஷ்கோடி
விகடன்

கடும் மழைக்கு மத்தியில் தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்த தனுஷ்கோடி மீனவர்களும் மற்றவர்களும் தங்களை விழுங்கக் காத்திருக்கும் ஆழிப்பேரலை பற்றி அறிந்திருக்கவில்லை. அதன் விளைவே நள்ளிரவில் நல்ல உறக்கத்தில் இருந்த மக்கள் குடும்பம் குடும்பமாக ஜலசமாதி ஆகிப்போன சோகம். அந்த ஆழிப்பேரலையில் சிக்கிய பாம்பன் தனுஷ்கோடி (வண்டி எண்:653) பயணிகள் ரயிலில் பயணித்த 115 உயிர்களையும் உள்வாங்கிக் கொண்டது. இவர்களில் குஜராத் மாநிலத்தில் இருந்து உல்லாச பயணம் வந்த கல்லூரி மாணவர்கள் 40 பேரும் உயிரிழந்தனர். 7 அடி உயரத்துக்கு எழும்பிய அலைகள் தனுஷ்கோடி ஊருக்குள் புகுந்து ஆயிரக்கணக்கான உயிர்களை அள்ளிக்கொண்டு போனது. அங்கிருந்த அத்தனை கட்டடங்களும் பொங்கிவந்த கடல் அரசனுக்கு தலைவணங்கிப் போனதால் அந்தக் கட்டடங்களில் வாழ்ந்தவர்களின் உயிரற்ற சடலங்களையும், மூழ்கிப்போன கட்டடங்களின் மிச்சசொச்சங்களையும் மட்டுமே புயல் விட்டு வைத்தது. தந்தி, தொலைத்தொடர்பு கம்பங்களும் முறிந்துபோனதால் இந்தத் தகவல்கள் இரு நாள்களுக்குப் பிறகுதான் முழுமையாக வெளிவந்தன.

கடலுக்கு இரையாகாமல் தப்பிய பலர் மணல் திட்டுகளில் தவித்த நிலையில் மோட்டார் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். புயலின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத பாம்பன் ரயில் பாலம் முழுமையாக சேதமடைந்தது. இதனால் நிலப்பரப்புடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டு ராமேஸ்வரம் தனி தீவானது. குடிநீருக்குக்கூட `வாட்டர் டாங்’ எனப்படும் ரயிலையே தனுஷ்கோடி மக்கள் நம்பியிருந்தனர். புயலால் ரயில் பாதை சேதமடைந்த நிலையில் அவர்களுக்காக ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. விமானத்தின் மூலம் உணவுப் பொட்டலங்கள் போடப்பட்டன. தனுஷ்கோடியில் சிக்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாரதா எனும் கப்பல் மூலம் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். தனுஷ்கோடி நகரமெங்கும் கடல் நீர் சூழ்ந்த நிலையில் அங்கெல்லாம் மனித உடல்களாக மிதந்தன. 4 நாள்களுக்குப் பிறகு கடல் நீர் வடிந்த பின்னரே அந்த உடல்கள் மீட்கப்பட்டன.

தனுஷ்கோடி தேவாலயம்
தனுஷ்கோடி தேவாலயம்
உ.பாண்டி

மனிதர்கள் இனி வாழத் தகுதி இல்லாத தனுஷ்கோடியாக மாற்றிச் சென்ற அந்தக் கோர புயலின் இரவை நேரில் கண்டவர்களில் முக்கியமானவர்கள் மறைந்த காதல் மன்னன் ஜெமினி கணேசன் - நடிகையர் திலகம் சாவித்திரி தம்பதி. 56 ஆண்டுகளுக்கு முன்பு துறைமுக நகரமான தனுஷ்கோடியைத் துடைத்தெறிந்த ஆழிப்பேரலையின் ஆவேசத்தையும், நடுங்க வைத்த அந்த இரவைப் பற்றியும் நடிப்புலகின் ஆளுமைகளாகத் திகழ்ந்த தம்பதி பகிர்ந்துகொண்டவை இங்கே.

பெரும் கண்டத்திலிருந்து தப்பிப் பிழைத்த ஜெமினி கணேசன், ``சென்னையிலிருந்து படப்பிடிப்புக்காகக் கிளம்பியபோது ராமேஸ்வரம் செல்ல திட்டமிடவில்லை. கொடைக்கானலில் தங்கியிருக்கும்போதுதான் `ராமேஸ்வரம் போய்ட்டு வருவோமா’ என சாவித்திரி கேட்டாள். ஒரு நாளில் ராமேஸ்வரம் போய்விட்டு திரும்பிவிடலாம் என எண்ணிக்கொண்டு ராமேஸ்வரம் புறப்பட்டோம். நான், சாவித்திரி, மகள் விஜயா மற்றும் பேமிலி டாக்டர்ஸ் ராமகிருஷ்ணா, லீலாவதி, ஜெயம்மா ஆகிய 6 பேரும் 22-ம் தேதி காலை ராமேஸ்வரம் வந்தடைந்தோம். அன்று காலை ராமேஸ்வரம் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு, தனுஷ்கோடி சென்று கடலில் குளித்தோம். குளித்து முடித்ததும் ராமேஸ்வரம் திரும்பத் தயாராகுமாறு சாவித்திரியிடம் கூறினேன். அவளோ `மேலும் ஒரு நாள் தனுஷ்கோடியிலேயே தங்கிவிட்டு ராமேஸ்வரம் போகலாம்’ என்றாள். ஏனோ அதை ஏற்க மறுத்த நான் வேண்டாம் இன்றே திரும்பிவிடுவோம் எனப் பிடிவாதமாகச் சொல்லி பிற்பகல் தனுஷ்கோடியில் இருந்து கிளம்பிவிட்டோம். அன்று இரவு விரைவாகவே தூங்கிவிட்டேன்’’ என்றார்.

Gemini Ganesan - Savithri
Gemini Ganesan - Savithri
Photo: Vikatan Archives

நடந்ததை நடிகை சாவித்திரியும் பதிவு செய்திருக்கிறார். ``அன்று இரவு 8 மணிக்கு மேல் பெரும் சத்தத்துடனும், காற்றின் இரைச்சலுடனும் புயல் அடிக்கத் தொடங்கியது. காற்று இவ்வளவு பலமாக வீசுகிறதே என்ன நடக்குமோ? என நானும் டாக்டர்களும் கவலையோடு பேசிக்கொண்டிருந்தோம். இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை. காற்றின் வேகமும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனால் அவரும் (ஜெமினி) விழித்துக்கொண்டார். நள்ளிரவு 3 மணி இருக்கும். நரிகள் ஒன்று சேர்ந்து ஊளையிடும் சத்தம் கேட்டபடி இருந்தது. பயங்கரமாக சுழன்றடித்த சூறாவளி காற்றின் ஓசையும், நரிகளின் ஊளைச் சத்தமும் சேர்ந்து எங்களை நடுநடுங்கச் செய்துவிட்டன. சினிமாவில் நடப்பது போன்ற சம்பவம் நேரடியாக வாழ்க்கையிலும் நடக்கிறதே என எண்ணிணேன். அதன் பின் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு பயங்கர புயல் வீசியது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்தின் அருகில் நாங்கள் தங்கியிருந்த பிரயாணிகள் பங்களாவின் கூரைகள் பறந்துவிட்டன.

என்னைக் குலை நடுங்க வைத்த அந்த இரவின் பொழுது விடிந்ததும் பங்களாவை விட்டு வெளியே வந்தோம். வெளிப்புறம் எங்கும் ஒரே வெள்ளக்காடாகக் கிடந்தது. `என்னம்மா ரோட்டில் தண்ணீர் ஆறு போல ஓடுது’ என என் மகள் விஜயா ஆச்சர்யமாகக் கேட்டாள். மீண்டும் கோயிலுக்குச் சென்றபோது வழியில் இருந்த மரங்கள் சாய்ந்தும், வீடுகள் இடிந்தும் கிடந்தன. இவ்வளவு கோரமாகப் புயல் அடித்திருக்கிறதே நாங்கள் திரும்பிச் செல்ல ரெயில் கிடைக்குமா எனக் கோயில் அதிகாரியிடம் கேட்டோம். அவரோ `ரெயிலா? பாம்பன் பாலத்தையே கடல் அடித்துப் போய்விட்டதே. தனுஷ்கோடி மூழ்கிக் கிடக்கிறது. அங்கெல்லாம் பலத்த சேதம்’ என்றார். மேலும் தனது தம்பியும் கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகச் சொல்லி கலங்கினார். புயலின் முழு பயங்கரத்தையும் அப்போதுதான் நாங்கள் உணர்ந்தோம்.

புயலில் எஞ்சிய தனுஷ்கோடி ரயில் நிலைய தண்ணீர் தொட்டி.
புயலில் எஞ்சிய தனுஷ்கோடி ரயில் நிலைய தண்ணீர் தொட்டி.
உ.பாண்டி

நாங்கள் வைத்திருந்த 1,000 ரூபாயைக் கொண்டு புயலால் வீடு வாசல்களை இழந்து தவித்தவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தோம். காயம்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சேர்க்க என் வீட்டுக்காரர் உதவினார். அன்று முழுவதும் ராமேஸ்வரத்திலேயே தங்கியிருந்தோம். மறுநாள் காலை ரயில் நிலையத்தில் ஒரு ரயில் இன்ஜின் மட்டும் நின்றுகொண்டு இருந்தது. அதில் ஒரு பெட்டியை மட்டுமாவது சேர்த்து எங்களை பாம்பன் வரை கொண்டு விடும்படி டிரைவரிடம் கேட்டோம். `ரயிலை இயக்க நிலக்கரி இல்லை.

பாம்பனில் இருந்து எடுத்து வருகிறேன்’ எனக் கூறிச் சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. மாலை 4 மணியிருக்கும் ஒரு ரயில் வந்தது. அதில் மந்திரி கக்கன் வந்தார். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் கொடுத்தார். இது தவிர விமானம் மூலமும் உணவுப் பொட்டலங்கள் போட்டார்கள். 26-ம் தேதி காலை மந்திரி கக்கன் வந்த ரயிலில் நாங்களும் ஏறி பாம்பனை அடைந்தோம். அங்கிருந்த மோட்டார் படகில் ஏறி மண்டபத்தை அடைந்தோம். அங்கு எங்களுக்காகத் தயாராக இருந்த கார் மூலம் மதுரை வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னையை வந்தடைந்தோம்’’ என ஆழிப்பேரலை ஏற்படுத்திய கோரத்தை விவரித்துள்ளனர்.

தனுஷ்கோடி அரிச்சல் முனை.
தனுஷ்கோடி அரிச்சல் முனை.
உ.பாண்டி

இந்நிலையில் நேற்று இரவு முதல் ராமேஸ்வரம் தீவில் பலத்த காற்று மற்றும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று இரவில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கொந்தளிப்பால் அங்கு புதிதாக அமைக்கப்பட்ட சாலை மற்றும் தடுப்பு சுவர்கள், போலீஸ் அவுட் போஸ்ட் கட்டடம் ஆகியவை சேதமடைந்துள்ளன. இதையடுத்து தனுஷ்கோடி பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவர் குடிசைகள்
கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவர் குடிசைகள்
உ.பாண்டி

ராமேஸ்வரம் கடற்கரை மாரியம்மன் கோயில் பகுதியில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. பாம்பன், மண்டபம் மற்றும் தொண்டி கடலோர பகுதிகளில் ஏராளமான படகுகள் கரை ஒதுங்கியுள்ளன. மேலும் ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் மின்கம்பங்கள், மரங்கள் ஆகியன முறிந்து விழுந்துள்ளன.

குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீர்
குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீர்
உ.பாண்டி

இதனிடையே புரெவி புயல் நாளை அதிகாலை பாம்பன் - தொண்டி இடையே கரையைக் கடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தின் வடகடலோரப் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.