Published:Updated:

குடியாத்தம்: வெள்ளத்தில் ஒருநாள் தத்தளித்த பெண்! - உயிரைப் பணயம்வைத்து மீட்ட பேரிடர் குழு

எல்லம்மாளுடன் பேரிடர் மீட்புக்குழு
எல்லம்மாளுடன் பேரிடர் மீட்புக்குழு

குடியாத்தம் அருகே கௌண்டன்ய ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் ஒருநாள் முழுவதும் சிக்கித்தவித்த பெண்ணை பேரிடர் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கௌண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்தோடுகிறது. ஆற்றங்கரையோரமுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலும் வெள்ளநீர் புகுந்திருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கு வசித்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தநிலையில், செதுக்கரை என்ற பகுதியில், கௌண்டன்ய ஆற்றின் நடுவில் குடிசை அமைத்து பன்றிகளை வளர்த்துவந்த எல்லம்மாள் என்ற 55 வயது பெண் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாகத் தீயணைப்புத் துறையினருக்கு நேற்று மதியம் 1 மணியளவில் தகவல் கிடைத்தது.

ஆற்றிலுள்ள குடிசை வீடு
ஆற்றிலுள்ள குடிசை வீடு

இதையடுத்து, குடியாத்தம் சப்-கலெக்டர் ஷேக்மன்சூர் தலைமையில் வருவாய்த்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் செதுக்கரைப் பகுதிக்கு விரைந்து சென்று எல்லம்மாளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த காரணத்தால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தின் உத்தரவின்பேரில், தேசியப் பேரிடர் மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. நேற்று இரவு 9 மணியளவில், பேரிடர் மீட்புப் படையினர் செதுக்கரைப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். இரவு நேரம் என்பதால், ட்ரோன் கேமரா மூலமாக எல்லம்மாளை விடிய விடியக் கண்காணித்து அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து, இன்று காலை 6 மணியளவில், பேரிடர் குழுவினர் மீட்புப் பணியில் களமிறங்கினர். சுமார் 7:30 மணியளவில் எல்லம்மாள் பத்திரமாக மீட்கப்பட்டார். முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் எல்லாம்மாளை நிவாரண முகாமில் அதிகாரிகள் தங்கவைத்திருக்கிறார்கள். ஒரு நாள் முழுவதும் ஆற்றில் தத்தளித்த பெண்ணை உயிருடன் மீட்ட சப்-கலெக்டர் ஷேக்மன்சூர் மற்றும் தீயணைப்புத்துறையினர், வருவாய்த்துறையினர், பேரிடர் மீட்புக்குழுவினரை மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரமும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள்.

முதலுதவி சிகிச்சை
முதலுதவி சிகிச்சை

மீட்புப் பணி குறித்து சப்-கலெக்டர் ஷேக்மன்சூர் கூறுகையில், ``கௌண்டன்ய ஆற்றின் நடுவிலுள்ள மேடான பகுதியில் குடிசை அமைத்து அந்தப் பெண் கணவருடன் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டுவந்திருக்கிறார். ஆற்றில் வெள்ளம் வருவதற்கு முன்பாகவே எல்லம்மாளின் கணவர் வெளியில் சென்றுவிட்டார். வெள்ளம் வந்ததுகூடத் தெரியாமல் அந்தப் பெண் குடிசையில் இருந்திருக்கிறார். குடிசைக்குள் தண்ணீர் புகுந்த பின்னரே வெளியில் வந்து பார்த்திருக்கிறார். அப்போது, தன்னைச் சுற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். தகவல் கிடைத்தவுடன் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டோம். ஆற்றிலுள்ள மேடான பகுதியில் அவர் இருந்ததால் உயிருடன் காப்பாற்றப்பட்டிருக்கிறார்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு