வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (26/09/2017)

கடைசி தொடர்பு:20:22 (26/09/2017)

மஹா புஷ்கரம்... குப்பை மேடான துலாக்கட்டம்... தூய்மைப்படுத்தி நெகிழவைத்த நாடோடி இன மக்கள்!

திருவிழாக்கள்... அவற்றை ஒட்டிய கோலாகலக் கொண்டாட்டங்கள் நமக்குத் தருபவை ஏராளம். மகிழ்ச்சி, நிறைவு, பரவச அனுபவம், நிம்மதி... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். சில பல ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிரமாண்டமான, சிறப்புப் பண்டிகைகள் என்றால், அவை அதிக கவனம் பெறும்; விழா நடக்கும் இடத்தில் மக்கள் வெள்ளம் அலைமோதும். விழா நிறைவு பெறும்போது பரவச அனுபவமும் மற்ற நல்ல அம்சங்களும் நமக்குக் கிடைத்திருந்தாலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிய இடத்தில் குப்பைகள் சேர்ந்து, சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிப்படைந்திருக்கும்.  மஹா புஷ்கரத் திருவிழாவில் நடந்ததும் அதுதான். மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் 12 நாள்கள் நடந்த மஹா புஷ்கரத் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து குவிந்தார்கள்; புனித நீராடினார்கள். நீராடியவர்கள் விட்டுச்சென்ற துணிகளும், பயன்படுத்திவிட்டு ஆங்காங்கே வீசியெறிந்த பொருள்களும் குவியலாகக் கிடந்தன. மொத்தத்தில்  குப்பைமேடாகக் காட்சியளித்தது துலாக்கட்டம். விழா முடிந்ததும், எங்கிருந்தோ கும்பலாக வந்த ஊசிமணி, பாசிமணி விற்கும் நாடோடிகள் முகம் சுளிக்காமல், ஈடுபாட்டோடு துலாக்கட்டத்தை தூய்மை செய்தார்கள். அந்த நிகழ்வு பார்க்கிறவர்களை நெகிழச்செய்தது.  

மஹா புஷ்கரம் நீராடுதல்

சரி... தூய்மைப் பணியில் தாமாகவே தங்களை ஈடுபடுத்திக்கொண்ட இந்த மக்கள் யார்? மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டையைச் சேர்ந்தவர்கள். அங்கே  நாடோடி இனத்தைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் வேட்டையாடும் தொழிலில் ஈடுபடுபவர்கள் ஒருசிலரே. மற்றவர்கள் வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருள்கள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள் ஆகியவற்றை விற்பனைசெய்து வாழ்க்கை நடத்திவருகிறார்கள்.   

மஹா புஷ்கரம் புனித நீராடல்

இவர்கள் செய்துவரும் தொழிலுக்குத் தேவையான மூலதனத்துக்காக கந்துவட்டிக்கு கடன் வாங்கி அல்லல்பட்டு வந்தார்கள். பிறகு, சிலர் உதவியால் வங்கிகளில் சிறுதொழிலுக்கான கடன் வாங்கினார்கள்.  கடன் தொகையை தவணை முறையில் தேதி  தவறாமல், வங்கியில் திருப்பிச் செலுத்தி, வங்கியின் பாராட்டைப் பெற்றிருக்கிறார்கள் இந்த மக்கள். அதோடு, தொடர்ந்து வங்கியுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

ஊசி, பாசி விற்பவர்கள்

இந்த நாடோடி இன மக்கள் புஷ்கரம் ஆரம்பித்த 12-ம் தேதி முதல் நகரெங்கும் தரையில் கடை விரித்து வியாபாரம் செய்தார்கள். அவர்களில் ஒருவரான கோவிந்தராஜ், ``ஒருநாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்க அலையா அலைவோம் சாமி. காவேரி அம்மாவுக்கு (காவிரி கோவிந்தராஜ்நதி) திருவிழா நடத்துனதால தினமும் எக்கச்சக்கக் கூட்டம். ராப்பகலா வியாபாரமும் நல்லா செல்லக்கண்ணுநடந்ததுங்க.  500, 1,000-னு தினப்படி லாபமும் கிடைச்சுது. எங்களுக்கும் எங்க வூட்டுல உள்ளவங்களுக்கும் ரொம்ப சந்தோஷமுங்க. எங்களை வாழவெச்ச காவேரி அம்மாவுக்கு நாங்க கைமாறு செய்ய வேண்டாங்களா? அதனால இன்னைக்கு எல்லோருமா சேர்ந்து துலாக்கட்டத்தை சுத்தம்பண்ணித் தர்றோம்னு சொன்னோம், அதன்படி செஞ்சி முடிச்சிட்டோங்க சாமி’’ என்றார்.  

செல்லக்கண்ணு என்ற பெண்மணி, ``காவிரி அம்மா எங்களுக்கு குறையில்லாம சோறு, தண்ணி தந்தாங்க. இங்கே குளிச்சவங்க துணி மணிகளை தண்ணியில விட்டுட்டுப் போயிடுறாங்க.  அதையெல்லாம் கரையேத்திட்டோம். காசு பணத்தைக்கூட தண்ணியில எறிஞ்சிட்டுப் போயிருக்காங்க, சல்லடையில சலிச்சி எடுத்தா, அதுலயும் காசு, பணம் கிடைக்குது சாமி. முன்னாடியெல்லாம் வருஷத்துக்கு ரெண்டு நாள் முழுக்கு விழா நடக்கும். எங்களுக்கும் அப்போ நல்லா பொழைப்பு நடக்கும். இந்த திருவிழாவால பசி, பஞ்சம் இல்லாம புள்ள குட்டிகளும் சந்தோஷமா இருந்திச்சிங்க. அதுக்கு உபகாரமாத்தான் குப்பைகளைக் கூட்டிப்பெருக்கி, சுத்தம் செஞ்சி கொடுக்குறோம் சாமி’’ என்றார்.  

இதற்கிடையில், சில கட்சிக்காரர்கள் துலாக்கட்டத்துக்கு வந்து, மோடியின் `தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் தூய்மைச் செய்வதுபோல் போட்டோவுக்கு போஸ்கொடுத்துச் சென்றதும் நடந்தது. 

கோடீஸ்வரர்கள் முதல் குடிசைவாசிகள் வரை யார் யாரோ, எங்கிருந்தெல்லாமோ வந்து காவிரியையும் அதன் கரைகளையும் குப்பைகளாக்கிச் சென்றிருக்கிறார்கள். இந்த நாடோடி இன மக்கள் காவிரித் தாய்க்கு நன்றி செலுத்தும்விதமாக துலாக்கட்டத்தை சுத்தம் செய்திருக்கிறார்கள். உண்மையில், மஹா புஷ்கர திருவிழாவுக்குச் சென்ற ஒவ்வொருவரும் மறக்காமல் நன்றி செலுத்தவேண்டியது இவர்களுக்குத்தான்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்