எடப்பாடிக்கு பிரியாணி... ஓ.பி.எஸ்-க்கு வெறும் பானி! - கல்யாண வீட்டுச் சர்ச்சை | Flexboards in edappadi palanisamy's function against court order

வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (27/10/2017)

கடைசி தொடர்பு:17:02 (27/10/2017)

எடப்பாடிக்கு பிரியாணி... ஓ.பி.எஸ்-க்கு வெறும் பானி! - கல்யாண வீட்டுச் சர்ச்சை

''சசிகலா குடும்பத்துக்கு எதிராகக் கிளம்பிய இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணிகளுக்கு இடையேயான முட்டல்மோதல் பட்டுக்கோட்டையில் பட்டவர்த்தனமாக வெடிக்க ஆரம்பித்துள்ளது'' என்கிறார்கள் அ.தி.மு.க-வினர். 

ஈபிஎஸ்... ஓபிஎஸ்...


பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ மகன் எஸ்.வி.திலீப் திருமணம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பாபநாசம் அருகேயுள்ள சுவாமிமலை கோயிலில் நடைபெற்றது. திருமணம் முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு எம்.எல்.ஏ-வின் சொந்த ஊரான பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆலத்தூரில் பிரமாண்டப் பந்தல் அமைத்து, 'அம்மா அரங்கம்' எனப் பெயர்வைத்து வரவேற்பு விழாவை நடத்தி முடித்துள்ளார் எம்.எல்.ஏ சி.வி.சேகர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29-ம் தேதி நேரில் வருவதாக டேட் கொடுத்ததால், அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டன. பின்னர், திருச்சியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறும் 26-ம் தேதி வந்து வாழ்த்திவிட்டு வருகிறேன் என்று சொன்னதும் அதன்பிறகு தடபுடலாக முதல்வர் வருகைக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டன.

10 நாள்களுக்கு முன்பே ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்களைக்கொண்டு நகரைச் சுத்தம் செய்துவந்தனர் நகராட்சி ஊழியர்கள். குண்டும் குழியுமாக இருந்த சாலைகளெல்லாம் தார் சாலைகளாகப் போடப்பட்டன. முதல்வரை வரவேற்றுப் பிரமாண்ட ஃப்ளெக்ஸ்கள் வைக்கப்பட்டன. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்-க்கு அடுத்தபடியாக வைத்திலிங்கம் எம்.பி படம் இடம்பெற்றிருந்தது. 'உயிரோடு இருப்பவர்களின் படத்தை ஃப்ளெக்ஸில் போடக்கூடாது' என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஃப்ளெக்ஸ்கள் அகற்றப்படவில்லை. முதல்வருக்காக வைக்கப்பட்டிருந்த ஃப்ளெக்ஸ்கள் அகற்றப்படாமல் இருப்பது குறித்து தி.மு.க-வினர் நீதிமன்றம் செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 ஓபிஎஸ்...

பிரியாணி சாப்பிட்ட எடப்பாடி!

முதல்வர் 11.30 மணிக்கு வருவார் என்று சொல்லப்பட்டது. முதலில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸுடன், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, ஆர்.காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர் என அனைவரும் மணமக்களை வாழ்த்திவிட்டுப் போனார்கள். மேடை ஏறிய ஓ.பி.எஸ்., மணமக்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். பின்னர், எம்.பி வைத்திலிங்கம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பெஞ்சமின், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டவர்களுடன் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து வாழ்த்துகளைப் பெற்றனர் மணமக்கள். எம்.பி வைத்திலிங்கம் வரவேற்றுப் பேச,  மூன்று நிமிடங்கள் மட்டுமே வாழ்த்திப் பேசினார் முதல்வர். பின்னர், ஏசி வசதியுடன் செய்யப்பட்ட தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட எடப்பாடியாருக்குச் சுடச்சுட பிரியாணி பரிமாறப்பட்டது. உணவுக்குப் பின் அங்கிருந்து கிளம்பினார் எடப்பாடி. 

முதல்வர் வருகை குறித்து பட்டுக்கோட்டை அ.தி.மு.க-வின் சீனியர் நிர்வாகிகளிடம் பேசினோம், ''பட்டுக்கோட்டை, டாக்டர் வெங்கடேஷ் மாமனார் ஊர். இங்கு தினகரனுக்கென்று ஆதரவாளர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்கள். பொதுவாகத் தஞ்சை மாவட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள்தான் அதிகம். வைத்திலிங்கம் இருக்கும் ஒரத்தநாடு தொகுதியிலும் தினகரன் ஆதரவாளர்கள்தான் அதிகம். யாருக்கு பலம் என்று காட்டுவதற்காகத்தான் இந்த வரவேற்பு விழாவை நடத்தியிருக்கிறார் வைத்திலிங்கம். ஆரம்பத்தில் சசிகலா குடும்பத்தால்தான் சி.வி.சேகருக்குச் சீட் கிடைத்தது. ஆனால், சி.வி.சேகர் வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளராக இருப்பதால், வைத்திலிங்கம் சொல்வதைக் கேட்கிறார். வைத்திலிங்கம் பட்டுக்கோட்டையில் பலத்தை நிரூபிக்கவே முதல்வரைத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்துவந்துள்ளார். இந்நிலையில், பட்டுக்கோட்டை அருகேயுள்ள சின்னமனை கிராமம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்கள், 'டெங்கு நோய் பரவி வருகிறது. அதைக் கட்டுப்படுத்தாமல் பட்டுக்கோட்டைக்கு வரக் கூடாது எனவும், வந்தால் கறுப்புக்கொடி காட்டுவோம்' என எதிர்ப்புத் தெரிவித்தனர். எம்.எல்.ஏ தரப்பில் அப்பகுதி மக்களைச் சந்தித்து, 'எதுவேண்டுமானாலும் செய்து தருகிறோம் கறுப்புக்கொடி காட்டுவதைத் தயவுசெய்து கைவிடுங்கள்' என்று கெஞ்சிக் கேட்டப் பிறகு கைவிட்டுள்ளனர்.

 வரவேற்பு

ஒதுக்கப்பட்ட ஓ.பி.எஸ்!

ஓ.பி.எஸ்ஸுக்கும் வைத்திலிங்கத்துக்கும் ஏழாம் பொருத்தமாகத்தான் இருந்துவருகிறது. அதோடு ஓ.பி.எஸ்ஸுடன் செல்வதை வைத்திலிங்கம் விரும்பமாட்டார். சசிகலாவைப் பொதுக்குழு கூடி நீக்குவோம் என வைத்திலிங்கத்தைப் பேசவைத்தது ஓ.பி.எஸ்தான். அதனால்தான் எடப்பாடியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென வைத்திலிங்கம் நினைக்கிறார். தினகரன் அணிக்கும் ஓ.பி.எஸ் அணிக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகத்தான் எடப்பாடியை வைத்திலிங்கம் அழைத்து வந்திருக்கிறார். வந்த அமைச்சர்கள் எல்லோரையும் ஓடியோடி அழைத்து உபசரித்தார்கள். ஓ.பி.எஸ் வந்ததை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஓ.பி.எஸ் வந்தார்... சென்றார், அவ்வளவுதான். எடப்பாடி வாழ்த்திப் பேசும்போது, 'அண்ணன் வைத்திலிங்கம்' என்று பணிவோடு பேசியதைக் கவனித்தாலே தெரியும்'' என்றார்கள்.   

வைத்திலிங்கம் ஆதரவாளர்களிடம் பேசினோம், ''ஆட்சியும் கட்சியும் எடப்பாடி கையில்தான் இருக்கும். இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும். தஞ்சை மாவட்டத்தில் எடப்பாடிக்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக மட்டுமல்ல, இங்கு வைத்திலிங்கத்துக்கு ஒரு மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது என்பதை முதல்வரிடம் காட்ட வேண்டும் என்பதைக் காட்டத்தான்'' என்றார்கள். 

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களோ, ''யாரை வேண்டுமானாலும் எங்கள் அணியில் சேர்த்துக்கொள்வோம். வைத்திலிங்கத்துக்கு ஒருபோதும் எங்கள் அணியில் இடமில்லை. பொறுத்திருந்து பாருங்கள். இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறது'' என்றார்கள். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்