”உயர்திரு துரைக்கண்ணு... நீங்களெல்லாம் விவசாய அமைச்சரா...?!”- கொதிக்கும் டெல்டா விவசாயிகள் | Delta farmers agitation against minister duraikannu

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (08/11/2017)

கடைசி தொடர்பு:20:30 (08/11/2017)

”உயர்திரு துரைக்கண்ணு... நீங்களெல்லாம் விவசாய அமைச்சரா...?!”- கொதிக்கும் டெல்டா விவசாயிகள்

"கடந்த ஆண்டு காய்ஞ்சு கெடுத்துச்சு... இந்த ஆண்டு பேஞ்சு கெடுக்குது" என விவசாயிகள் வேதனை பட்டுக்கொண்டிருக்க, தமிழக வேளாண்துறை அமைச்சரோ டெல்டாவில் பயிர் மழைநீரில் மூழ்கவில்லை, சேதமடையவில்லை எனத் தெரிவித்துள்ளார். இது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

 விவசாய அமைச்சரா


திருவாரூர் மாவட்டத் தமிழக காவிரி விவசாயிகள் சங்க இணைச் செயலாளர் வரதராஜன் கூறுகையில், அமைச்சர் துரைக்கண்ணு எங்கள் திருவாரூர் மாவட்டத்தைப் பார்வையிடவில்லை, அவர் அவருடைய சொந்த ஊரான பாபநாசத்தில் உட்காந்துகொண்டு பயிர்கள் சேதமடையவில்லை, நாசமடையவில்லை என்று சொன்னால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா. 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இது அவருக்குத் தெரியுமா. ஒரு மாநிலத்தின் விவசாயத்துறை அமைச்சர் பேசுவது நியாயமல்ல. மேலும், மராமத்துப் பணிகளால் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் தூர்வரப்பட்டுள்ளன என்று மிகப்பெரிய பொய்யைச் சொல்லுகிறார். மராமத்துப் பணிகள் விவசாயிகள் குழு அமைத்து தூர்வாரப்பட்டதா என்று முதலில் அமைச்சர் ஆய்வு செய்து பிறகு பேசவேண்டும். மராமத்துப் பணிகளுக்காக 6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 82 பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியானது. எங்கள் பகுதியில் 30 வருடத்திற்கு முன்பு தூர்வாரப்பட்ட ஏரி,குளங்ள்தான், வாய்க்கால்கள்தான் இன்றும் இருக்கின்றன. எந்தெந்தப் பகுதியில் 82 பணிகள் நடைபெற்றன; அதற்காக எவ்வளவு ரூபாய் செலவு செய்தீர்கள் என்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து தகவலைக் கேட்டுப் போராடியும் இதுவரை எந்தத் தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. மராமத்துப் பணிகள் குறித்த விவரம் பற்றி கலெக்டரிடம் கேட்டதற்கு நீங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுக்கொள்ளுங்கள் என்று பொறுப்பில்லாமல் பதிலளித்தார். 

டெல்டா விவசாயிகள்


எங்கள் மாவட்டத்தில் மழைநீரில் பயிர்கள் மூழ்கி மிகப்பெரியளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல அமைச்சர் மறைத்துப் பேசுகிறார். மராமத்துப் பணிகளில் மிகப்பெரியளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. அதை மறைக்கத்தான் இப்படியெல்லாம் அமைச்சர் பேசிவருகிறார். மாநிலம் முழுவதும் 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த ஊரிலும் மராமத்துப் பணிகளை விவசாயிகள் குழுக்கொண்டு செயல்படவில்லை என்பதுதான் உண்மை. பயிர்கள் நீரில்மூழ்கி விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை விவசாயத்துறை பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும், இல்லையென்றால் அதிகாரிகளிடம் கேட்டாவது தெரிந்துகொள்ள வேண்டும்” என்று வெடித்து முடித்தார்.

வரதராஜன்காவிரிப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமலநாதனிடம் பேசினோம், தமிழகத்தின் வேளாண்துறை அமைச்சர் பேசுவதைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. பயிர்கள் பாதிப்படைந்துள்ளன என டெல்டாவைச் சேர்ந்த உணவுத்துறை அமைச்சரும், ஜவுளித்துறை அமைச்சரும் சொல்லுகிறார்கள். விவசாயத்துறை அமைச்சருக்கு மட்டும் எப்படிப் பயிர்கள் பாதிப்படைந்தது என்று தெரியாமல் பேசுகிறார். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டுதான் நேரடி நெல்விதைப்புக்காக அதிக நிதி ஒதுக்கியது தமிழக அரசு. நேரடி நெல் விதைப்பு செய்தவர்கள் தலையில் துண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பயிர்கள் பாதிப்படைந்துள்ளது எனச் சொன்னது பொய்யானத் தகவலா. அதிமுக அமைச்சர்களே முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொல்கிறார்கள். அமைச்சர் துரைக்கண்ணுவின் தொகுதிக்கு உட்பட்ட புங்கன் வாய்க்கால் 4700 ஏக்கர் பாசனத்திற்குப் பயன்படக்கூடியது. மராமத்துப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு கல்லணை திறந்தபிறகு தூர்வாரப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஜூன் 12ம் தேதி திறக்க வேண்டிய தண்ணீர் அக்டோபர் 2ம் தேதி திறக்கப்பட்டது. பெரும்பான்மையான பகுதியில் தண்ணீர் திறந்தபிறகுதான் மராமத்துப் பணிகளை மேற்கொண்டார்கள் என்பதுதான் உண்மை. எந்தெந்த ஊர்களில் மராமத்துப் பணிகள் நடைபெற்றுள்ளன என்பது பற்றி வெள்ளை அறிக்கை தரமுடியுமா. தூர்வாரப்படாததால் பாபநாசம் தொகுதிக்குட்பட்ட பொன்பேத்தி, எருமைப்பட்டி, ஓலைப்பாடி, ஆதனூர் ஆகிய ஊர்களுக்கு இன்னும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட போய்ச்சேரவில்லை. அமைசசர் துரைக்கண்ணு நிதானமாகப் பேச வேண்டும். வெற்று அறிக்கை விடவேண்டாம், வெள்ளை அறிக்கை விடுங்கள்” என்று பொங்கித் தீர்த்தார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்