“அலைகள் ஓய்ந்தாலும் வடுக்கள் ஆறாது...!” - நாகையில் அனுசரிக்கப்பட்ட சுனாமி நினைவு தினம்

2004 ஆம் ஆண்டு இதே டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி எனும் ஆழிப்பேரலை இந்தோனேசியா, இலங்கை, இந்தியா போன்ற கடலோர நாடுகளில் ஆடிய கோரத் தாண்டவத்தை மக்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. கடலுக்கடியில் 9.1 அதிர்வெண்கொண்ட பூகம்பம் ஏற்பட்டு 100 அடி உயரத்தில் அலைகள் எழும்பி கரைகளைத் தாக்கின. இதன் சீற்றத்தால் பல நாடுகளைச் சேர்ந்த 2,30,000 மக்கள் செத்து மடிந்தனர். இதில் பாதிப்பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

சுனாமி நினைவுதினம்

தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டங்கள் பெரிய அழிவைச் சந்தித்தன. சுனாமியால் வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்த மக்கள் தற்காலிகக் குடியிருப்புகளில் தங்கவைக்கப்பட்டனர். அங்கே அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டன. பின்னர் மத்திய - மாநில அரசுகளும், தொண்டு நிறுவனங்களும் குடியிருப்புகள் கட்டித் தந்தன.  

ஆனாலும், பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் சுனாமி நீங்கா வடுவாகப் பதிந்துவிட்டது. சுனாமி நினைவு நாளான இன்று, கடலில் பால் ஊற்றியும், மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் கண்ணீர் அஞ்சலி செலுத்துப்பட்டன.

 

சுனாமி நினைவுதினம்

சுமார் 6 ஆயிரத்து 60 பேரை பறிகொடுத்த நாகை மாவட்டத்தில், கோடியக்கரை முதல் கொடியம்பாளையம் வரை கடற்கரை கிராமங்களில் சுனாமி நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இன்று காலை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன், கலெக்டர் சுரேஷ்குமார், எஸ்.பி. தேஷ்முக் சேகர் சஞ்சய் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் அஞ்சலி செலுத்தினர். இதில், அன்னை சத்யா குழந்தைகள் காப்பக மாணவ - மாணவிகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

9.00 மணியளவில் நாகை நம்பியார் நகர் மீனவக் கிராமம் சார்பில் ஏழை பிள்ளையார் கோயிலிலிருந்து நம்பியார் நகர் சமுதாயக் கூடம் வரை 'சுனாமி நினைவு தின மவுன ஊர்வலம்' நடைபெற்றது. பின்னர் சமுதாயக் கூடத்தில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு மீனவக் கிராமப் பஞ்சாயத்தாரும், பொதுமக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதுபோல் அக்கரைப்பேட்டை டாடா நகரிலிருந்து சுனாமி ஸ்தூபி வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. அதன்பின் ஏராளமான பெண்கள், இறந்த உறவுகளை நினைத்து ஒப்பாரி வைத்து அழுதனர். 

 

சுனாமி நினைவுதினம்

நாகையில் அதிகளவு உயிர்ப்பலியான வேளாங்கண்ணியில், ஆரோக்கிய மாதா பேராலய முகப்பிலிருந்து, பேராலய அதிபர் பிரபாகரன் அடிகளார் தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் வர்த்தகர் சங்கம், வியாபாரிகள் சங்கம், லயன்ஸ் சங்கம் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சுனாமி ஸ்தூபியை வந்தடைந்தனர். பின்னர் பேராலய அதிபர், மலர் வளையம் வைத்து சுனாமியில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தார். பொதுமக்கள் மலர் தூவியும், மெழுகுவத்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். 

சுனாமி நினைவுதினம்

வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறையில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் கடற்கரைக்கு ஊர்வலமாகச் சென்றார்கள். அமைச்சர் ஓ.எஸ்.மணியன், இறந்தோர் நினைவாகக் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். காரைக்காலில் எம்.எல்.ஏ-க்கள் அசனா, திருமுருகன், சந்திரபிரியங்கா ஆகியோர் ஆங்காங்கே கடற்கரையில் தனித்தனியாக சுனாமி நினைவுதின அஞ்சலி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள்.  

இறுதியாக தரங்கம்பாடியில் பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. பவுன்ராஜ் மற்றும் தி.மு.க. நாகை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன் கலந்துகொண்ட சுனாமி நினைவுதின நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

ஆண்டுகள் மாறலாம்... ஆனால், ஆழிப்பேரலையால் ஏற்பட்ட ரணத்தின் வடு கடலோர மக்களின் மனதில் ஆறாது போலிருக்கிறது! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!