வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (24/06/2018)

கடைசி தொடர்பு:21:00 (24/06/2018)

`என் மாணவர்களின் எதிர்கால லட்சியங்கள் இதுதான்!’ - நெகிழவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்

பேராவூரணி அருகே அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் எதிர்காலத்தில் என்னவாக ஆக போகுறீர்கள் என அக்கறையோடு கேட்க அவர்கள் டாகடர்,கலெக்டர் ஆவேன் என கூறினால் அந்த கெட்டப்பில் போட்டொ எடுத்து வகுப்பறையில் மாட்டி வைத்து அவர்களின் எண்ணத்திற்கு உயிர் கொடுக்கிறார்.இதை மாணவர்கள் மட்டும் இல்லாமல் அப்பகுதி மக்களும் பாராட்டி செல்கிறார்கள்.

அரசு பள்ளி ஒன்றில் வகுப்பறை சுவரில் டாக்டர், போலீஸ்,ராணுவ வீரர், இன்ஜினியர், கலெக்டர் போன்ற உடையணிந்த கெட்டப்புகளில் வரிசையாக மாணவர்களின் போட்டோக்கள் மாட்டி வைக்கபட்டிருக்கின்றன. எதிர்காலத்தில்  என்னவாக ஆசைபடுகிறீர்கள் என மாணவர்களிடம் கேட்டு  அந்த உடையில் அவர்களை போட்டோ எடுத்து மாணவர்களின் கனவிற்கு உயிர் கொடுக்கும் விதமாக போட்டோவை மாட்டி வைத்திருக்கிறார்கள். `எதிர்காலத்தில் என்னவாக நினைக்கிறார்களோ அது போல் ஆவதற்கான எண்ணத்தை தூண்டுவதற்காகவே இப்படி செய்வதாகக்’ கூறி அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ராமநாதன் என்பவர்.

ஆசிரியர்

பேராவூரணி அருகே  உள்ள பெரிய தெற்குக்காடு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் ராமநாதன். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கொண்ட இந்த பள்ளியில் மொத்தம் 76 மாணவர்கள் படிக்கிறார்கள். இங்கு ஆசிரியராகக் கடந்த 2006ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார் ராமநாதன். தொடர்ந்து 12 ஆண்டுகளாக அதே பள்ளியில்  பணியாற்றி வரும் இவர், மாணவர்கள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதோடு, பாடங்களை வாசிப்பது, கரும்பலகையில் படம் வரைந்து எழுதிக் காட்டுவது என எப்போதும் போல் இல்லாமல், கற்றல், கற்பித்தலில் அதற்கான உபகரணங்களை கொண்டு நேரடியாக செயல் விளக்கம் அளிக்கிறார். இதனால் மாணவர்கள் அனைத்தையும்  எளிதில் புரிந்து கொண்டு உள் வாங்கி கொள்கின்றனர். பாடத்தை வெறும்  மனப்பாடமாக இல்லாமல், அறிவுப்பூர்வமான முறையில் எளிதாக கற்றுக் கொள்கின்றனர். 

மேலும், பள்ளியைச் சுற்றி உள்ள இடங்களில் இருக்கும் மரம், மூலிகை செடிகளை மாணவர்களை அழைத்து சென்று நேரில்  காட்டி அவை குறித்து விளக்கமாகக் கூறுகிறார். அறிவியல் குறித்த பாடம் நடத்தும்போது, உடல் உறுப்புகள் குறித்து விளக்கம் அளிப்பதற்கு ஆட்டின் மூளை, இதயம், கிட்னி போன்ற பொருட்களை வாங்கி வந்து மாணவர்களுக்கு காண்பித்து அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கமாக சொல்லித் தருகிறார். மேலும், ஆண்ட்ராய்டு செல்போன் அப்ளிகேஷன் மூலம் 3 டி, 4 டி அனிமேஷன் காட்சியாக  காட்டு விலங்குகள், பறவைகள், ஊர்வனவற்றையும், விண்வெளிகள், கோள்கள், விமானம், ராக்கெட், பழங்கால டைனோசர்கள் குறித்தும்  காட்சியாக காண்பித்து எளிதாக பாடம் நடத்துகிறார். மாணவர்கள் கல்வி பாடங்களை விளையாட்டாகவே கற்கின்றனர். பிளாஸ்டிக் பை ஒழிப்பு, கருவேல மரம் அகற்றுதல் போன்றவற்றிற்காக பேரணி, போட்டிகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தி மாணவர்களுக்கு விழிப்புஉணர்வவை ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் தினம், உலக குடிநீர் தினம், கை கழுவுதல் தினம்  என அனைத்து தினங்களையும் பள்ளியில் மாணவர்களிடையே ஒரு விழாவாகவே கொண்டாடி வருகிறார். 

ஆசிரியர்

ராமநாதனின் இந்த அணுகுமுறையால் " எங்கள் பள்ளியில் ஆசிரியர்- மாணவர் பயம் கிடையாது.பிரிவும் கிடையாது. எங்களை போன்ற ஏழை மாணவர்கள் அதுவும் கிராமப்புறத்தில் படிப்பவர்கள்  எளிதாக புரிந்து கொள்ள கூட வகையில் எங்க ஆசிரியர் ராமநாதன் பாடம் நடத்துகிறார். நாங்கள் படித்து என்னவாக ஆசைப்படுகிறோம் எனக்கேட்டு, டாக்டராக விரும்பும் மாணவனை டாக்டர் உடையிலும், வழக்கறிஞராக விரும்பும்  மாணவனை வழக்கறிஞர் உடையிலும் போட்டோ எடுத்து பள்ளி வகுப்பறையில் மாட்டி வைத்திருக்கிறார். என்ன படித்தால் எந்த மாதிரியான வேலைக்குச் செல்லலாம் என்பது பற்றி விளக்கமாக சொல்லித் தருவார். எங்கள் மனதில் உள்ள ஆசைகளை வெளிக்கொண்டு வருவதோடு, அதை விதையாகவும் விதைக்கிறார். எங்களை டாக்டராக, கலெக்டராக போட்டோ எடுத்து மாட்டி வைத்திருப்பதை  தினமும் பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடைவதோடு எதிர்காலத்தில் நிஜமாகவே  நாங்கள் அதுபோல் ஆக வேண்டும் என்ற எண்ணமும் வருகிறது. நிச்சயமாக நாங்கள் ஒவ்வொருவரும் இந்த போட்டோவில் இருப்பதைப் போல்  உருவாகுவோம். இதுதான் எங்களை ஊக்கபடுத்தும் சாருக்கு நாங்க செய்கிற மரியாதை’’ என சொல்கிறார்கள் அந்த பள்ளியின் மாணவர்கள்.

ஆசிரியர்

இதுகுறித்து ஆசிரியர் செ.ராமநாதனிடம் கேட்டபோது, ``நான் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவன். நான் படிக்கும் காலத்தில் மிகவும் வறுமையான சூழலுடன் இருந்தது என் குடும்பம். அப்பா கூலி வேலை பார்த்து படிக்க வைத்தார். கஷ்டம் என்பதால் படிப்பு சம்பந்தபட்ட விஷயத்திற்குக் கூட நான் கேட்பது எதுவும் கிடைக்காது. நீ என்னவாக போகிறாய் என அப்போது யாரும் மாணவர்களைக் கேட்டு ஊக்கப்படுத்த மாட்டார்கள். ஆனால், நான் ஆசிரியராகதான் ஆக வேண்டும் என மனதிற்குள் நினைத்து கொண்டு படித்தேன். அதேபோல் ஆசிரியராகவும் ஆனேன். கிராமப்புற மாணவர்கள்  நன்றாக படித்து பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும். மாணவர்கள் மனதில் இருக்கும் ஆசையைத் தூண்டி, அதற்கு வடிவம் கொடுத்தால் எதிர்காலத்தில் நிச்சயமாக அவர்கள் ஜெயிப்பார்கள். அதற்காகத்தான் இந்த முயற்சி’’ என்றார். 

ஆசிரியர்

ஆசிரியர் மாணவர் என்ற பாகுபாடு இல்லாமல் நட்புறவோடு குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றி கொண்டு பாடங்களை எளிதாக சொல்லி தருவதோடு, மாணவர்களின் எதிர்கால லட்சியத்தை தூண்டும் வகையில் செயல்படும் ராமநாதனை மாணவர்கள் மட்டுமல்லாது, அப்பகுதி மக்களும் மனதாரப் பாராட்டுகிறார்கள்.                  

நீங்க எப்படி பீல் பண்றீங்க