சவுடு மண்ணால் கட்டப்படும் அரசு கட்டடங்கள்; ஆய்வில் அதிர்ச்சி!

அரசு சார்பில் கட்டப்படும் பாலங்கள், துறை சார்ந்த கட்டடங்கள், வீடுகள் போன்ற கட்டுமானப் பணிகளில் சவுடு மண்ணைப் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்திருக்கிறது. இதை ஆய்வுசெய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுகர்வோர் குழு கோரிக்கை விடுத்துள்ளது.  

நாகை மாவட்டம் சீர்காழியைச் சுற்றியுள்ள பகுதிகளில், அரசு சார்பில் கட்டப்படும் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், கடந்த 3 மாத காலமாக கொள்ளிடம் ஆற்றில் இயங்கிவந்த அரசுக்குச் சொந்தமான மணல் குவாரியை மூடிவிட்டார்கள். இதனால், மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.  அதிக விலை என்றாலும், மணல் கொள்ளையர்களிடமிருந்து திருட்டு மணலை வாங்கி தனியார் கட்டுமானம்செய்கிறார்கள்.  ஆனால், அரசின் சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் கட்டுமானப் பணிகளுக்குத் தனியார் குவாரியிடமிருந்து குறைந்த விலையில் சவுடு மண்ணை வாங்கிப் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்திருக்கிறது.  

பாலம்

இதுபற்றி நுகர்வோர் பாதுகாப்பு விழிப்பு உணர்வு அமைப்பின் நாகை மாவட்டச் செயலாளர் செந்தில்குமாரிடம் பேசியபோது, ``சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட பாலங்கள், துறை சார்ந்த கட்டடங்கள், வீடுகள் போன்ற கட்டுமானப் பணிகளைக் குழுவாகச் சென்று பார்வையிட்டோம்.  மணலுக்குப் பதிலாக சவுடு மண்ணைப் பயன்படுத்துவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம்.  இப்படி கட்டப்படும் கட்டுமானம், கட்டி முடிந்த ஓராண்டு காலத்துக்குள் இடிந்துவிடும் அபாயம் உள்ளது.  எனவே, மக்கள் வரிப் பணம் பாழாகாமல் இருக்க அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!