மரத்தடியில் இயங்கும் நடுநிலைப் பள்ளி... அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொகுதியில் அவலம்

127 ஆண்டுகள் கடந்த பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்டு பல மாதங்களாகியும், இன்று வரை இடிபாடுகள் அகற்றப்படவில்லை.  புதிய கட்டடத்துக்கானப் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. எனவே, மாணவ- மாணவிகள் பள்ளி வளாகத்திலுள்ள மரத்தடியில் பாடம் பயிலும் அவலம் நடந்துகொண்டிருக்கிறது.  

பள்ளி

நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சியில் 3-ம் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்திருக்கிறது.  இந்தப் பழைமையான பள்ளியில் 72 மாணவர்களும், 93 மாணவிகளும் என மொத்தம் 165 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 8 ஆசிரியர்களும், 3 பகுதி நேர ஆசிரியர்களும் என 11 பேர் பணி புரிந்துவருகின்றனர். இங்கு 8 வகுப்பறைகள் இயங்கி வந்த பழைமையானக் கட்டடம் பழுதானதால், 10 மாதங்களுக்கு முன் அக்கட்டடம் இடிக்கப்பட்டது.  இந்தக் கட்டடத்தின் இடிபாடுகள் இன்றுவரை அகற்றப்படவில்லை. எனவே, இதனுள் விஷ ஜந்துக்கள் புகுந்து மாணவ மாணவிகளின் உயிரைப் பறித்துவிடும் அபாயமும் இருக்கிறது.  

இதுபற்றி அப்பகுதி பெற்றோர்களிடம் பேசியபோது, ``அரசுப் பள்ளியில் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துகின்றனர். நாள் முழுவதும் மரத்தடி நிழலிலும், வெயிலிலும் எங்கள் பிள்ளைகள் அமர்ந்து படிப்பதைக் காணும்போது மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு. கல்வித்துறைக்கு அரசு கோடிக்கணக்கில் செலவு செய்து, பல பள்ளிகளுக்குக் கட்டடங்கள் கட்டிக் கொடுக்கிறது. ஆனால், அங்கெல்லாம் அதிகமாக வந்து சேர்ந்து படிக்கக் குழந்தைகள் இல்லை. இங்கோ, நாங்கள் அரசுப் பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பி வைக்கிறோம். அவர்களோ மரத்தடியில் படிக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் இத்தொகுதி தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் சொந்தத் தொகுதியாகும். இதைக்கூட அமைச்சரால் சரி செய்ய முடியாதா?’’ என்று ஆதங்கத்துடன் முடித்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!