வீடுகளை சூழ்ந்த வெள்ளம் - தயார் நிலையில் மீட்புக்குழு | Flood Alert in Kollidam River Bank

வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (15/08/2018)

கடைசி தொடர்பு:04:30 (15/08/2018)

வீடுகளை சூழ்ந்த வெள்ளம் - தயார் நிலையில் மீட்புக்குழு

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டிருப்பதால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக தாழ்வானப் பகுதிகளிலிருந்து மேடானப் பகுதிகளுக்குச் செல்ல ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Kollidam RIver

தற்போது கர்நாடக அணைகளிலிருந்து வினாடிக்கு 1.65 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுவதால் மேட்டூர் அணையிலிருந்தும் அதிகளவு நீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது.  காவிரி ஆற்றின் கொள்ளவைத் தாண்டி தண்ணீர் வருவதால் வேறு வழியின்றி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர்த் திருப்பி விடப்படுகிறது.  இதனால், கொள்ளிடம் ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம்போல் தண்ணீர் ஓடுகிறது.  

இதன் காரணமாக சீர்காழி வட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகேயுள்ள ஆற்றங்கரைத் தெருவில் 32 வீடுகளையும், நாதல்படுகை கிராமத்தில் 18 வீடுகளையும் தண்ணீர்ச் சூழ்ந்துள்ளது.  இதுபோல் குத்தவக்கரை என்னுமிடத்தில் ஷட்டர் மதகுகளில் தண்ணீர் வழிந்து போலீஸ் காலனி பின்புறம் புகுந்ததால் 25க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தண்ணீரில் மிதக்கின்றன.  

Kollidam River

இதுபற்றி நாகை கலெக்டர் சுரேஷ்குமார் கூறுகையில், ”மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவிரி மற்றும் வெண்ணாறு கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.  இதனால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக தாழ்வானப் பகுதிகளிலிருந்து மேடானப் பகுதிகளுக்குச் செல்ல ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.  கொள்ளிடம் ஆற்றின் நீரின் அளவை 24 மணிநேரமும் கண்காணிக்க செயற்பொறியாளர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.  வருவாய்த்துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அடங்கிய குழு நிலைமையை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், ரோந்துப் பணிச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பொதுப்பணித்துறை அலுவலகங்களில் வி.ஹெச்.எப். வசதியுடன் தகவல் கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க தொடங்கப்பட்டுள்ளது.  வெள்ளநீர் அதிகமாக கொள்ளிடம் ஆற்றில் வந்து உடைப்புகள் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்ய சுமார் 17 ஆயிரம் மணல் மூட்டைகள், 63 ஆயிரம் பாலிதீன் பைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.  மேலும், 65 யூனிட் மணல், 2500 சவுக்கு கட்டைகள் 2800 சவுக்குக் குச்சிகள் தயார் நிலையில் உள்ளன.  வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் மக்களைப் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு தங்குமிடங்களும், அவர்களுக்குத் தேவையான பொருள்களும் தயார் நிலையில் உள்ளன" என்று தெரிவித்தார்.