ஆற்றுப்படுகையில் வசிக்கும் அனைவருக்கும் கான்கிரீட் வீடு - அமைச்சர் ஓ.எஸ். மணியன்

House

ஆற்றுப் படுகையில் குடியிருப்பவர்களுக்கு, வேறிடத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் என்றும், அதன்படி அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.  

அமைச்சர் ஓ.எஸ். மணியன்

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றுப்படுகையிலுள்ள முதலைமேடுதிட்டு, நாதல்படுகை, சந்தப்படுகை, வெள்ளமணல், மேலவாடி, பாலூரான்படுகை, கொன்னக்காட்டுப்படுகை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 790 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் விழா இன்று கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்த இவ்விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ஓ.எஸ். மணியன், பயனாளிகளுக்கு ரூ.5,000 ரொக்கம் மற்றும் 10 கிலோ அரிசி வழங்கினார்.  

அப்போது, அந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், விவசாய சங்கத் தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் அமைச்சர் ஓ.எஸ். மணியனை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்து, தங்கள் பகுதி கோரிக்கையை முறையிட்டனர். ``வெள்ளப் பாதிப்பால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்துள்ளது. சாலைகள், வீடுகள் சேதமடைந்துவிட்டன. பயிர்கள் முழுவதும் அழிந்ததோடு, வயல்களில் இருந்த ஆயில் இன்ஜின்கள் நீருக்குள் மூழ்கிப் பழுதடைந்துவிட்டன. ஆயில் இன்ஜின்களை இலவசமாகப் பழுதுநீக்கித் தருவதோடு, குடும்ப அட்டைகளின் அடிப்படையில் அனைவருக்கும் இழப்பீடும், பயிர்களுக்கு நிவாரணமும் வழங்க வேண்டும். பழுதான பள்ளிக் கட்டடங்களைச் சீரமைக்க வேண்டும். இப்பகுதிகளில் புயல், வெள்ளப் பாதுகாப்பு மையம் கட்டித்தர வேண்டும். வெள்ளநீர் வடிந்தபோதிலும், நோய்த்தொற்று ஏற்படாத வகையில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்'' என்றனர். 

அதன்பின் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசுகையில், ``இப்பகுதி மக்களின் கோரிக்கை அனைத்தையும் கவனத்தில்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, முதலமைச்சர் அறிவித்தபடி சிறிய நிவாரணத்தை வழங்கியுள்ளோம். ஆற்றுப்படுகையில் வசிக்கும் மக்களின் வேதனையைப் புரிந்துகொண்ட முதலமைச்சர், 'அனைவருக்கும் வேறிடத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்' என்று அறிவித்துள்ளார். அதன்படி, அனைவருக்கும் வீடுகள் கட்டித்தர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!