வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (03/09/2018)

கடைசி தொடர்பு:10:10 (03/09/2018)

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரூ1.5 கோடியில் உயிர்க் காக்கும் கருவி

CT Scan

மயிலாடுதுறை அரசு பெரியார் பொது மருத்துவமனையில் டயாலிசிஸ் கருவி, காசநோய் கண்டறியும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.  அந்த வரிசையில் தற்போது புதிதாக சி.டி.ஸ்கேன் கருவி நிறுவப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.  

மயிலாடுதுறை

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1880-ல் வெஸ்டர் ஹாஸ்பிட்டல் தொடங்கப்பட்டது.  அதுவே பின்பு 1928-ல் நகராட்சி மருத்துவமனையாகி, 1990 முதல் அரசு பெரியார் பொது மருத்துவமனை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. 346 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனைக்கு மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து தினமும் சுமார் 2,000 வெளிநேயாளிகளும், 320 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 3,700 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. இந்த மருத்துவமனை தமிழக அளவில் சிறந்த மருத்துவமனைகளுள் 5வது இடத்தைப் பெற்றிருக்கிறது.  

இத்தகைய சிறப்புமிக்க பெரியார் மருத்துவமனையில் சுமார் ரூ.1.5 கோடி செலவில் சி.டி. ஸ்கேன் வசதியை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தார். இந்தச் சேவையைக் கொண்டுவர பெரு முயற்சியெடுத்த தலைமை மருத்துவர் ராஜசேகரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.  

அதன்பின் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் பேசுகையில், ``சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ டயாலிசிஸ் கருவி, காசநோயால் பாதிக்கப்பட்டோருக்கு நவீன காசநோய் கண்டறியும் கருவி அமைக்கப்பட்டு ஏராளமான நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனை சிறந்த சேவை செய்து வருகிறது. மேலும், ரூ.20 கோடி செலவில் 5 மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அது பயன்பாட்டுக்கு வரும்போது நோயாளிகளுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும். இப்பகுதியில் விபத்தில் சிக்கித் தலையில் காயமடைந்து வருவோருக்கு உடனடி சிகிச்சையளிக்க சி.டி. ஸ்கேன் வசதி இல்லாமல் தஞ்சாவூர் அல்லது திருவாரூர் அனுப்ப வேண்டிய நிலை இருந்தது. தற்போது சி.டி. ஸ்கேன் வசதி இங்கு செய்யப்பட்டுள்ளதால், தினமும் சராசரியாக காயமடைந்து வரும் 12 பேரில் 5 உயிர்களைக் காப்பாற்றும் சூழல் உருவாகி உள்ளது” என்றார்.  

இறுதியில் பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன், ``மருத்துவத்தில் தமிழ்நாடு தலைசிறந்த மாநிலமாக விளங்குகிறது. தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு மருத்துவமனைகள் போட்டிப் போட்டு செயல்பட்டு வருகின்றன.  மாவட்டத் தலைமை மருத்துவமனையில் மட்டும்தான் சி.டி. ஸ்கேன் வசதி உள்ளது.  இப்பகுதியில் உள்ளோர் அங்கு செல்ல வேண்டுமென்றால் இடையில் காரைக்கால் மாவட்டத்தைக் கடந்து செல்லவேண்டியுள்ளது. அதனால்தான் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சி.டி. ஸ்கேன் வசதி ஏற்படுத்தி தந்துள்ளோம்.  உள்ளபடியே இது அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.  அதுபோல் இங்கு ரத்த வங்கி உள்ளது. அதற்கு, தானங்களில் சிறந்த தானமான ரத்த தானம் செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.