வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (03/09/2018)

கடைசி தொடர்பு:20:30 (03/09/2018)

ஆட்சியர் அலுவலகத்தில் பேட்மின்டன் விளையாடிய விவசாயிகள் -முதல்வருக்கு எதிராகப் போராட்டம்!

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகின்றன. ஆனால், கடைமடைப் பகுதிக்கு  இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை. ஆனால், தமிழக முதல்வர் பேட்மின்டன் விளையாடுகிறார். இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பேட்மின்டன் விளையாடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூதனப் போராட்டம் நடத்திய விவசாயிகள்

டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது காவிரி ஆறு. காவிரி நீரை நம்பியே இந்தப் பகுதி விவசாய நிலங்களும் விவசாயிகளும் வாழ்ந்து வருகின்றனர். கடந்த பல வருடங்களாகக் காவிரியில் தண்ணீர் வராததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும், விவசாயிகள் சொல்ல முடியாத துயரத்திலும் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த தொடர் மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியதோடு மேட்டூர் அணையும் நிரம்பியது. இதையடுத்து டெல்டா மாவட்டப் பாசனத்துக்காக மேட்டூர் திறக்கப்பட்டது. அதன் பிறகு, கல்லணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது. மேலும், தொடர்ந்து நீர் வரத்து அதிகமாக வந்ததால் கொள்ளிடம் ஆற்றில் அதிமகான நீர் திறந்துவிடப்பட்டதில் 2 லட்சம் கன அடி நீர் கடலில் கலந்தது. தமிழக அரசு முறையாகத் தூர் வாரி நடவடிக்கை எடுக்காததால் தண்ணீர் வீணாகக் கடலில் கலந்ததோடு நெற்களஞ்சியம் என்றழைக்கபட்ட தஞ்சாவூரின் கடைமடைப் பகுதிக்குக்கூட தண்ணீர் செல்லாத துயரம் நடந்தது. இதற்காக விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் இன்று குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட விவசாயிகள் கடைமடைக்குத்  தண்ணீர் வராததைக் கண்டித்து அலுவலக வளாகத்தில் பேட்மின்டன் விளையாடி நூதன போரட்டம்  நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேசினோம், ``மேட்டூர் அணையில் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து 50 நாள்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை கடைமடைக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வராமல் வறண்டு கிடக்கிறது. இயற்கை அள்ளி கொடுத்த நீரை அணைத்து சேமிக்க தவறிவிட்டது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு. நிலைமை இப்படியிருக்க காவிரி பிரச்னையில் உரிமைகளை மீட்டெடுத்ததாகக் கூறி அ.தி.மு.க-வின் அரசுக்கு துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் மன்னார்குடியில் பாராட்டு விழா நடத்துகிறார்கள். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேட்மின்டன் விளையாட்டு விளையாடுகிறார். கடைமடை காய்ந்து கிடக்கிறது. அந்தப் பகுதிகளை இன்னும் வந்து பார்வையிடவில்லை. தண்ணீர் வருவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. விவசாயிகள் நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறார் முதல்வர். அவரை கண்டித்து பேட்மின்டன் விளையாடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டோம். மேலும், இன்னும் பல போராட்டங்களை நடத்த இருக்கிறோம்” என்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க