வெளியிடப்பட்ட நேரம்: 19:09 (14/09/2018)

கடைசி தொடர்பு:12:52 (15/09/2018)

நேற்று கொள்ளிடம்... இன்று முக்கொம்பு... நாளை மதுரை ஏ.வி பாலம்!? அதிகாரிகள் அலர்ட்

நேற்று கொள்ளிடம்...  இன்று முக்கொம்பு... நாளை மதுரை ஏ.வி பாலம்!? அதிகாரிகள் அலர்ட்

பிரசித்திபெற்ற மீனாட்சியம்மன் கோயில், தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம் என மதுரை மாநகரில் நிறைந்துள்ள பழம்பெருமைகளின் பட்டியல் மிக நீளம். ஆங்கிலேயர்களுடைய கட்டடங்களும் இந்த வரலாற்று மண்ணின்மீது பிரமாண்டமாய் நிற்கின்றன. அந்த வரிசையில், `பெரிய பாலம்’, `பழைய பாலம்’, `ஏ.வி பாலம்’ என்று காலங்காலமாய்ப் பல அடைமொழிகளோடு, மதுரை மாநகரின் அடையாளமாய் வைகை ஆற்றில் கால்பரப்பி நிற்கிறது, ஏ.வி.மேம்பாலம்!

ஆல்பர்ட் விக்டர் என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்ட காரணத்தினால், அவரது பெயரோடு விளங்கும் இந்தப் பாலம் 129 ஆண்டுகளாய் இயற்கைச் சீற்றங்கள், வாகனப்பாரங்கள் என அத்தனையையும் கடந்து இன்றும் மிகக் கம்பீரமாய் நிற்கின்றது. பாலத்தின் அழகுநயம்மிக்க வடிவமைப்பு, ஆங்கிலேயக் கட்டடக்கலையை எடுத்துக்காட்டுகிறது. மதுரை நகர் சாலைப்போக்குவரத்தின் அஸ்திவாரம் என இந்தப் பாலத்தைக் கூறமுடியும். நகர்ப்பகுதியில் வைகையின் வடகரையையும், தென்கரையையும் 10 மேம்பாலங்களும், 2 தரைப்பாலங்களும் இணைக்கின்றன. இவற்றுள் முதன்முதலாகக் கட்டப்பட்ட மிகப்பழைய மேம்பாலம், இந்த ஏ.வி பாலம். 14 பிரமாண்ட ஆர்ச்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாலத்தின் நீளம், 300 மீட்டர்!

மதுரை ஏவி பாலம்

1889 ம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட ஏ.வி பாலத்தின் அதிகபட்ச ஆயுள், நூறு ஆண்டுகள் மட்டுமே. அதன்படி ஆயுட்காலம் முடிந்து 29 ஆண்டுகள் ஆகியும், இன்னும் முழுமையான பராமரிப்புகள் ஏதுமின்றி அப்படியே இருக்கிறது. ஆர்ச்களிலும், பாலத்தின் மேற்புறங்களிலும் செடிகள் அதிகமாக வளர்வதால், பாலத்தில் எளிதாக விரிசல் ஏற்படுகிறது. தினமும் இந்தப் பாலத்தில் `விர்ர்’றென வாகனங்களில் பயணிக்கும் அரசு அதிகாரிகளின் கண்களுக்கு இவையெல்லாம் தெரிந்திருந்தும், கண்டும் காணாமல் கடந்து போய்விடுகின்றனர். காலையில் கடந்து செல்ல உதவிய பாலம், மாலையில் திரும்பும்போது இருக்குமா என்று பொதுமக்களுக்கு இருக்கும் அச்சம், அதிகாரிகளுக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை.

பாலத்தின் மையப்பகுதி சுவர்கள் பெயர்ந்து, உடைந்து சிதிலமடைந்து கிடக்கின்றன. கிழிந்த சட்டைகளுக்கு ஒட்டுப் போடுவதைப் போல ஆங்காங்கே சிறிதளவு பராமரிப்புப் பணிகள் செய்து, பாலச் சுவர்களில் பெயர்ந்து நிற்கும் கற்கள் கீழே விழுந்துவிடாதபடி, `பராமரிக்கின்றனர்’ அதிகாரிகள். சில மாதங்களுக்கு முன்பு, பாலத்தின் வடகரைப்பகுதிச் சுவர் முற்றிலும் சிதிலமடைந்து இடிந்ததைத் தொடர்ந்து, அவற்றை அகற்றிவிட்டு, புதிய சுவர் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளைச் செய்து முடித்தனர். அதன் பிறகு, பாலத்தை எவரும் கண்டுகொள்ளவில்லை. சுவர் இடிந்து விழுந்ததும் புதுப்பிக்கத் தொடங்கியதைப்போல, `மொத்தப் பாலத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டால்தான் திரும்பிப் பார்ப்போம்’ என்கிறார்களோ என்னவோ?

பாலம்

சமீபத்தில் திருச்சி கொள்ளிடம் பாலத்துக்கும், முக்கொம்பு அணைக்கும் ஏற்பட்ட கதியை தமிழகமே வேடிக்கை பார்த்தது. முன்னெச்சரிக்கையற்ற அரசாகத் திகழ்வதைக்கூட, `முதல்வருக்குத் தண்ணீர் ராசி’, `கண்பட்டதால் அணை உடைந்தது’ எனத் தன் போக்கில் பேசிச்செல்கின்றனர், அமைச்சர்கள். முக்கொம்பு சம்பவத்தை, ஒரு மோசமான அனுபவப் பாடமாக எடுத்துக்கொண்டு, தமிழகத்து அணைகளின், ஆற்றுப்பாலங்களின் உறுதித்தன்மையைப் பரிசோதிக்க வேண்டியது, இன்றைய அவசரத்தேவையாக உள்ளது.

மதுரையின் பழம்பெரும் அடையாளங்களுள் ஒன்றாக மிளிரும் ஏ.வி பாலத்துக்கும், முக்கொம்பு அணையின் கதி ஏற்பட்டுவிடக் கூடாது. பாலத்தின் உறுதித்தன்மையைப் பரிசோதித்து அதற்கேற்ற வகையில் பராமரிப்புப் பணிகளைச் செய்வதற்கு அரசுத் துறை அதிகாரிகள், முன்வரவேண்டும். வருடாவருடம் சித்திரைப் பெருந்திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை அரசு அதிகாரிகள், வி.ஐ.பி-க்கள் கண்டுகளிப்பதற்காகச் சிறப்பு ஏற்பாடுகள் இந்தப் பாலத்தில் செய்யப்படுவது வழக்கம். பாலத்தின் பராமரிப்புப் பணிகளை, பொதுமக்களின் பயன்பாட்டு நலனுக்காகச் செய்யாவிட்டாலும், திருவிழாவை பார்வையிடும் அரசு அதிகாரிகளின் `வி.ஐ.பி மாடம்’ என்ற அளவிலாவது சரிசெய்து புதுப்பிக்கலாமே, இந்த ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தை!


டிரெண்டிங் @ விகடன்