``வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்” - ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு நாகூர் தர்கா ஆதீனம் எதிர்ப்பு | we dont want Hydro Carbon Project, Nagur Dargah

வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (06/10/2018)

கடைசி தொடர்பு:07:08 (06/10/2018)

``வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்” - ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு நாகூர் தர்கா ஆதீனம் எதிர்ப்பு

Nagoor Khalifa

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியார் நிறுவனங்களோடு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளதற்கு நாகூர் ஆண்டவர் தர்கா பரம்பரை ஆதீனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று நாகூர் ஆண்டவர் தர்கா பரம்பரை ஆதீனமும், தர்கா தலைவருமான செய்யது முகமது கலிபா சாஹிப் தெரிவித்துள்ளார். 

 நாகூர் தர்கா ஆதீனம்


இதுபற்றி அவர் பேசுகையில், ``தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிறுவி 22 ஆண்டு காலமாக அப்பகுதி மக்களின் சுகாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் வேதாந்தா குழுமம் அழித்து வருவதாகப் புகார் எழுந்திருக்கிறது. இந்த நிலையில், அதே நிறுவனத்துக்கு தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்று பல்லாண்டு காலமாக விவசாயிகளும், தமிழக மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரசு விவசாயப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திணித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. டெல்டா மாவட்டங்களில் 12,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு சாகுபடி செய்ய மிகவும் உகந்த நிலம். இதுபோல் ஒரு வளமான பூமியை ஆசியா கண்டத்தில் வேறெங்கும் காணமுடியாது. தற்போது டெல்டா மாவட்டங்களில் சுமார் 28 லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மக்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது. இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை காவிரி டெல்டா பகுதியில் கொண்டு வந்து, விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தைக் கெடுத்துவிடக்கூடாது. அனைவருக்கும் பேராபத்தை விளைவிக்கும் இத்திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்” என்று கூறினார்.