வெளியிடப்பட்ட நேரம்: 00:15 (07/10/2018)

கடைசி தொடர்பு:00:15 (07/10/2018)

நாகையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

Radhakrishnan

நாகை மாவட்டத்திற்கான புயல் மற்றும் வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள சுகாதாரத் துறை செயலாளர் இராதாகிருஷ்ணன், இன்று நாகை மாவட்டத்தில் பல இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

ராதாகிருஷ்ணன்

நாகை மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கன மழையால் சீர்காழி அருகே அளக்குடியில் கொள்ளிடம் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டது.  இதனால் சில கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது.  இந்த உடைப்பு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.  அதனை இன்று நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் சுரேஷ்குமாருடன், ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.  அதன்பின், நல்லூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கொள்ளிடம் ஆற்றின் பாலம் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.  அப்போது பேசுகையில், “சென்னையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவருடன் இணைந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.  அதன்படி என்னை இம்மாவட்டத்திற்கு நியமித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்துள்ளேன்.  கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அரபிக்கடல் பகுதியில் ரெட் அலர்ட்டினால் கன மழை அதிகமாக இருக்கும்.  வடகிழக்குப் பருவமழை அக்டோபரின் தொடங்கி டிசம்பர் வரை பெய்ய இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இப்பணிக்கு அனைத்துத் துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார். 

நாகை ஆட்சித்தலைவர் சுரேஷ்குமார் கூறுகையில், “குழுவுக்குப் 10 பேர் வீதம் அனைத்துத் துறைகளையும் சேர்ந்த 240 அதிகாரிகள் 24 குழுக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  632 முகாம்களைப் பராமரிக்க 4500 முதல்நிலை பொறுப்பாளர்கள் கிராம அளவில் அமர்த்தப்பட்டுள்ளனர்.  முதல் முறையாகப் 2000 பேர் கால்நடைகள் பாதுகாப்பிற்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  நீச்சல் வீரர்கள், பாம்பு பிடிப்பவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.   படகுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  பொது மக்கள் எந்நேரமும் தொடர்புகொள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி மூலம் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சொல்லாம்” என்றார்.