வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (11/10/2018)

கடைசி தொடர்பு:13:05 (11/10/2018)

கருணாநிதி பெயரில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்பு இருக்கை!

'மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பெயரில் இருக்கை அமைக்க, புதுச்சேரி பல்கலைக்கழகம் ஒப்புதல் கொடுத்திருக்கிறது' என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பல்கலைக்கழகம்

”மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும், தி.மு.க-வின் தலைவருமான கருணாநிதியின் சிறப்பைப் போற்றும் வகையில், புதுச்சேரியில் அவருக்கு முழு உருவச் சிலை, காரைக்கால் புறவழிச் சாலை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்துக்கு அவரது பெயர் சூட்டப்படுவதோடு, புதுச்சேரி பல்கலைக்கழகத்திலும் அவரது பெயரில் இருக்கை அமைக்கப்படும்” என்று  முதல்வர் நாராயணசாமி அறிவித்ததோடு, அது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்துக்குக் கடிதமும் எழுதியிருந்தார். தற்போது, முதல்வரின் அந்தக் கோரிக்கைக்கு பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கருணாநிதி

இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமியின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், ஆறு முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தவரும், தி.மு.க-வின் தலைவருமான கருணாநிதியின் மறைவையொட்டி, அவரைச் சிறப்பிக்கும் வகையில் அவரது பெயரில் இருக்கை ஒன்றை அமைக்க வேண்டும்' என்று முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி பல்கலைக்கழகத்திடம் கேட்டுக்கொண்டார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பல்கலைக்கழக நிர்வாகம், ‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி இருக்கை’ என்ற பெயரில் சிறப்பு இருக்கை ஒன்றை அமைக்க ஒப்புதல் அளித்திருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏழை எளிய மாணவர்களும் கல்வி பயின்று முன்னேற வேண்டும் என்பதுதான் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் கனவும், எண்ணமுமாக இருந்தது. அதற்கு ஏற்றாற்போல, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் சிறப்பு இருக்கை ஒன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க